Friday 4 November 2011

அன்பின் அவள்

உன் கற்றை சடையின்
ஒற்றை முடி
என்னை  வருட
விழித்தெழுகிறேன்

சன்னலின் ஊடே
நம் அந்தரங்கம்
எட்டிப்பார்க்கும் சூரியனின்
வெப்பம் பட்டு
மலர்ந்த உன் விழிப்பூக்களில்
நேற்றைய ஊடலின்
உறைந்த கண்ணீர்த் துளிகள்.

நெஞ்சம் கனக்கின்றது.
கோர்வையாக இல்லாமல்
உன் நினைவுகளை
உளறுகிறது மனம்


நீ
இட்டால் மட்டும்
ஒட்டாமல் வரும்
தோசை 

என்
குரலை
உயர்த்தினாலே
வியர்த்து விடும்
உன் கண்கள்

என்
தடுமாறும்
இதழ்களின் தயக்கத்தை
விடுமாறு கெஞ்சும்
உன்
மொழிகள்

என்
உடைச் சுருக்கங்கள்
உன்
முக வருத்தங்கள்

"அய்"
என்ற உன்
சிறு வியப்பில்
நான் கண்ட
உலக அதிசயங்கள்

என் கையை
இறுக பற்றியிருக்கும்
உன் கைகளில்
வியர்வைத் துளிகள்.
விடுவித்துக்கொள்ள
நான் கொண்ட முயற்சியில்
உன் கனவு கலைய
அரை நித்திரையில்
மீண்டும்
என் கையை
மார்புடன் இழுத்துக்கொண்டு
"போகாதீங்க பா"
என்னும்
உந்தன் முன்பு
என்
ஆழ்மன நியாயங்கள்
மண்டியிடுகின்றன 

மனைவி
என்றால்
ஆணாதிக்கம் தெறிக்கிறது

தாய்
என்றால்
எதிர்பார்ப்பு துளிர்க்கிறது

தோழி
என்று
தோளில் சாய்ந்து கொள்ள
மனம் விழைகிறது

திரைச்சீலையை 
இழுத்து
இரவாக்கி 
உன்னை
கட்டிக்கொண்டு
மீண்டும்
கண் அயர்கிறேன்
நான்.........


Sunday 20 March 2011

Saturday 19 March 2011

பொய்யுரைத்தல்












பாதகம் இருப்பதில்லை.
எனக்குச்
சாதகம் என்பதற்குமில்லை.
காரணமின்றி கூறுவதும் இல்லை.

என்ன செய்ய?
காணச் சகிக்கவில்லையே
இந்தப் பொய்களைக் 
காணாமல்
செத்து விழும்
மெய்களை........


Sunday 13 March 2011

காதல் கருவறை

ஆயிரம் வாசகங்கள்
உனக்காய்
எனது மனவறையில்
உருவாகின்றன

அவற்றை
வெறும் கருக்களாய்
வெளிக்கொணர முயல்கிறாய்

பொறுமை கொள் பெண்ணே!
உணர்வுள்ள 
காதல் குழந்தைகளாய்
பிரசவித்துத் தருகிறேன்....



நாட்குறிப்பு - மார்ச் 12

நாட்குறிப்பு எழுத வலைப்பதிவை உபயோகப்படுத்துவதா என்று தோன்றியபோதிலும், எதை எழுதுவது என்று தெரியாமல் எதையாவது எழுதிவிட வேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்டதால் இன்றையக் குறிப்புகள் பின்வருமாறு.

வரலாற்றில் முக்கியமானதொரு தினம் இன்று. இதை பதிவு செய்யாவிடில் நான் தேசத்திரோகியாக கருதப்படும் அபாயம் இருக்கிறது. ஆகையால் கிரிக்கட்டைப் பற்றி முதலில் பேசி விடுகிறேன். இன்றைய ஆட்டத்தைப் பற்றி சுருக்கமாக சொல்லவேண்டுமானால் "ஆகா என்னமா ஆடுறாங்க" என்று சிலாகித்து, "நல்லாத்தான போயிக்கிட்டிருந்தது" என்று பரிதவித்து, "ச்சே. இவனுங்க ஆரம்பமெல்லாம் அமர்க்களமா இருந்தும் பினிஷிங் சரியில்லையே" என்ற வருத்தத்துடன் முடிந்தது.

இன்று கோகுலுடனும் ஜித்துவுடனும் வெப் காமரா மூலம் அளவளாவியதில் பெருமகிழ்ச்சி. மூவரும் இவ்வாறு பேசி வெகுநாட்கள் ஆகிவிட்டிருந்தது. சிரித்து சிரித்து வயிறும் வலித்தது. இன்பமான வலி. கடந்த, நிகழ், வருங்காலம் என்று அனைத்தையும் பேசி, கிண்டல் கேலி என விலா நோக சிரித்து, அப்பப்பா பத்து வருடங்கள் பின்னோக்கி வாழ்ந்த அனுபவம். கோகுல் வீட்டு மாடி, ஜித்துவின் அறை, என் வீட்டு பலகணியில் பேசிய பேச்சுக்கள், மகாராணி அவின்யு மைதானத்தில் நாங்கள் மூவர் விளையாடிய கிரிக்கட், பெங்களூர் ஹொசா ரோடு வீடு, பனசங்கரி வீட்டு நாட்கள் என்று அனைத்தும் திரும்ப ஒரு முறை மனதின் விளிம்புகளை தழுவிச்சென்றது போன்றதொரு அனுபவம். ஜித்துவின் காலை வாருவது, பழைய நினைவுகளை கிளறுவது, புதிய உறவுகளை இணைப்பது என்று காலம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருந்தோம். காலம் ஆகஆக பதமாகும் மதுவைப்போல நட்பும் பலப்பட்டுகொண்டே செல்கிறது. அந்த காலங்கள் திரும்ப கிடைக்காதா என்று மனம் ஏங்குகிறது. எப்படி இணைந்தோம்? எப்படி வளர்ந்த நட்பு? தெரியவில்லை. பிணக்குகளைத் தாண்டி இன்றும் வளர்கிறது. இன்னும் வளர்ப்போம். 

பள்ளிப்பருவ நண்பனுடன் இன்று இரவு உணவு. இங்குள்ள பல்கலையில் உளவியல் துறையில் படிக்கிறான். அவனுடன் நடந்த உரையாடல் இன்றைய நாளை நிறைவு செய்தது. விஷயம் ஒன்றுமில்லை. எங்கெங்கோ சென்ற பேச்சு, திருமணம் குறித்து திரும்பியது. திருமண வயதொத்தவர்கள் என்பதால் வியப்பு ஒன்றும் இல்லை. பெண்ணை நேரில் சந்தித்து பேசாமல் ஒப்புக்கொள்வது சரியான விஷயம் அல்ல என்பது அவனது கருத்து. நமது அலைவரிசைக்கு ஒரு பெண் ஒற்றுப்போவாளா இல்லையா என்பதை அவளை சந்தித்து பேசி பழகிய பின்புதான் தெரிந்துகொள்ள முடியும் என்றான் அவன். உண்மைதான். இது காதலித்து திருமணம் புரியும் பட்சத்தில் சாத்தியமான விஷயம். அனால் நம்மால் அமைக்கப்படுகின்ற ie. arranged marriage (பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணம் என்ற பெயரில் எனக்கு உடன்பாடு இல்லை) திருமணத்தில் இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்ற உரையாடல் நீண்டது. 
என்னைப் பொறுத்தவரையில் நம்மால் அமைக்கப்படுகின்ற திருமணத்தில் அதிகபட்சம் பெண்ணிடம் அரைமணியில் இருந்து ஒரு மணி வரை பேசலாம். பிடித்திருக்கிறதா என்று கேட்கலாம். நேர்காணல் போன்று கேள்விகளை விடுக்கலாம். பதில்களை பெறலாம். எல்லாம் சரி. அதன் மூலம் தேர்வு செய்யப்படுகின்ற பெண்ணிடம் வருங்காலத்தில் எந்த பிரச்சனையும் வராது என்பதில் என்ன நிச்சயம். ஏன், வருடக்கணக்கில் காதலித்து மனமுடிப்பவர்களுக்கு சண்டையே வருவதில்லையா? ஆக. ஒரு பெண்ணை நேர்காணல் செய்து வேலைக்கு ஆள் எடுப்பது போல் திருமணம் முடிப்பதில் ஒரு பலனும் இல்லை. எதிர்பார்ப்பு. நம் எதிர்பார்ப்பு மிகுந்த குறிப்புடனும், வரையறுக்கப்பட்டதாகவும் இருக்கும் பட்சத்தில் சிக்கல் என்பது வந்தே தீரும். இது எந்த விதமான திருமணத்திற்கும் பொருந்தும். திறந்த மனதுடன் விட்டுக்கொடுத்து செல்கின்ற மனப்பக்குவம் இருக்குமானால் ஒரு பெண்ணை அவள் சார்ந்த குடும்பத்தின் அழகைக் கொண்டே ஒப்புக்கொள்ள முடியும். எதிர்பார்ப்புக்கு தகுந்த பெண்ணை மணமுடிப்பது என்பது ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளுக்கு மத்தியில் நம்மை கவர்ந்த வீட்டினை வாங்குவது போன்றது. திறந்த மனதுடன் மணமுடிப்பதென்பது   நமக்கு விருப்பமான ஒரு வீட்டை நாமாக கட்டிக்கொள்வதைப் போன்றது.
இதை என் உளவியல்கார நண்பனிடம் கூறி முடிக்கும் பொழுது அவன் அரைமனதுடன் தலையசைத்து விட்டுச் சென்றான். அவனை தத்துவார்த்தமாக குழப்பிய சந்தோஷத்துடன் நான் வீடு வந்து சேர்ந்தேன்.

Thursday 3 March 2011

இருளில் நழுவிய நிழல்

வானம் மேகமூட்டத்துடன் உறுமிக் கொண்டிருந்தது. பெரிய வீட்டின் திண்ணைக் கட்டிலில் அமர்ந்து தென்னை ஓலைப் பந்தலின் விலகிய தடுக்குகளின் ஊடே வானத்தைப் பார்த்து அமர்ந்திருந்தார் கருப்புசாமி தாத்தா. மழை வரும் அறிகுறி தெரிந்ததால் கொடியில் உலர்த்தியிருந்தத் துணிகளை வேகவேகமாக எடுத்து தன் தோளில் போட்டுக்கொண்டிருந்தாள் சித்ரா. 

