Monday 27 December 2010

கவியின் காதலி



யாரடி நீ எனக்கு?

எனை பார்த்து நீ கேட்கிறாய்.

ஆம்

உன் கன்னக்குழிக்குள்
என் எண்ணப்படகினில் வலம் வந்திருக்கிறேன்

உன் மின்னல் சிரிப்பினில்
எனை வண்ணப்புகைப்படம் பிடித்திருக்கிறேன்

உன் ஓரப்பார்வைக்கு
என் வீர பராக்கிரமம் காண்பித்திருக்கிறேன்

உன் துளிச் சிந்தனைக்கு
என் களி தீர இன்முகம் விரித்திருக்கிறேன்

உண்மைதான்
யாரடி நீ எனக்கு?

கல்லூரியில் நீயில்லா
வகுப்பறை மன்றம்
எனக்கு அலையில்லா
கடற்கரையாய் தோன்றும்

என்னை பாராமல் நீ
சிரம் தாழ்த்தும் தருணங்கள்
விண் மகள் மழையினை
மண் வீழ்த்தும் மரணங்கள்

உண்மைதான்.
யாரடி நீ எனக்கு?

என் கிறுக்கல்கள் காகிதங்களில் காயங்களாய்
என் உளறல்கள் தத்துவங்களின் சாயல்களாய்
மாறியது உன்னால்

உண்மைதான்
யாரடி நீ எனக்கு?

உந்தன் நினைவுகள்
என் மூளையின் அதீத ரேகை பதிவுகள்

நீ பேசிய வார்த்தைகள்
என் தனிமைச் சிறைத் தோழர்கள்

எல்லாம் உண்மைதான்.

ஆனால் சற்று நினைத்து பார்

உன் அன்பிலே கொள்ளை போனவன் நான்
களவாண்டவள் நீ கூற வேண்டுமடி

யாரடி நான் உனக்கு?

Sunday 26 December 2010

சாதியை கேட்டா காதலும் தோன்றும்?

"பூமியை கேட்டா வான்முகில் தூவும்
பூக்களை கேட்டா வண்டுகள் பாடும்
வீதியை கேட்டா தென்றலும் வீசும்
சாதியை கேட்டா காதலும் தோன்றும்"

கவிஞர் வைரமுத்துவின் இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இதை சற்று facebook ல் எழுதி நண்பர்களின் கவனத்தை பெறலாம் என்று நேற்று அப்படி செய்து இருந்தேன். நினைத்து போலவே நான் காதலில் விழுந்து விட்டதாக நட்பு வட்டம் சற்று பரபரத்தது. ஆனால் அதில் இரண்டு நண்பர்கள் இந்த பாடலின் சாராம்சத்தை எடுத்து கொண்டு விவாதித்தது என்னை மீண்டும் ஒரு முறை இந்த விஷயத்தை பற்றி யோசிக்க வைத்தது.

சாதி

இந்த இரண்டெழுத்து நோய் கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்து முன் தோன்றிய ஒன்றோ என்னும் அளவு வேர்விட்டு வளர்ந்து இருக்கிறது. ஒருவன் மதம் மாறலாம், நாடு மாறலாம், ஏன் பாலினம் கூட மாறலாம் அனால் பாழாய் போன சாதி மாற முடியாது. எத்தனை சாதிகள் அந்த சாதிகளுள் எத்தனை பிரிவுகள். அடேயப்பா. மனிதர்களை எப்படி எல்லாம் கூறு போட்டிருக்கிறார்கள். கலப்பு திருமணம் சினிமாக்களில் மட்டுமே சாத்தியமாக இருக்கிறது. மற்றபடி நிஜத்தில் சாதீயமே மிஞ்சுகிறது. சாதியை ஒழிக்க புறப்பட்டோர் ஏன் "நான் எந்த சாதியையும் சார்ந்தவன் இல்லை" என்று கூற வழிமுறைகள் ஏற்படுத்தவில்லை? அப்படி கூறுபவர்களுக்கு ஏன் முன்னுரிமை அளிக்க கூடாது? அப்படி செய்தால் சாதீயம் ஒழிய வழி பிறக்காதா? இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் வரை "சாதியை கேட்காவிடில் காதல் தோன்றாமல் இருப்பதே நன்று"