"தே அம்மிணி அந்தா ஒரு துணி கெடக்குது பார்றா" என்று மருமகளை நோக்கி கூவலொன்றை விடுத்தார். 
பதில் கிடைத்தார் போல தோன்றவில்லை அவருக்கு. அப்படியே பதிலளித்திருந்தாலும் தனக்கு கேட்டிருக்காது என்றும் தோன்றியது அவருக்கு. நீண்ட நாட்களாகவே அவருக்கு அவ்வளவாக காது கேட்பதில்லை. அவருக்கு உடலில் வலுவிருந்த மட்டும் அவருக்கு புரிவதற்காக சுற்றியிருந்தவர்கள் சற்று உரக்க பேசவும் சைகையால் தெளிவுபடுத்தவும் சிரத்தை எடுத்துக்கொண்டனர். வலது கால் நரம்பை தேவையற்று வளர்ந்த எலும்பு ஒன்று அழுத்தி அவரை நிற்கவோ நடக்கவோ முடியாமல் படுக்கையில் தள்ளியதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அந்த சிரத்தையை அவர்கள் குறைத்துக் கொண்டனர். செல்லம்மா பாட்டி அண்டை வீட்டு சாந்தியுடன் பழமை பேசுவதெல்லாம் இப்பொழுது அவருக்கு ஊமை படம் போலத்தான் தெரிகிறது.

அவ்வப்போது பொறுமை இழந்து "இதா டேய் என்ன டா பேசிக்கிறீங்க" என்று கேட்டும் விடுவார்.

செல்லம்மா பாட்டியும் "ஒன்னுமில்ல" என்று ஒப்புக்கு இதில் பாதி அதில் பாதி என்று அரைகுறையாக எதையாவது கூறிவிட்டு மீதியை அவர் அனுமானத்திற்கு விட்டு விடுவாள். அவரும் ஏதோ இதையாவது சொன்னாளே என்று பேசாமல் இருந்து விடுவார்.

மிகவும் சிரமப்படுகிறாரே என்று அவரது மகன்களும் காது கேட்பதற்கான மிஷின் ஒன்றை வாங்கித்தான் கொடுத்தார்கள். ஆனால் அதுவும் சிறிது நாள் கழித்து அதன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டதற்கு பிறகு அந்த அமைதியான உலகம் தான் அவருக்கென்றானது.
அவர் கூறிய திசையில் சென்று கீழே கிடந்த துணியை எடுத்து கொண்டு சித்ரா அவள் குடியிருந்த போர்ஷனுக்குள் புகுந்து கதவை தாளிட்டாள். அவளாகவே எடுத்தாளா இல்லை தான் கூறி எடுத்தாளா தெரியவில்லை. ஆகமொத்தம் எடுத்துக் கொண்டு விட்டாள் என்று அமைதி அடைந்தார். அனால் அவர் மனம் சிறிது நேரமாகவே அமைதியாக இல்லை. மழைமேகம் போல அவர் மனமும் கறுவிக்கொண்டு தான் இருந்தது. காரணம் இல்லாமல் இல்லை. சற்று உடலை நகர்த்தி கதவின் வழியே எட்டிப்பார்த்தார். செல்லம்மா பாட்டியை அவர் கண்கள் தேடின. அவள் அங்கு இல்லை. 
"ஹ்ம்ம். எப்படி இருப்பா" என்று நினைத்துக் கொண்டார். மனது நிலையில்லாமல் தவித்தது. தன் நிலையை நினைத்து வருத்தம் கொண்டார்.

வாசலில் யாரோ ஒரு பெண்ணுருவம் செருப்பை கழற்றி வைப்பது தெரிந்தது. கூர்ந்து கவனித்தார்.
"அப்பா என்ன இங்க உக்காந்துட்டீங்க"
"அடே சின்னக்கண்ணு. வா இப்பத்தான் வேலை முடிஞ்சு வர்றியா?"
"ஆமா பா. நீங்க ஏன் இங்க உக்காந்துட்டீங்க. லைட்டு கூட போடாம?"
"என்ன பண்றது சாமி. இந்த காலு மட்டும் நல்லா இருந்தா நான் இப்படி உக்காருவனா. நடக்க முடிய மாட்டேங்குதே"
"காலு வலிக்குதா பா"
"வலி இல்ல சாமி. குடைச்சலு. நிக்க முடியல. நடக்க முடியல. அதேன் அங்க உக்கார்ற? இவடத்தாளைக்கு வா"
"சரி சரி வரேன். நீங்க சொல்லுங்க" உரக்க பேச வேண்டி இருந்தது.
"என்னத்த சொல்றது கண்ணு. ஒன்னுஞ்சரியில்ல" குரல் கம்மியது அவருக்கு.
"ஏன் ப்பா என்ன சரியில்ல"
"ஒன்னும் சரியில்ல அதான் சொல்லுவேன். கெடையில விழுந்துட்டா அவளோதான. ஏதாவது பாக்குறீங்களா செய்யுறீங்களா. போடா சாமி"
"இப்போ என்ன நடந்துருச்சுனு கவலைப்படுறீங்க? அம்மா எங்க?"
"எங்கியோ போயிட்டா"
"எங்கியோ போயிட்டாளா? எங்க"
"எங்க. வடக்கால சின்னத்தாயி வூட்டுக்கு போயிருப்பா"
"ஏன் சண்டையா?"
அவருக்கு கேட்கவில்லை. தரையை வெறித்து பார்த்து அமர்ந்திருந்தார்.
மழை லேசாக தூறல் விட ஆரம்பித்திருந்தது. பேச்சரவம் கேட்டு கதவை திறந்து வெளியில் வந்தாள் சித்ரா. 
"வாங்க அண்ணி. நல்லா இருக்கீங்களா? அண்ணன் எப்படி இருக்காருங்க?"
"நல்லா இருக்கோம். தம்பி எங்க?"
"நைட் ஷிப்டுக்கு போகோனுமுங்க. அதான் தூங்கறாருங்க"
"சரி சரி"
"இருங்க காப்பி வெச்சுட்டு வரேன்" என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள். 
மழை சற்று வலுப்பெற ஆரம்பித்தது. தலையில் கையை வைத்து மழைக்கு மறைத்துக்கொண்டே விடுவிடுவென நடந்து வந்தாள் செல்லம்மா பாட்டி.
"கண்ணு. நல்லா இருக்கியா? எப்ப வந்த?"
"இப்ப தான் மா வந்தேன். நீங்க எங்க போனீங்க?"
"சும்மா சின்னத்தாயி ஊட்டு வரைக்கும் போயிட்டு வந்தேன்"
"அப்பன தனியா விட்டுட்டு நீங்க பாட்டுக்கு போறீங்க?"
"அப்பனுக்குத் தான் நான் வேண்டாமா மா. உங்க வூட்டுல கொஞ்ச நாளு. அண்ணன் வீட்டுல கொஞ்ச நாளுன்னு இருந்து காலத்த கழிச்சுக்க போகுதாமா?"
"என்ன மா சொல்றீங்க"
"அப்பனையே கேளு. சாயந்தரத்துல இருந்து சீராடிட்டு உக்கார்ந்திருக்குது"
இவர்கள் சம்பாஷனை புரியாமல் இருவர் வாயையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார்.
"என்னப்பா? அம்மா என்னவோ சொல்லுது?"
"என்ன சொல்றா?"
"அம்மா வேண்டாம்னு சொல்றீங்களாமா?"
"ஆமா"
"ஏன் அப்படி"
"அவளுக்குத் தான் நான் இருக்கறது சங்கடமா இருக்குது. எனக்கு சோறாக்கிப் போடவும் தண்ணி வாத்துவிடவும்னு ரொம்ப சிரமப்படுறதா சொல்றா"
"இப்படி சொன்னா எப்படி" செல்லம்மா பாட்டி அதட்டினாள்.
"இதா நீ பேசாம இரு" மனதில் திரண்ட கோபம் தன் இயலாமை தொட்டு கண்ணீராக உருவெடுத்தது.
"நான் இருந்தா எல்லாருக்கும் சிரமம். இந்த உசிரும் போக மாட்டேங்குது. நான் என்ன செய்வேன்" பெருங்குரலெடுத்து சிறுபிள்ளை போன்று அழலானார். 
இருவரும் என்ன செய்வதென்று அறியாமல் செவ்வனே அவர் அழட்டும் என்று அமர்ந்திருந்தனர்.
மழை ஜோராக பெய்து கொண்டிருந்தது.
"நடக்க முடிய மாட்டேன்குது. ஒடம்புல வலுவில்ல. காது செரியா கேக்க மாட்டேங்குது. கண்ணு பார்வை மங்கிட்டே போகுது. ஒக்காந்தா ஒக்காந்த கெட. படுத்தா படுத்த கெட. அம்மா மதிக்க மாட்டேங்குறா. எதுக்கெடுத்தாலும் திட்டறா"
"இப்போ என்ன திட்டிட்டாங்கன்னு இப்போ இப்படி ஒப்பாரி வெக்குறீங்க?"
"நீ பேசாம இருன்னு சொன்னேன். ஏதாவது பேசுநீன்னா பாரு அப்புறம்" என்று மனைவியை நோக்கி கர்ஜித்தார்.
"ஆனாட்டி நீங்களே பேசுங்க. வெகு அழகுதான் போங்க"
"இப்போ என்னப்பா நடந்துருச்சுனு அழுகுறீங்க?"
"நடக்க முடிய மாட்டேங்குது காது கேக்க மாட்டேங்குது. ராத்திரி காலு கொடச்சலு. தூக்கம் வரமாட்டேங்குது. அம்மாள கூப்பிட்டு தைலம் தேச்சு விட சொன்னா ஆத்தரப்படுறா"
"ஏங்கண்ணு. ராத்தி பூரா தூக்கம் வராம பேசிக்கிட்டே இருக்குது. என்னையும் தூங்க விடுறதில்ல. பகல் பூரா வேலை செஞ்சுட்டு மனுஷன் கண்ணு அசரலாம்னா முடியறதில்ல. எனக்குன்னா கஷ்டமா இருக்காதா"
"என்னம்மா பண்றது அப்பனுக்கும் முடியாம தான கஷ்டப்படுது"
"பாரு கண்ணு. மத்தியானம் தூக்கத்துல தெரியாம நனச்சுட்டேன். அது வர்றது கூடவா ஒனத்தி இல்லன்னு திட்டுறா. தெரிஞ்சே நான் செய்வனா?" கைக்குட்டையால் மூக்கை சிந்தியபடி அழுகையை தொடர்ந்தார்.
"ஏம்மா தெரிஞ்சா பண்ணும் அப்பன். அதுக்கு போய் ஏம்மா சங்கடப்படுறீங்க" அம்மாவின் சிரமம் தெரிந்தும் அதை வெளிக்காட்டாமல் அப்பாவுக்காக பரிவு காட்டினாள் மகள்.
"சங்கடம் என்ன கண்ணு சங்கடம். என்கிட்டே சொல்லி இருந்தா நான் வழி பண்ணி இருப்பனில்லன்னு சொன்னேன். இது ஒரு குத்தம்னு அப்பிருந்து ஒரே ஓரியாட்டம்"
"என்ன உன்கூட கூட்டிட்டு போயிரு கண்ணு" கண்ணை துடைத்து கொண்டு தீர்க்கமாய் கூறினார் தாத்தன்.
"அம்மா?"
"அவ இங்கயே இருக்கட்டும். என்ன மட்டும் கூட்டிட்டு போ."
"ஒன்னும் இல்லப்பா. அம்மா இனி நீங்க சொல்றமாதிரி நடக்க சொல்றேன் இருங்க"
"இல்ல கண்ணு. இனி ஒன்னும் செரிப்பட்டு வராது. நீ இல்லாட்டி என்ன அண்ணன் வீட்ல விட்டுரு"
"எங்க வீட்டுக்கு வந்தா இருந்துக்குவீங்களா? திரும்ப கொண்டு வந்து விடச் சொல்லி சொல்லக் கூடாது"
"இல்ல சொல்ல மாட்டேன்"
சித்ரா காப்பி கொண்டு வந்தாள்.
"இந்தாங்க அண்ணி"
"மாமா இந்தாங்க. அத்தை இந்தாங்க"
"எனக்கு அரை கெளாசு குடு."
"அட குடீங்கப் பா"
மகள் சொல்லை தட்டாது வாங்கிக் குடித்தார்.
"மாமா என்ன சொல்றாருங்க?" அவருக்கு கேட்காதவாறு விசாரித்தாள்.
"என்ன சொல்றாரு. அதே பழைய கத தான். அம்மா சொன்ன கேக்க மாட்டீங்குறா. அதனால எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறதாமா"
"ஏங்கண்ணி நீங்க வேற. அத்தைக்கு என்ன சிரமம் தெரியுங்களா. படுத்த கிடையிலயே எல்லாமேங்க அண்ணி. அத வழிச்சு தொடச்சு சுத்தம் பண்ணி குளிச்சு விட்டு துணி தொவச்சு போட்டுன்னு இந்த வயசுல ஆன வரைக்கும் பாக்குறாங்க. அவங்கள போய் கோவிச்சுகிட்டா என்னங்க அண்ணி பண்றது"
"அட. எனக்கும் தெரியுது. சொன்னா கேக்க மாட்டேங்குறாரு. புரிஞ்சுக்கறதில்லை. என்ன பண்றது"
நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டே காப்பியை குடித்து முடித்திருந்தனர். மழையும் வேகம் குறைந்து மீண்டும் தூறிக்கொண்டிருந்தது.

"சரிம்மா நான் கெளம்பறேன். அவரு வர்ற நேரம் ஆச்சு. என்னப்பா என்கூட வரீங்களா? துணி மாத்துங்க போலாம்" ஒப்புக்குத்தான் கேட்டாள்.

"எங்க? உங்க வீட்டுக்கு கூப்பிடுறியா? இல்ல சாமி அங்க வந்தா சரிப்பட்டு வராது. எனக்கு இங்க தான் சரி. இன்னும் என்ன சாமி கொஞ்ச நாளு. அம்மா இருக்கறா என்னப் பாத்துக்கறதுக்கு. அவளும் கெடையில உழுகாம இருந்தாப் போதும். அம்மானன்காட்டிக்கு இவளோ தூரம் என்னப் பாத்துக்கறா. உங்க வீட்டுக்கு வந்தா நீ வேலைக்கு போயிருவ. அண்ணன் வீட்டுக்கு போனாலும் சரியா வராது. நீ போ சாமி. அவீய வர்ற நேரம் ஆச்சுல்ல" என்று மனம் தெளிந்தவராய்ப் பேசினார். 
"ஆங். இப்படி சொன்னா எப்படி இருக்கு. அத விட்டுட்டு. அம்மா கேட்டுகிட்டீங்களா? அப்பன நல்லாப் பாத்துக்கங்க"
"நான் பாத்துக்கறேன் சாமி. நீ பத்தரமா போயிட்டு வா"
"சரிம்மா. வரட்டா. சரிப்பா நான் போயிட்டு வரட்டுமா? ஒடம்ப பாத்துக்குங்க"
"சரி சாமி. நீ பாத்து போயிட்டு வா" என்று மகளை வழியனுப்பினார்.

இப்பொழுது மழை நின்று போய் வானம் வெளுத்திருந்தது.




Wednesday 2 March 2011

எனது பக்கங்களில் கிறுக்கியவர்கள் - ரங்கநாதன் அங்கிள்

அந்தச் சிறுவனுக்கு ஆறு வயது இருக்கும். அவனும் அவர்களும் செல்ல வேண்டிய பேருந்தில் இடம் பிடிக்க மக்கள்க்கூட்டம் அலைமோதுகிறது. சட்டென்று இருகரங்கள் அவனை உயர்த்திப்பிடித்து பேருந்தின் ஜன்னல் வழியாக சீட்டில் அமரவைக்கிறது. அந்தச் சிறுவன் நான். அந்த கரங்களுக்கு சொந்தக்காரர் ரங்கநாதன் அங்கிள். அந்தக் கைகளின் அண்மையை நான் ஏனோ இன்று உணர்ந்தேன். என்னை மறந்து எழுதிக்கொண்டும் இருக்கிறேன்.

மெலிந்த தேகம், சட்டையில்லா திறந்த மார்புக்கும் வயிற்றிற்கும் இடையே கட்டப்பட்ட லுங்கி, விரலிடுக்கில் புகைந்து வழியும் சிகரெட். இதுதான் என் மனதில் பதிந்த அவரது உருவம். "நல்லாயிருக்கியா ராஜா" என்று நேற்று அழைத்தது போன்று இருக்கிறது.

1976 ம் வருடம் குன்னூரில் அப்பாவுடன் துளிர்விட்ட அவரது சினேகம் பல பருவங்களைக் கடந்து பெரும் விருட்சமாய் வளரத் துவங்கி,  "சொந்தக்காரங்கள விட அவன் எனக்கு பெருசு" என்ற இறுமாப்புடன் ஓங்கி நின்றிருக்கிறது.  இருவருக்கும் கருத்து வேறுபாடு உண்டு. இருவருக்கும் வெவ்வேறு குணாதிசயங்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒன்றுபடும் ரசனை. இவையனைத்தையும் ஒருங்கிணைத்த ஒரே புள்ளி நட்பு. அப்பாவை நான் அதிக குதூகலத்துடன் பார்த்தது அங்கிளுடன் தான். என்ன பிரச்சனை என்றாலும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்ததில்லை. நல்லது கெட்டது எதுவாயினும் அவர்கள் இணைந்தே செய்தனர். வியப்பு தான் எனக்கு.

அவரைப் பற்றி என் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமான புரிதல் இருந்தது. கிண்டல் கேலி என்று விளையாட்டு காட்டியது ஒரு பருவம், என் அமைதியை கொண்டாடியது ஒரு பருவம், சிறுவயதில் என் பக்குவத்தை மெச்சியது ஒரு பருவம், படிப்பின் பால் கண்டித்தது ஒரு பருவம், என் வாலிப வயதுக் கோபங்களை நெறிப்படுத்தியது ஒரு பருவம் என்று இன்னும் எத்தனையோ. எதைச் சொல்வேன்? அவரை நினைத்தவுடன் எண்ணச்சுழல்களில் உழலும் மனதை அடக்கியமர்த்த முடியாமல் திணறுகிறேன்.

ஒருமுறை அப்பா விளையாட்டாக நான் சிங்காநல்லூர் சென்றதை சிங்கப்பூர் சென்றதாக கூறியதை கேட்டு அகமகிழ்ந்து அவரும் ஆண்ட்டியும்  ஊரில்லுள்ளவர்களிடம் பெருமிதப்பட்ட கதையைச் சொல்லவா?

ஒரே ஸ்கூட்டரில் நான், அவர், அப்பா, அம்மா என நால்வரும் பயணித்ததைச் சொல்லவா?

என் முதல் கிரிக்கட் மட்டையை வீரர்களைப் போல் கக்கத்தில் வைக்கச் சொல்லி நடந்துவரச் செய்து அழகு பார்த்ததைச் சொல்லவா?

தொணதொணவென்று பேசும் என்னை என் போக்கிலேயே பேச விட்டு ஆர்வம் குறையாமல் ரசித்ததைச் சொல்லவா?

பத்தாவது பொதுத்தேர்வில் 92 சதவிகிதம் பெற்றதை ஆர்வத்துடன் நான் கூற, "இந்த மார்க் போதும்னு நெனைக்கிறியா" என்று என்னை திணற வைத்ததைச் சொல்லவா?

"நல்லா கார் ஓட்டுற ஆனா டாப் கியர்ல ஸ்லோ பண்ணும் போது என்ஜின் இடிக்குது பாரு" என்று விமர்சித்துவிட்டு, "நம்ம பசங்க கார் ஓட்டி நாம உக்காந்து வர்ற சுகமே தனி" என்று நெகிழும் அவர் பாங்கைச் சொல்லவா?

"எப்போ பாத்தாலும் உன் பிரெண்ட்ஸ் கூட போன்ல பேசிட்டே இருக்கியாமே? உங்கப்பன் பீல் பண்றாண்டா. பாத்துக்கோ" என்று கல்லூரி படிக்கும் சமயத்தில் அப்பாவுக்கும் எனக்கும் பாலமாக இருந்ததைச் சொல்லவா?

எதைச் சொல்ல யோசித்தாலும் அந்த மயானமும் அவர் சமாதியும் அதன் தலைமேட்டில் அவருக்கு பிடிக்கும் என்று பரப்பி வைத்திருந்த சிகரட்டுகளும் குவாட்டர் பாட்டிலும் நினைவுக்கு வருகிறது.
சிறுவயதில் எனக்கு சிகரட் புகையினால் வளையம் விட்டு வேடிக்கை காட்டிய பொழுது எனக்கு தெரியவில்லை, பின்னாளில் அந்த வளையம் போலவே கரைந்து போவார் என்று. 
இனி ஈரோடு செல்லும் வழியில் செங்கோடன் பள்ளமும் சக்தி நகரும் வெறும் அடையாளங்களாய் மட்டும் தோன்றும். நினைவுகளை மட்டும் பறைசாற்றும்.

ஏதாவது ஒரு உரையாடலின் இடையே அவரைப் பற்றி குறிப்பிட்ட பிறகு ஒரு வெறுமை அடைவதும், அதன் தொடர்ச்சியாக கண்களில் துளிர்க்கும் கண்ணீரை யாரும் அறியாதவாறு துடைத்திடும் அப்பாவை காணும் பொழுது என் நெஞ்சம் கனத்துதான் போகிறது.

ஒருமுறை அக்காவின் (பெரியம்மா மகள்) திருமணத்தின் போது மேடையில் நின்று புகைப்படம் எடுக்க அம்மா அழைத்த போது "இப்போ எதுக்குங்க. நம்ம கவின் கல்யாணத்துல நின்னு போட்டோ எடுக்கறது தாங்க அமைப்பா இருக்கும்" என்றார்.