அந்த குண்டு பையன்

அந்த குண்டு பையனா? குண்டா இருப்பார் இல்ல அவரு.
மூன்று வருடங்களுக்கு முன்பு வரை இது தான் எனது அடையாளம். இதென்ன பெரிய விஷயம் எத்தன பேர் குண்டா இருக்காங்கனு நீங்க கேட்கலாம். அதுல ஒரு விஷயம் இருக்கு. வஞ்சகமில்லாம சாப்பிடுறோம், வெள்ளை மனசு, அதனால சாப்பிடுறது ஒடம்புல ஒட்டுது டயலாக் பேசிட்டு திரியறவங்க ஒரு டைப். ஒடம்ப பத்தி எவனாவது பேசி அவமான படுத்திடுவானோனு பயப்படுறவங்க இன்னொரு டைப். நான் ரெண்டாவது டைப் ஆளு. ஆனா அப்படி வருத்தப்பட்டும் கூட ஒடம்ப கொறைக்க பெருசா (அதாவது உண்மையிலயே பெருசா) எதுவுமே அந்த 23 வருஷத்துல செஞ்சதில்ல. அது ஏன்னு புரிஞ்சதுமில்ல.
பிரச்சனை துணி எடுக்கறதுல இருந்து ஆரம்பிக்கும்.
அப்பாவுக்கு ரெடிமேட் துணி எடுக்க பிடிக்காது. டெயிலர் கிட்ட குடுக்க துணி எடுத்துட்டு போனா அவர் அளந்து பாத்துட்டு "என்ன ணா ரெண்டே கால் மீட்டர் எடுத்திருக்கீங்க ரெண்டரை வேணும்ணா" ம்பார். சரி என்னைக்காவது ரெடிமேட் எடுக்கலாம்னு போனா நம்மள பாத்தா உடனே டேப்ப கொண்டு வந்து இடுப்பளவு எடுத்து பாத்துட்டு "சைஸ் 40 ங்க நம்ம கிட்ட இல்லை"ன்னு ஒரு வெடிய வீசுவாங்க.
அடுத்து விளையாட்டு.
கிரிக்கெட் விளையாட்டுனா உயிர். விளையாட போனா ஊசி பட்டாசுங்களுக்கு நடுவுல லட்சுமி வெடி மாதிரி நம்மள பாத்த உடனே முடிவு பண்ணிடுவாங்க. பால் வராத எடத்துல பீல்டிங், பேட்டிங்க்னா பை ரன்னர்னு ஒரு அலப்பறை. புட்பால் வெளையாட போன எங்க நிக்க வெச்சு இருப்பாங்க நீங்க இந்நேரம் யூகிச்சிருப்பீங்க. கரெக்ட். கோல் கீப்பர் தான். பெருசா இருக்கமில்ல. அதனால கோல் தடுத்திருவேன்னு ஒரு அபார நம்பிக்கை.
 இப்படி நம்மள சுத்தி அடிக்கடி காமெடி நடக்கும்.
அடுத்து டவுன் பஸ்சுல. நம்ம பஸ்சுல பாத்தீங்க னா சில சீட்டுங்களுக்கு பக்கத்துல கம்பி இருக்கும். அந்த மாதிரி சீட்ல இடம் கெடைச்சாலும் நான் உக்காந்தது இல்ல. ஏன்னா அதுல எனக்கு உக்கார முடிஞ்சுது இல்ல. கம்பி இல்லாத சீட்லயே பாதி சீட்ல (இது நம்ம சீட்) தான் உக்கார முடியும். அப்புறம் எங்க.

சொந்தக்காரங்க அட்வைஸ், பாக்குறவங்க எல்லாம் அட்வைஸ் பண்ணினாலும் கூட - அட இவங்கெல்லாம் எப்பவுமே இப்படி தான் சொல்லிக்கிட்டு இருப்பாங்க போங்க பாஸ் அப்படின்னு அதையெல்லாம் பெருசா கண்டுக்கிட்டது இல்ல. அட வெயிட் கூட எவ்வளவுன்னு பாத்ததில்லைனா பாருங்க. ஆனா காலேஜ் வந்ததுக்கப்புறம் ஒரு மெடிக்கல் செக்கப் பண்ணும்போது தான் வரலாற்றில் முதன் முறையாக நம்ம எடை என்னனு தெரிய வந்துச்சு. 94 கிலோ. அப்படியே ஷாக் ஆயிட்டேன். அப்பதான் கொஞ்சம் சுர்னு ஒறச்சுது. ஆனா அப்பவும் பெருசா எதுவும் பண்ணல.

வயசுல சின்னவன்னாலும் சைஸ்ல பெரியவனா இருந்ததால என்ன ஏதோ கல்யாணம் ஆகி ரெண்டு பெத்தவன் மாதிரி பாத்தவங்களும் உண்டு. அத நேரடியா கேட்டவங்களும் உண்டு. என்ன செய்ய அவங்களையும் தப்பு சொல்ல முடியாது. நம்ம தோற்றம் அப்படி.
இப்படி கிண்டல் கேலி அவமானம்னு பல விஷயங்கள பாத்துட்டு 2008 ல தான் ஒரு ஞானோதயம் வந்து ஜிம் போய் ஒடம்ப கொறச்சு இப்போ 72 கிலோவுல நிக்குது. ஆனா அப்போ என்ன குண்டுன்னு சொன்னவங்க இப்போ இளைச்சவுடனே பிளேட்ட மாத்தி நீ குண்டா இருந்தா தான் நல்லா இருப்பனு சொல்றது என்னங்க நியாயம்? :-(

Saturday 25 December 2010

முதல் படி

மனதில் தோன்றும் எண்ணம் ஒரு புகைப்படத் தருணம் போன்றது. எல்லா நேரங்களிலும் அது ஒரே வகையான தோற்றம் தருவதில்லை. அதை அவ்வப்போது அழகாகப் பதிவு செய்து பகிர்ந்து கொள்வது ஒரு அலாதியான சுகம். என் எண்ணங்களைப் பதிவு செய்யவும், தமிழில் சிந்திக்கவும், பகிர்ந்து கொள்ளவும் ஒரு வெளி தேவைப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று அதற்க்கான முதல் படியில் கால் வைக்கிறேன்.