அங்கிள், நாளை என் திருமணத்தின் போது நீங்கள் நிற்க வேண்டிய இடம் வெற்றிடமாகத் தான் இருக்கப் போகிறது. அதை கண்ணீர் விட்டு நிரப்புவதைத் தவிர நான் வேறு என்ன செய்ய?




Monday 28 February 2011

என்னது? தாய் ஏர்வேஸ்ல ......

ஒரு சிலரை பார்த்தவுடன் பிடித்துவிடும். ஒரு சிலரை பேசியவுடன் பிடித்து விடும். ஆனால் ஒரு சிலரை மட்டும்தான் பார்த்தவுடனே "ஆஹா இவன் விவகாரமான ஆளு" னு மனதில் அலாரம் அடிக்கும். பேசிவிட்டால் "அப்பவே நெனச்சேன்"னு மனது ஒரு சபாஷ் சொல்லிவிட்டு பின்பு வருத்தப்படும். அதுவும் என்னையே தேடி வருவார்கள் போலும். சட்டென யாரையும் புறக்கணிக்காமல் அவர்கள் சொல்வதற்கெல்லாம் ஆமாம் போடுவதால் கூட இருக்கலாம் என்று என்னை நானே நொந்து கொள்வேன்.

 இப்படித்தான் ஒருமுறை மும்பை விமானத்திற்காக லண்டன் ஏர்போர்ட்டில் காத்திருந்தேன். விமானம் புறப்பட தாமதமாகும் என்று முன்பே அறிவித்திருந்தனர். தாமதம் என்றால் அதிகம் இல்லை. காலை 9 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் சற்றே (?) தாமதமாக மதியம் 2 மணிக்குப் புறப்பட இருந்தது. அது ஏர் இந்தியா விமானம் என்பதால் எனக்கு வியப்பு எதுவும் இல்லை. மும்பை விமான நிலையத்திற்கு என்னை அழைத்துச் செல்ல மாமா வருவதாக ஏற்பாடு. இப்பொழுது தாமதத்தை அவருக்கு தெரிவிக்க வேண்டும். போனில் அழைத்தால் பதிலில்லை. லேன்ட்லைனிலும் சிக்கவில்லை. ஒருவாறு கடுப்பான சூழ்நிலையில்தான் இந்த பதிவின் கதாநாயகனின் அறிமுகம். 

அவன் பெயரை நான் சொல்லப் போவதில்லை. ஏனென்றால் அந்த வீணாகப்  போனவனின் பெயர் என் நினைவில் இல்லை. எங்கிருந்து வந்தான் என்று தெரியவில்லை. என்னை இனம்கண்டுகொண்டு என்னருகில் வந்தமர்ந்தான். 
"ஹலோ" என்றான்.
நானும் "ஹாய்" என்றேன்.
"ஆர் யூ வெய்டிங் பார் தி ஏர் இந்தியா பிளைட் டு மும்பை?"
"யா"
(இனி அவன் டயலாக்குகளை தமிழிலேயே சொல்கிறேன்)
"நானும் அந்த பிளைட்கு தான் வெயிட் பண்றேன்"
"ஓஹோ" முன்பு கூறியதைப் போல் எனக்கு அப்பொழுதே அசுவாரஸ்யம் தொற்றிக்கொண்டிருந்தது.
"நீங்க எங்க வொர்க் பண்றீங்க?"
"விப்ரோ ல வொர்க் பண்றேன்"
"என்ன வா இருக்கீங்க?"
பன்னாட. CEO போஸ்டா தருவாங்க.
"சீனியர் டெவலப்பர்"
"யூ நோ. நான் ....... கம்பனியில ஜெனரல் மானேஜரா இருக்கேன்"
ரைட்டு. இந்த கருமத்த சொல்லி பீத்திகிறதுக்குத் தான் என்னோட வேலையப்பத்தி கேட்டியா. அடப் பரதேசி.
"ஹ்ம்ம்"
"நெக்ஸ்ட் மன்த்ல இருந்து என்ன லண்டன்ல இருந்து வேலை பாக்க சொல்லி இருக்காங்க"
"ஓ"
"வீடு எல்லாம் பாத்து ஓகே பண்ணிட்டு போறதுக்காக இப்போ லண்டன் வந்திருக்கேன்"
அடங்க்கொக்கமக்க. அவ்ளோ பெரிய தில்லாலங்கடியா நீ. கம்பனி பேர் என்ன மன்னார் & கோ வா.
"Canary Wharf ல வீடு பாத்துட்டேன்" 
ஹ்ம்ம். எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டும் கட்டம் இது.
"இப்போ போய் wifeஅ கூட்டிட்டு அடுத்த மாசம் வந்திருவேன்"
நல்லா கவனிங்க. இது வரை நான் கேள்வி கேட்கவே இல்லை. அதுமட்டுமில்லாமல் உயர்ந்த பதவியில் இருப்பவர் எவரும் இப்படி சுயதம்பட்டம் அடித்து நான் பார்த்ததில்லை. இவன் எந்த வகை என்று புரியவுமில்லை. 

நான் பெரிதாக சுவாரசியம் காட்டாததை அவன் உணர்ந்தானா என்று தெரியவில்லை சுமார் ஒரு அரைமணி நேரம் எதையெதையோ கூறி தாளித்துக் கொண்டிருந்தான். அப்புறம் ஒரு இடைவேளை.

பின்பு திடீரென்று "தே ஹாவ் டிஸ்பிளேடு தி கேட் நம்பர்" என்றான்.
அவன் கூறியதை நானும் ஒருமுறை சரி பார்த்து விட்டு என் அருகில் இளைப்பாறிக்கொண்டிருந்த நண்பர் அசோக்கை எழுப்பினேன். 
அவர் எழும்பவும் ஒரு வயதான பாட்டி ஏதோ ஒரு மெஷினை அவரிடம் கொடுத்து விளம்பரப்படுத்தவும் சரியாக இருந்தது. கையகல கணினியில் விபரங்களை நிரப்பினால் ஏதோ கூப்பன் தருவதாக அந்த பாட்டி சொல்ல, அவர் அதை செய்யலானார். என்னுடன் கிளம்ப எத்தனித்த நம் கதாநாயகன் நான் அவருக்காக காத்திருப்பதை கண்டு அவனும் காத்திருந்தான். நான் சாதாரணமாக காத்திருக்க அவனோ கடிகாரத்தை அடிக்கடி பார்த்துக்கொண்டு கிடைகொள்ளாமல் இருந்தான். அசோக்கிடம் கூப்பனை கொடுத்துவிட்டு அந்த பாட்டியும் நகர்ந்தது. அவர் அந்த கூப்பனைக் கொண்டு மேலும் சாக்லேட் வாங்க வேண்டுமென நகர்ந்தார். அவன் மேலும் பொறுமையிழந்து இருந்தான். 
"இசின்ட் இட் கெட்டிங் லேட்" என்றான்.
உனக்கு லேட்டானால் கிளம்ப வேண்டியதுதானே டா. அவனிடம் கேட்கவில்லை.
"எவளோ நேரம் ஆகும் கேட்டுக்கு போறதுக்கு?"
"பத்து நிமிஷம் ஆகும்"
பத்து நிமிடம் கழித்து அசோக் வந்து சேர்ந்தார். மூவரும் கேட்டை நோக்கி நடக்கலானோம். இப்பொழுது அவன் அசோக்கை அரிக்க தொடங்கியிருந்தான். எனக்கு சற்று நிம்மதி.
டாய்லட் சென்றோம். அவனும் வந்தான். 
நின்றோம். அவனும் நின்றான்.
நடந்தோம். அவனும் நடந்தான்.
அவனுக்கு கேட்டை கண்டுபிடித்து செல்ல தெரியவில்லை என்பதை உணர எனக்கு வெகுநேரமாயிற்று. 

நீண்ட வரிசையில் நின்று போர்டிங் பாஸை கிழித்து வாங்கிக்கொண்டு லவுஞ்சிற்கு வந்தோம். அசோக் அவன் எங்கு வேலை செய்கிறான் என்று கேட்டு தொலைக்க, அவன் மறு ஒளிபரப்பை தொடங்கிவிட்டிருந்தான். அவருக்கு ஏண்டா கேட்டோம் என்று தோன்றியிருப்பதை நான் உணர்ந்தேன். 
லவுஞ்சு கண்ணாடி வழியே விமானங்கள் ஓடுதளத்தில் ஓடுவதும் பறப்பதுமாக இருந்தது. அவன் என்னருகில் மறுபடியும் அமர்ந்தான். தாய் ஏர்வேஸ் விமானம் ஒன்று மெதுவாக ஓடுதளத்தை நோக்கி ஊர்ந்துகொண்டிருந்தது.
"யூ நோ. தாய் ஏர்வேஸ்ல inflight entertainment கிடையாது" 
எனக்கு வரலாறு காணாத கோபம் அப்பொழுதுதான் பீறிட்டது. கொய்யால.
எதையாவது பேசணும்னு எத வேணும்னாலும் பேசறதா. கர்மம் என்று என் விதியை நொந்து கொண்டேன்.
"ஐயையோ இவன் நம்ம பக்கத்து சீட்டா இருந்தா" அந்த நினைப்பே வயிற்றை கலக்கியது. மெதுவாக அவன் சீட் நம்பரை விசாரித்தேன்.
"32A. யுவர்ஸ்?" என்றான்.

"சீட் நம்பர்ஸ் 40 டு 44 ப்ளீஸ் ப்ரோசீட் பார் போர்டிங்" என்று அறிவித்தார்கள். புயல் அபாயம் நீங்கிய உணர்வோடு விமான நுழைவு வாயிலை நோக்கி நான் நடந்துகொண்டிருந்தேன்.





Friday 25 February 2011

இளையராஜா

இந்த இசை அரசனின் இசையலைகள் புரட்டிப் போட்ட கோடானு கோடி சிப்பிகளில் நானும் ஒருவன். இசை ஞானம் இல்லாதவரையும் இழுத்துத் தன்னுடன் பயணிக்க வைக்கும் அந்த சக்தி. எத்தனை பாடல்கள். அடேயப்பா. மனதின் உணர்ச்சிகள் ஒவ்வொன்றையும் சுண்டி இழுத்த நூற்றுக்கணக்கான பாடல்கள். 


இசையைப் பற்றி என்ன தெரியும் என்று என்னைக் கேட்பீர்களானால் - இளையராஜாவின் இசையை ரசிக்க நன்றாகத் தெரியும் என்பது தான் என் பதிலாக இருக்கும். அந்த இசையைப்பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட நாளாக ஆசை. தத்து பித்தென்று எதையாவது எழுதிவைக்க மனம் ஒப்பவில்லை. நுணுக்கமாக எழுத எனக்கிருந்த இசைஅறிவு போதுமானதாகத் தோன்றவில்லை. எழுதாமல் விட்டது எவ்வளவு நல்லதாகிவிட்டது என்பதை கீழ்காணும் பதிவைக்கண்டவுடன் விளங்கிவிட்டது.

ரவி ஆதித்யா: இளையராஜா- King of Enchanting Violins-1

கண்டிப்பாக இவ்வளவு சிரத்தையுடன் என்னால் எழுதி இருக்க வாய்ப்பே இல்லை. அற்புதம். பல பாடல்களில் பொதிந்திருந்த வயலின் interlude களை அவ்வளவு அழகாக பதிவு செய்து இருக்கிறார்.
இதைப்படித்தவுடன் சில விஷயங்கள் ஞாபகம் வந்தது. அதைப் பகிர்ந்து கொள்ளலாமே என்று தான் இந்த பதிவு.

சிறுவயது தொட்டு திரையிசையை ரசித்து வருபவன் தான். இருப்பினும் சமீபகாலமாக அயல்நாடு தந்த தனிமை, இசையுடன் இன்னும் நெருங்கி உலா வர வாய்ப்பாக அமைந்தது. வீட்டில் பெரிய ஸ்பீக்கர்களில் கேட்கும் பொழுது புலப்படாத பல நுணுக்கமான இசைகளை ஹெட் போனில் கேட்கும் பொழுது தான் ரசிக்க முடிந்தது. அதுவும் நம் இளையராஜாவின் இசை என்றால் ஆங்காங்கே சிறு சிறு இசைத்துணுக்குகள் ஒளிந்திருக்கும். அமைதியான இரவுகளில் இளையராஜாவின் இசை தரும் சுகத்தை உணர மட்டும்தான் முடியும். அப்படி ஊன்றி கவனிக்கும் பொழுதுதான் இளையராஜா மற்ற இசையமைப்பாளர்களில் இருந்து வெகுவாக வேறுபட்டிருப்பதை உணரமுடியும். அந்த வேறுபாட்டில் ஒன்று தான் ரவி அவர்கள் பதிவில் விவரிக்கப்பட்டிருக்கும் வயலின் உபயோகம். இளையராஜாவின் இசைக்கோர்வை (music composition) அவரின் மற்றொரு தனித்தன்மை.



இசைக்கோர்வையை விமர்சிக்கும் அளவுக்கு அறிவு போதாது எனினும், இளையராஜா இசைக்கும் மற்ற இசையமைப்பாளர்கள் இசைக்கும் உள்ள வேறுபாட்டை எப்படியோ என்னால் இனம்காண முடிகிறது. இதென்ன பெரிய விஷயம் என்கிறீர்களா? இருக்கலாம். உதாரணமாக இதுநாள் வரையில் இளையராஜா இசையமைத்ததாக நம்பப்பட்டு வந்த பல பிரபலமான பாடல்கள் வேறு இசையமைப்பாளர்களுடையது என்பதை தனித்துவம் வாய்ந்த இசைக்கோர்வையோ இல்லை ஏதோ ஒன்று எனக்கு உணர்த்திற்று.

80 களிலும் 90 களிலும் வெளிவந்து வெற்றி பெற்ற எல்லாப்பாடல்களுமே இளையராஜாவினுடையது தான் என்று பலர் உட்பட நானும் நம்பியிருந்தேன். 

இதயத்தாமரை படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல் இளையராஜாவினுடையது அல்ல என்று எனக்கு உணர்த்தியது எதுவென்று தெரியவில்லை. விசாரித்துப் பார்த்ததில் சங்கர்-கணேஷாம்.



அதேபோல் 
இந்தப் பாடல் சந்திரபோஸ் இசையமைத்தது.

மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்திய இந்த பாடலுக்கு இசை தேவேந்திரன்.

இப்படிப்பல பாடல்கள். மேற்குறிப்பிட்ட பாடல்களில் எந்த குறையும் இல்லை. இளையராஜாவின் டச் இல்லை என்பதே நான் உணர்ந்தது. ஒருமுறை இளையராஜா குறிப்பிட்டார் -  "இசை என்பது ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் புதியதாய் தோன்ற வேண்டும்" என்று. எவ்வளவு உண்மை. இதுதான் இளையராஜாவின் அந்த டச். வெறும் ரயில் சிநேகமாய் முடிந்து போகாமல் உற்ற நண்பனைப் போன்றது இளையராஜாவின் பாடல்கள்.

எந்த சூழலிலும் நம்மை ஆட்கொள்ளும் இசையைப்பற்றி அடுக்கிக்கொண்டே போகலாம். அனைவரும் அறிந்த ஒன்றை மீண்டும் வழிமொழிகிறேன்.

Sunday 20 February 2011

சிறு பிள்ளாய்

காய்ந்தச் சருகின் மேல் 
தங்கச் சிறகைப் போல்
என் மடியினில்
உறங்கும் பிள்ளாய்

உன்
கருவிழிகள்
இரு பிறைநிலவுகளுக்குள்
துஞ்சுவதை
கண்சிமிட்டாமல்
படம் பிடிக்கிறேன்

மொட்டு அவிழ்வதைப்
போல
பட்டு இதழ் விரிக்கிறாய்
கனவு காண்கிறாயோ?
உன் கனவு உலகத்திற்குள் 
நானும் விரைகிறேன்

என் சுற்றம்
தொலைந்து போகிறது
என் யாக்கை
உயிர்ப் பிரிகிறது
அவ்வுயிர்
மெல்ல அலைகிறது 

உடல் நெளிக்கிறாய்
உன் கனவு
கலையாதிருக்க
நான்
சிலையாகிறேன்

முகம் சுழிக்கிறாய்
அதனின்று
ஆயிரம் கவிதைகள்
தெறித்து விழுகிறது

உன் விரல்களால்
காற்றை அளாவுகிறாய்
அவ்வோசை
இசையாகிறது

உனக்கு வலிக்காமல்
ஒரு பொய் முத்தம்
பதிக்கிறேன்

இந்தக் கணம்
உடனே
உறைந்து விடாதா?
உன்
உறக்கத்தினுள்
நான்
கரைந்துவிட.....


Saturday 19 February 2011

பிரியாவிடை

இனிக்கின்ற நினைவுகளும் கனக்கின்ற நாளிது
உளம்வென்ற நட்பினையும் பிரிக்கின்ற நாளிது
ஒளிநின்றக் கண்களிலும் வியர்க்கின்ற நாளிது
பிரிவென்ற பெருந்துயரம் களம்வென்ற நாளிது




விடைபெறும் நேரம்
எதிர்நோக்கவில்லை நாமும்
படித்த பாடங்கள் கண்ணீரில் கரைந்து விட 
பேசிய வார்த்தைகள் மனதிற்குள்ப் புதைந்து விட
சிரித்த சிரிப்பொலிகள் வகுப்பறையில் எதிரொலிக்க
இன்புற்றத் தருணங்கள் கண்மணிக்குள் புதைந்து விட
பிரிந்து செல்கின்றோம் 
நினைவுகளின் வலிகளோடு.....

                                                          ---- கல்லூரியின் கடைசி நாளன்று எழுதியது

படித்ததும் ரசித்ததும் - 3

Monday 14 February 2011

பிப்ரவரி 14

அன்று பிப்ரவரி 14. சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு. வீட்டில் தனியாக நான். சன் டிவியில் காதலர் தின சிறப்பு திரைப்படமாக "காதலன்" திரைப்படம் ஓடிக்கொண்டு இருந்தது. சுமார் மாலை நான்கு மணிக்கு திடீரென்று ஒரு ப்ளாஷ் நியூஸ். முதலில் நான் அதை கவனிக்கவில்லை. சட்டென்று "குண்டு வெடிப்பு" என்றும் "கோவை" என்றும் வார்த்தைகள் தென்பட நான் சற்று பரபரப்பானேன்.  அம்மாவும் மூன்று வயது தம்பியும் அந்த மாலையில் தான் பாட்டி வீட்டிலிருந்து திரும்ப வர வேண்டும். அப்பாவோ அன்று சனிக்கிழமையாதலால் அரைநாள் வேலை முடிந்து  நாமக்கல்லிலிருந்து வார இறுதிக்காக  வீடு வரவேண்டிய நாள். இவையனைத்தும் என் மூளைக்குள் ப்ளாஷ் நியூசாக ஓட எனக்கு பதட்டம் தொற்றிக்கொண்டது. டிவியில் திடீர் செய்திகள் ஒளிபரப்பப்பட்டு "குண்டு வெடித்தது R.S .புரத்தில் மட்டுமல்ல" என்று கூறி இடங்களை பட்டியலிட ஆரம்பித்து என் பரபரப்பை படபடப்பாக்கினர்.

செய்வதற்கு ஒன்றுமில்லை. காத்திருப்பு. யாராவது ஏதாவது தகவல் தரமாட்டார்களா என்று மனம் அடித்துக்கொண்டது. வெளியில் ஓடினேன். யாரேனும் டவுனிலிருந்து வந்தால் நிலவரம் என்ன என்பதை அறியலாம் என்று காத்திருந்தேன். அம்மாவுடன் பணிபுரியும் இருவர் நடந்து வந்துகொண்டிருந்தனர். யார் என்று நினைவில்லை.

"அங்கிள்... டவுனுக்குள்ள எப்படி இருக்கு அங்கிள்". பொத்தாம்பொதுவாக நான் கேட்க அவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

 "ஏன் என்ன ஆச்சு?" என்றார்கள்.

சரி அவர்களுக்கு இன்னும் செய்தி எட்டவில்லை போலும். எனக்கு சப்பென்று ஆனது.

"R.S. புரத்துல குண்டு வெடிப்புன்னு நியூஸ் வந்துது அங்கிள்" என்றேன்.
"அம்மாவும் தம்பியும் பாட்டி வீட்டுக்கு போயிருக்காங்க. இப்போ திரும்பி வர்ற நேரம். அதான் என்ன ஆச்சுனு தெரியல அங்கிள்" குரல் சற்று உடைந்து விட்டிருந்தது.
 நான் கூறியதை அவர்கள் அதிகம் சட்டை பண்ணியதாக தெரியவில்லை. அநேகமாக என் பரபரப்பு அவர்களை தொற்றியிருக்க வேண்டும். அதை நான் சட்டை செய்யவில்லை.

சம்பிரதாயத்துக்கு "ஒன்னும் பயப்படாத கவின். வந்துருவாங்க" என்று கூறிவிட்டு அவர்கள் வீடு நோக்கி பயணித்தனர்.

நான் மறுபடியும் வீட்டினுள் ஓடி வந்து வேறு ஏதாவது தகவல் இருக்குமா என்று டிவியில் பார்க்கிறேன். இப்பொழுது சம்பவம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களை ஒலிபரப்பிக்கொண்டிருந்தனர். எனக்கோ சம்பந்தமில்லாமல் பல கற்பனைகள் மனதை அரித்தன. "ச்சே. ஒன்னும் இருக்காது டா" என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.

கிடை கொள்ளாமல் வீட்டினுள் சற்று நேரம் வெளியில் சற்று நேரம் என்று உலவினேன். யாரிடமாவது பேச வேண்டும் போல இருந்தது. வீட்டைப் பூட்டிக்கொண்டு அருகிலிருந்த மூர்த்தி அண்ணனின் இஸ்திரி கடைக்கு விரைந்தேன். வானம் இருட்டிவிட துவங்கி இருந்தது. அங்கும் சன் டிவி தான் ஓடிக்கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் அதே காட்சிகள்.
"என்ன கவின். நியூஸ் பாத்தியா" என்றார்.
"ஆமா ணா. அம்மாவும் தம்பியும் வேற சிங்காநல்லூர் போயிருக்காங்க. எப்படி வருவாங்க னு தெரியல ணா".
அழ வேண்டும் போல இருந்தது. அடக்கிக்கொண்டேன். என் வாடிய முகத்தைக் கண்டதும் அவருக்கும் சற்று சங்கடமாகி இருக்க வேண்டும். சற்று நேர மௌனம். "ஒன்னும் பிரச்சினை இருக்காது கவின்" அதற்கு மேல் அவருக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.
"அப்பா எப்படி வருவாரோ" அடுத்த பதட்டம்.
"போன் ஏதாவது வந்துதா?"
"இல்ல ணா."
"அங்க பாட்டி வீட்டு பக்கத்துல யார் வீட்டிலையாவது போன் இருக்கா?"
"இருக்கு ணா. ஆனா என்கிட்டே நம்பர் இல்லை" இதையெல்லாம் வாங்கி வைக்க வேண்டும் என எனக்கு ஏன் தோன்றவில்லை. என்னை கடிந்து கொண்டேன். சரி அம்மாவாவது போன் பண்ணி சொல்லலாமில்ல. அம்மா மீதும் கோபம் வந்தது.
"அய்யய்யோ. இப்போ யாராவது போன் பண்ணினா. அண்ணா நான் வீட்டுக்கு போறேன்"
மறுபடியும் வீடு.
போனின் மீது என் பார்வை படிந்து கிடந்தது. பெரியம்மாவுக்கு போன் பண்ணி நம்பர் கேட்டா என்ன. போன் செய்தேன். லைன் கிடைக்கவில்லை. மாய்ந்து மாய்ந்து மறுபடி மறுபடி டயல் செய்கிறேன். ஹ்ம்ம். பயனில்லை.
காத்திருப்பு.
செய்தி சொல்லி மாய்ந்து போனவர்கள் மீண்டும் காதலன் திரைப்படத்தை ஓடவிட்டனர். கண்கள் டிவியிலும், காது டெலிபோனிலும், மனது அம்மாவின் மீதும் இருந்தது. சுமார் ஒருமணி நேரம் அப்படி அமர்ந்திருப்பேன் என்று நினைவு.

வாசலில் TVS 50 யின் அரவம். சடாரென்று வெளியில் துள்ளி ஓடினேன். அங்கே அம்மாவும் தம்பியும் உடன் நடராஜ் மாமாவும் வண்டியிலிருந்து இறங்கினர். அதுவரை துடிக்க மறந்த இதயம் உயிர் பெற்று வேகவேகமாக துடித்தது. அழுகை சிரிப்பு என கலந்து ஒரு விதமான மனநிலை.
"அண்ணா" என்று மழலையாய்ச் சிரித்தான் பிரவின். அப்படியே ஓடிச்சென்று தம்பியை வாங்கி முத்தம் கொஞ்சிவிட்டு அம்மாவை கட்டிக்கொண்டேன். "எப்படிமா வந்தீங்க" தழுதழுத்தது குரல்.
"மாமா வந்தாங்க சாமி. மாமா கூட்டிட்டு வந்ததுனால ஆச்சு"
ஏன் போன் பண்ணல என்று ஏனோ கேட்க தோன்றவில்லை.
மனம் லேசாகிவிட்டிருந்தது.

இப்பொழுது அப்பா. எல்லாம் இன்று ஒரு சேர நிகழ வேண்டுமா. ஒவ்வொரு வாரமும் அப்பா வரும் வார இறுதி தான் எங்கள் பண்டிகை தினம். அன்றுதானா இதெல்லாம் நிகழ வேண்டும்.  அம்மாவும் மாமாவும் இருப்பதால் சற்று தைரியம் வந்தது. மீண்டும் நால்வருமாக இன்னொரு இரண்டு மணிநேரம் காத்திருந்து கரைக்க வேண்டியிருந்தது.
டெலிபோன் மணி ஒலித்தது. பாய்ந்து சென்று எடுத்தேன். நம்பிக்கை பொய்க்கவில்லை. அப்பாதான்.
"கவின். அப்பா பேசறேன்"
"சொல்லுங்க டாடி. எங்க இருக்கீங்க"
"லாலிரோடு கிட்ட இருக்கேன். ஒன்னும் பயப்பட வேண்டாம். இன்னும் ஒரு அரைமணி நேரத்துல வந்துருவேன். சரியா?"
"சரி டாடி. வடவள்ளி வந்துட்டு போன் பண்ணுங்க"
"சரி. வெக்கட்டா"
அப்பா சொன்னதை அம்மாவிடமும் மாமாவிடமும் ஒப்பித்தேன். மீதி உயிரும் திரும்பி வந்தது.
"அப்பா வன்னுட்டாங்க்லா" பிரவின் அவன் மொழியில் கேட்டான்.
"இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க" என்றதும்
"ஐயா" என்று சிரித்தான்.

சுமார் ஒன்றரை மணி கழித்து அப்பா நடந்தே வந்து சேர்ந்தார். பஸ் கிடைக்காமல் லிப்ட் கேட்டு கேட்டு மாறி வந்ததைச் சொன்னார். பதட்டம் தணிந்து இயல்பு நிலை திரும்பிய தருணம் அது.

இத்தனை வருடங்கள் கழித்தும் கூட பிப்ரவரி 14 என்றால் இந்த நினைவு வருவதை தவிர்க்க முடிவதில்லை.
எனக்கு அது ஒரு மீண்ட சொர்க்கம் .......

படித்ததும் ரசித்ததும் - 2

காதலர் தினத்திற்கு பொருத்தமான ஒரு கவிதை :-)

ஆதலினால் காதல் செய்வீர்!!

Sunday 13 February 2011

ஹைக்கூ - 1



மறைந்திருந்து பார்க்கும்
மர்மமென்ன
பிறைநிலவு








    

என்றும் வற்றாத
ஜீவநதி
ஏழையின் கண்ணீர்


                                                                      ----  கல்லூரி நாட்களில் எழுதியது



படித்ததும் பதறியதும் - 1

நெஞ்சம் கனக்க வைத்த கவிதை

பின்னோட்டம்

முகத்தில் கீறலும்
பழுப்பான ஆடைகளும்
உடலெங்கும் காயங்களும்
என்று அலங்கோலமாய்
அவர்கள்....

நினைவுகளைப்
பின்னோக்கி இழுத்துப்
பசுமை தடவிக்கொண்டே
அந்த
சிதைந்தப் புகைப்படத்துடன்
நான்.....


Saturday 12 February 2011

விடியாத காலை

சன்னமாய் இமை மடல்களை வருடும் சூரியன்.
தன்னிச்சையாய் நான் இழுக்கும் போர்வைக்குள் புகும்
அம்மாவின் கெஞ்சல்.

சட்டென எழுந்து
அப்பாவுடன் சவரக் கண்ணாடியில் முகம் பார்த்து
இளையவனைத் தட்டி எழுப்பி
காலைக்கடன் முடித்தவுடன்
நுரைத் ததும்பும் காபியின் ஸ்பரிசம் என் கையில்.

காலைப்பனியை நுகர பலகணிக்கு நகர்கிறேன்
இன்றாவது குறி தவறாதா என யோசிப்பதற்குள்
என் காலடியில் குடிபுகும் நாளிதழ்
அதனை புரட்டி முடிக்கையில்
தலை துவட்டிக்கொண்டு அப்பா.

குளியலறைக்குள் நான் நழுவ எத்தனிக்க
என்னை முந்திக்கொண்டு புகுகிறான் என் பிறந்தவன்
ஒருவாறாக ஆயத்தமாகையில்
கடுகு தாளிக்கும் வாசம்.
அவசரமாய் உண்டுவிட்டு வீட்டினின்று கிளம்புகிறேன்.

அண்டைவீட்டு வாசலில்த் தெளிக்கும்
 நீருக்குத் தப்பித்து
அழகழகாய்ப் பூத்திருக்கும்
கோலங்களைத் தாண்டிக்குதித்து
முதுகில் அழுத்தும் புத்தகப்பையை சரிசெய்து
நடையைத் தொடர்கிறேன்.

ஆவியினின்று ஆடை விலக்கும்
பாட்டிகடை இட்டிலி
வாகனம் கொள்ளாத சாமான்களின்
மீதமர்ந்து ஒய்யாரமாய் பவனி வரும்
மளிகைக்கடைக்காரர்
நாசிக்கு இதமாக
பூக்கடையின் மல்லிகை மணம்.

இவற்றை கடக்கையில்
சட்டென
நினைவுகள் அகல
கனவு கலைய
மீண்டும் போர்வைக்குள் நான்.

திரைசீலையை விலக்கிப்
பார்க்கிறேன்
இன்னும் விடியாத
அயல்நாட்டு காலைப்பொழுதை
எதிர்நோக்கி.......


கிறுக்கல்

கவிஞனாம் அவன்.
அவன் கவிதை எழுதத் துணிகிறான்

கருத்துக்களுக்கு மணமுடிக்க
வார்த்தைகளை மாலையாய்க் கோர்க்கிறான்
அந்தோ
ஒன்றுக்கொன்று முட்டிக்கொண்ட எழுத்துக்கள்
தனித்தனியே

மோனைகள் மௌனமாய்ப் போர்புரிய
எதுகையோ ஓடுகிறது சிரம் தெறிக்க

எதற்கிந்த சிரமம்?
நவயுகக் கவிதை ஒன்று முளைத்தது

அதையோ
தமிழென்று உணர்ந்துக்கொள்ள மிகக் கடினம்
இலக்கணமோ பிழையுடனே இழையோடுகிறது
அதில் ஒரு தலைக்கனம்
அவனுக்கு

தலைப்பிட்டான் "கிறுக்கல்" என.
வெறும்
கிறுக்கல்களாய் காகிதத்தில்....


Sunday 6 February 2011

கொங்கு தமிழ் வாசம்

துள்ளுதமிழ்த் தேடிக்கொண்டிருந்த வேளையில் என் நெஞ்சிற்கினிய கொங்குதமிழ் என்னைத் தழுவிற்று. கீழ்காணும்ச் சுட்டியில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள கொங்கு வட்டார வழக்குச் சொற்கள் என்னை பல்லாயிரம் மைல்களைக் கடந்து கோவை தெருக்களில் விட்டுவிட்டதைப் போன்றதொரு உணர்வு.

http://konguvaasal.blogspot.com/2007/07/blog-post_25.html#links

ஒவ்வொரு வார்த்தையைப் படிக்கும் பொழுதும் அதை யாரிடத்தில்க் கேட்டேனோ அந்த நினைவுகள் வலியச்  சென்று ஆழ் மனதில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்கின்றன. அண்மையில் என் கொங்குதமிழ் வாசம் வீசுகிறது. நுகர்கிறேன். அது தரும் பழைய நினைவுகளைப்  பருகுகிறேன். போதைத் தருகிறது. அனுபவிக்கிறேன். இந்த உணர்வு புதுமையானது. தென்றலை நேரில் நின்று அனுபவிப்பது ஒரு சுகம். அதே தென்றல் மனதினுள் வருடுவது முற்றிலும் புதிய சுகம்.
இன்னும் என் தெருக்களில் பயணித்துக் கொண்டு இருக்கிறேன், பழைய நினைவுகளை அசை போட்டபடி. இது கொங்கு நினைவுகள். அதை கோர்க்கிறேன் ஒரு மாலையாக. அது பின்வரும் காட்சியாக விரிகிறது.



"சித்த இரு கண்ணு. நான் மேலுக்கு தண்ணி வாத்துட்டு இதா வந்தர்றேன். நீ சீராடாம வட்டல கொண்டு வை கண்ணு சோறு உங்கலாம்"னு ஆத்தா பாத்துரூம்புக்குள் நுழைகிறாள்.
"அரமாலும் கொஞ்சமா திங்கிறியே கண்ணு. நல்லா உண்டாத்தான வலுவிருக்கும்"னு கரிசனம் காட்டுகிறார் தாத்தன்.


ஆத்தாவும் தாத்தாவும் பழமை பேசுகிறார்கள்.
"சின்னக்கண்ணு பண்ணாடி சனிக்கெழம பொழுதோட தான் வருவாரு. அவீய வர்ற வரைக்கும் புள்ள தனியாத்தான இருக்கும். அதான் ஒரே வெசனமா இருக்கு. அன்னாடும் இங்க வந்துட்டு போறதுக்கு ஆகுமா "
அப்போ சிறுசு ஒன்று கண்ணை கசக்கி கொண்டு வருகிறது.
"ஆத்தா ராஜேசண்ணன் அச்சு முருக்க புடுங்கிட்டு கொக்காணி காட்டுது ஆத்தா"  விக்கி விக்கி அழுதுகொண்டே.
"சரி சரி எஞ்சாமி. போச்சாது போ. நான் அவன என்னனு கேக்குறேன். டே ராசேசு. எண்டா புள்ள கூட ஒரியாடற. புள்ள பொக்குனு போச்சு பாரு. குடுறா புள்ள கிட்ட. அம்மா ஆள. நீ போய் வாங்கிக்க சாமி"


வாசலில் மணி மாமா
"ஏனம்மா ஐயன் இருக்கறாருன்களா?"
"வா மணி. வா சோறு உங்கலாம்"
"இல்லை இருக்கட்டுங்க. இன்னொரு நாள் சாவகாசமா வர்றேங்க"
"ஊட்டுல அம்மணி நல்லா இருக்குதா? சிட்டாளு?"
"நல்லா இருக்கறாங்க"
"பொறவு என்ன சமாச்சாரம்"
"ஒன்னுமில்லீங்க மேக்கால வீட்ல ஒரு சோலிங்க. பாதைக்கு குறுக்கால ஏதோ சாளை போட்டுட்டு எதுத்த வீட்டுக்காரன் பண்ணாட்டு பன்றானாமா. அதான் அய்யன கூட்டிட்டு போய் என்னனு கேக்கலாம்னு"
"அனாமத்த போகுதேன்னு அவன் பொழங்கரானா. அந்த கொல்லைல போறவன சீவக்கட்டைலயே போடோணும். போன வாரங்கூட தண்ணிய போட்டுட்டு இங்க வந்து ஒரே ரவுசு"
"அமாம்ங்க அவன் ஒரு மசையன். எந்நேரமும் ஒரே அக்கப்போரு"
"வெளிய வெய்ய காந்துது. கொடை எடுத்துட்டு போங்க. இந்தா வரும்போது சுருளு வாங்கிட்டு வாங்க. பொழுதானா சொள்ளை கடி தாங்கல"
கிளம்புமுன் தாத்தன் "டே சாமிகளா. ஒன்னுக்கொன்னு எசிரி போடாம பொட்டாட்டம் தூங்கோனும். என்ன?" என்று விட்டு கிளம்புகிறார்.


"என்ன ஆத்தா. தாத்தன் எங்கியோ போகுது?" கேட்டு கொண்டே வருகிறார் பாப்பாத்தி அக்கா.
"தாத்தனுக்கு சோலியிருந்தா கெட தங்குமா?"
"ரேசன் கடைல இன்னைக்கு சீமத்தண்ணி ஊத்தறாங்கத்தா. நீ வரல?"
"அடே மறந்தே மறந்துட்டேன். செத்த இரு. ஓட்டுக்க போகலாம்"
"சீல புதுசா?"
"அக்காமாத்தா எங்க மச்சாண்டார் பெஞ்சாதி நோம்பிக்கு எடுத்து குடுத்திச்சி. சரி இந்தாத்தா கோசாபழம்"
"இது ஏது"
"நம்ம அம்மிணியக்கா கடையில வாங்கியாந்தேன்"
"இந்த கீரைக்கார அம்மிணிய பாத்தியா?"
"இல்லையாத்தா அவளுக்கென்ன நோக்காடோ இன்னிக்கி காணோம்"
"தண்ணி வந்துதே இன்னிக்கு. புடுச்சி வெச்சுட்டியா?"
"ஆங். மூணு தோண்டில சாலுலயும் புடுச்சிட்டேன்."
அப்பொழுது பின்னொரு சிறுசு அருவாமனை அருகில் செல்ல
"டே சாமி. அருவாமனை. அக்கட்ட போ" என்று அதட்டுகிறாள்.

நினைவு கலைகிறது. காட்சி அகல்கிறது. கண்களில்த் துளிர்த்த கண்ணீர் நான் அடக்கியமையால் நெஞ்சினுள் நிறைகிறது.

இன்னும் பயணிக்கிறேன்.

அம்மா அடிக்கடி சொல்லும் "உம் பொறந்தவன கேளு"
கதிர் அண்ணனின் "மம்மானிய" தூக்கம்
பிரகாசின் "எத்தாச்சோடு வீங்கியிருக்கு"
மாமன் மகனில் நடுவலவன் ஜெகியின் "என்னடா உன்னோட ஒரே அக்கப்போரா இருக்கு"
அப்பாவின் "இந்த சொம்புல அண்ணாந்து குடிக்க முடியுதா"
பாட்டியின் "யாருடா இவன் திருவாத்தானா இருக்கான்"
தாத்தாவின் "மொள்ள சாமி மொள்ள"
ஆத்தாவின் "ராத்திரி பூரா ஒரே பெனாத்தலு"

இன்னும் ஏராளம் ஏராளம்.

இன்னும் நடந்துகொண்டே இருக்கிறேன் என் தெருக்களில்


கொங்கு தமிழ்க்கென்று ஒரு தனி அழகு. கொங்கு தமிழ் என்றில்லை, அனைத்து வட்டார மொழிக்கும் அதனுடைய தனிச்சிறப்பு என்றும் உண்டு. இன்று நகர்ப்புறத்தில் அது சற்று தொய்வடைந்த போதிலும் கிராமப்புறங்களில் அது தொன்மை மாறாமல் தான் இருக்கின்றது. திரைப்படங்களில் பெரும்பாலும் கொங்கு தமிழ் வழக்கு மிகுந்து வருவதில்லை. அதை கொடுக்க நினைப்பவர்களுக்கும் அதன் ஆக்கம் தெரிவதில்லை. வெறும் "லே" வருவதனால் மட்டும் அது நெல்லைத் தமிழ் ஆகாது. வெறும் "அங்கிட்டு இங்கிட்டு" திண்டுக்கல் தமிழ் ஆகாது. "வந்தாய்ங்க போனாய்ங்க" மதுரை தமிழ் ஆகாது. அது போல வெறும் "ங்க" மட்டும் கொங்குத்தமிழ் ஆகாது. கொங்கு மண்டலத்தை சேர்ந்த பலர் இருந்த போதிலும் குறிப்பிட்ட சிலரே அதன் வாசம் மாறாமல் காப்பாற்றுகின்றனர்.


கீழ்க்காணும் சுட்டியில் கமலஹாசனின் கற்றுணர்ந்த கொங்குதமிழை விட சரளாவின் வாழ்வோடு கலந்த கொங்குதமிழில் அதிக ஜீவன் இருப்பது தெரியும்.

மற்றும் ஒரு சரளாவின் கொங்கு தமிழ்

அதே போல் கவுண்டரும் மணிவண்ணனும் 


இலக்கியத்தில் கொங்கு தமிழை அதிகம் வாசித்ததில்லை. யாருக்கேனும் அதன் பரிச்சயம் இருந்தால் எனக்கு சற்று அறிமுகப்படுத்தமுடியுமா?

பிரியமான பிரிவு

என் உதடுகள் பிரிந்தன
         உன்னுடன் மகிழ்ந்து சிரிக்க....

என் கரங்கள் பிரிந்தன
         உன் விரல்களைப் பிடிக்க....

என் இமைகள் பிரிந்தன
         உன் முகம் கண்டு ரசிக்க....

என் கால்கள் பிரிந்தன
         உன்னுடன் இறுதிவரை நடக்க....
         

தொலை(ந்த) பேச்சு

ஊருக்குத் தொலைபேசுகிறேன்

அம்மா கூறுகிறாள்
"தாத்தாவுக்கு உடல் நலம் சரியில்லை" என்று.
இயலாத பதட்டத்துடன்
"அடடே அப்படியா. இப்பொழுது பரவாயில்லையா?" நான்.

அப்பா கூறுகிறார்
"------க்கு குழந்தை பிறந்திருக்கிறது. அவ்வளவு அழகு" என்று.
செயற்கை வியப்புடன்
"ஓ. அருமை. யாரைப் போல இருக்கிறது?" நான்.

இளவல் கூறுகிறான்
"இந்த பிறந்தநாளுக்காவது நீ இங்கு இருந்திருக்கலாம். பச்" என்று.
வறண்ட சிரிப்புடன்
"அதனால் என்ன. புதுச் சட்டையில் எடுத்த புகைப்படம் அனுப்பு" நான்.

நான் கூறுகிறேன்
"இன்னும் ஆறு மாதங்கள் என் வேலை நீட்டிக்கப்படும் போல தெரிகிறது" என்று.
நீண்ட அமைதியுடன்
"ஓ அப்படியா. உன்னை இப்பொழுதே பார்க்க வேண்டும் போல் இருக்கிறது" அவர்கள்.




Saturday 5 February 2011

ஒரு வார்த்தை

ஒற்றை வார்த்தையில்
உன்னை விவரிக்கச் சொன்னாய்.

யோசித்தேன்.
எனக்குக் "குழப்பம்"தான் மிஞ்சியது.


ஆட்டோக்ராப்

















     நினைத்துப் பார்த்தேன்
அன்றலர்ந்த பூவாய் நினைவுகள்

எழுத நினைத்தேன்
கண்ணீர் துளிகளாய் எழுத்துக்கள்

உறங்கத் துடித்தேன்
பிரிவுப் படுக்கையில் முட்கள்

நட்பை அழைத்தேன்
கடந்ததைக் கூறின நாட்கள்

     - கல்லூரி இறுதி நாட்களில் எழுதியது

Thursday 3 February 2011

பெண்ணாதிக்கம்


"பொண்ணுங்க மனசு பேண்ட் சைஸ் மாதிரி
அப்பப்ப மாறிக்கிட்டே இருக்கும்
பசங்க மனசு சட்டை சைஸ் மாதிரி
எப்பவாவது தான் மாறும்"

அது என்னவோ வலைபதிவில் எழுத ஆரம்பித்ததில் இருந்து இது போன்ற லாஜிக் இல்லாத பல விஷயங்கள் தோன்றி இம்சிக்கின்றன. அதுவும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருக்கும் பொழுதுதான் இவை என்னை புரட்டி புரட்டி எடுக்கிறது. இதுகாரும் பார்த்த தமிழ் சினிமாக்களின் பாதிப்பாகக்கூட இருக்கலாம். "அப்படியே இருந்தாலும் எப்படி நீ இப்படி யோசிக்கலாம்" என்று மகளிர் அணி உடனே பதறிக்கொண்டு என்னைப் பந்தாட புறப்பட வேண்டாம். நான் எழுத வருவது இதை பற்றி அல்ல.

பெண்கள். "இஞ்சினியரிங் படிப்பும் பொண்ணுங்களும் ஒன்னு. எவ்வளவு படிச்சாலும் புரியாது". சென்ற காலங்களில் பெண்களைப் பற்றி என்னிடம் கேட்டால் என்னுடைய பதில் இதுவாகத்தான் இருக்கும். பெண்கள் மீது ஒரு பத்தாம்பசலித்தனமான கண்ணோட்டத்தையே இந்த சமூகம் நமக்கு கொடுத்திருப்பதாக உணர்கிறேன். பெண்கள் மீதான பார்வை சற்று மேலோட்டமானதாகவும் அடிப்படை இல்லாததாகவும் இந்த சமூகம் சித்தரித்து வந்திருக்கிறது. பெண் என்றால் பரிதாபத்துக்குரியவள், வெகுளி, அடிமைப்படுத்தப்பட்டவள் என்று காலங்காலமாக ஆண்களுக்கு போதித்ததோடல்லாமல் பெண்களையும் நம்ப வைத்து மழுங்கடித்திருக்கின்றது இந்த சமூகம். உண்மை என்னவென்று சற்று ஊன்றி கவனித்தால் இது எவ்வளவு தவறு என்று விளங்கக்கூடும்.

இன்று பெண்களுடைய அதீத வளர்ச்சி பற்றி பக்கம் பக்கமாக பேசியும் எழுதியும் வருகின்றனர். எது வளர்ச்சி? ஆணுக்கு போட்டியாய் எல்லாவற்றிலும் சரிசமமாய் விளங்குவதா வளர்ச்சி. 33 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாய் முன்னேறினால் தான் வெற்றியா?  யார் ஆணை ஒரு இலக்காக நிர்ணயித்தது? ஆணை ஜெயிப்பது தான் பெண்ணின் பிறவிப்பயன் போல இன்று பெண்கள் ஓடிக்கொண்டு இருக்கின்றனர்.

பெண்ணுக்கு என்று தனித்தன்மை கிடையாதா. பெண்களுடைய தனித்தன்மைகளை பட்டியலிட்டால் ஆண் 3.3 சதவிகிதம் கூட நெருங்க மாட்டான். பெண்கள் இயங்கும் தளம் வேறு. ஆண்கள் இயங்கும் தளம் வேறு. பெண்ணும் ஆணும் அவரவர் தளத்தில் வெற்றிகரமாக இயங்க ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கவேண்டுமே ஒழிய ஒருவர் தளத்தில் மற்றவர் இயங்க முற்படுவது எப்படி சரியாகும். ஆணைப் போல உடையணியலாம், வேலைகள் செய்யலாம், அரசியல் நடத்தலாம், இன்னபிறவற்றையும் செய்யலாம். ஆனால்அது குரங்கைப்பார்த்து மயில் மரத்துக்கு மரம் தாவும் முயற்சியே தவிர முன்னேற்றம் இல்லை. விபரீதம்.
 

படித்ததும் ரசித்ததும் - 1

Monday 31 January 2011

நண்பனாய் நான் உனக்கு

"காதலித்தவளை பிரிய நேரிட்டதடா.
தோல்வியுற்றேன்" என்றாய்.
எதிர்பார்த்தேன்.
இது நடந்துவிடக் கூடாதென்று.
நடத்திக்காட்டியது விதி.

போரிட்டது
பாசமும் நேசமும்
பணிந்தது
காதலும் விருப்பும்

"கூறினேன் அன்றே. கேட்கவில்லை நின்றே"
உன் மீது குற்றம் சுமத்தலாம்.
நான் குற்றமற்றவனாக இருந்தால்.

ஜோடிக்கிளிகள்
ஆடித்திரிந்தது கண்டு
பாடிக்களித்ததில் பொய்யில்லை

அகமதில் மகிழ்ந்திருந்தும்
அதை வெளிக்கொணரா
முகமதில் மெய்யில்லை

கற்பனைகள் ஆயிரம்
கனவுகள் ஈராயிரம்
வடிக்கவிருந்தேன் பா ஆயிரம்
மனமின்று
சுக்குச்சுக்காய் நூறாயிரம்

"அது எப்படி?
காதலித்தவன் நான்.
பிரிந்தது காலத்தின் கட்டாயம்.
நியாயப்படி கவலை என்னுடையது.
உனக்கு என்ன?" கேட்கலாம் நீ.

தாய் பிள்ளையை பெற்றெடுக்க
ஆவலுடன் காத்திருந்த
தந்தையின் நிலையடா என்னது.

சுமந்த வலி அறியாமல் இருக்கலாம்
பிரிந்த வலி உணராமல் என்ன?

விதையை தொலைத்தவன் கண்ணீர்
என் கண்களில் ஈரமாய்

விதையை விதைத்து
விதைத்தது விளைந்து
விளைந்தது பூத்து
பூத்தது காய்த்து
காய்த்தது கனிந்து
அக்கனியையும் தொலைத்த
உன் கதறல்
என் செவிகளில் முள்ளாய்
என் சிந்தையின் கசப்பாய்
என்றும்

உன் காதலை
நான் காதலித்தேனடா.

தோல்விதான் எனக்கும்.

                                     -  என்றோ எழுதியது

ஏய் பெண்ணே..



ஏய் பெண்ணே..

நீ அழுவதனால் 
உன் கண்களில்
இருந்த என்னை
உன் கண்ணீர் இழுத்துச்
செல்கின்றது...

சீக்கிரம் சிரித்து விடடி...

உன் கன்னக்குழிகளில் விழுந்தாவது
பிழைத்துக்
கொள்கிறேன்.                                                                                                                                                                                    

ஏன்?

அழைத்திட பெயர்
திணைப்படி உயர்
பகுத்திட ஆண்
முகவரிக்கு முகம்
இவை போதாதா என்னை இனம்காண?

உரையாட மொழி
உணர்ந்திட மனிதம்
உறவாட அன்பு
உறுத்தாத பண்பு
இவை போதாதா என்னுடன் பழக?

கருமத்தில் நேர்மை
கருத்தில் செறிவு
அறிவின் திறன்
அகத்தில் தீரம்
இவை போதாதா கண்ணியமாய் வாழ?

பின் எதற்காக இந்த சாதி?

என் சமூகத்தால் என் மீது திணிக்கப்பட்ட ஒன்றை
நான் எதற்காகச் சுமக்க வேண்டும்?

என்னை விட
என் சமூகத்திற்குத் தான்
மிகுந்த அக்கறை போலும்

என் சாதியைப் பற்றி

நான் கேள்விப்பட்டதோடு சரி.....

Sunday 30 January 2011

சிகையலங்காரம்

சற்று முன்பு தான் சிகை திருத்திக் கொண்டு வந்தேன். திருத்தி விட்டவர் இஸ்தான்புல்காரர். ஒரு ஐந்தாறு முறை அவரிடம் தான் முடி வெட்டிக்கொண்டேன். ஆனால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக வெட்டி விடுகிறார். விதவிதமாக என்றால் நன்றாக இருக்கிறதா இல்லையா? அதற்கு மட்டும் எனக்கு பதில் தெரிந்ததே இல்லை. இவரிடம் என்றில்லை. சிறு வயதில் இருந்தே. எனக்கு நினைவு தெரிந்து பலர் என் தலையில் கை வைத்து தொழில் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆலமரத்தடியில் ஈயோட்டியவர், பெட்டிக்கடை பார்பர், ஐந்து ரூபாய்க்கு வெட்டுபவர் இப்படி பலர்.

அம்மாவின் ஒரே கோரிக்கை, முடி வெட்டுவதென்றால் "ஒட்ட நறுக்க" வேண்டும். இப்படி ஒரு சிம்பிள் கோரிக்கை என்பதால் ஆலமரத்தடிக்காரரே போதும் என்றாகிவிட்டது. மொட்டையடித்து இரண்டு வாரமானால் எப்படி இருக்குமோ அப்படி ஸ்டைலாக வெட்டி விடுவார் நமது ஆலமரத்தடிகாரர் . நன்றாக சட்டியை கவிழ்த்து வைத்தது போன்று (சமீப காலமாக இது நிஜமான ஸ்டைலாக மாறிவிட்டதில் ஒரு அல்ப சந்தோஷம்). இந்த வைபவத்திற்கு என்னை அழைத்து செல்லும் கதிர் அண்ணனும் மூர்த்தி அண்ணனும் இதற்கு உடந்தை. இது போல பலபேர் விளையாண்ட சிகை என்பதால் இப்படித்தான் வெட்டி கொள்ள வேண்டும் என்ற சிந்தனையும் "ஒட்ட நறுக்க"ப்பட்டு விட்டது.

வீட்டிற்கு அருகில் ஜோதி அண்ணன் வந்ததால் மேற்கூறிய அவலம் சற்று குறைந்தது. ரசனைவாதியான அவரிடம் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் என்னை ஒப்படைத்து விட்டிருந்தேன். கல்லூரி முடித்து பெங்களூர் சென்ற பிறகும் கூட அவர்தான். எனக்கு எப்படி வெட்ட வேண்டும் என்பது அவருக்கும் அவர் தம்பி சம்பத் அண்ணனுக்கும் தெரிந்திருந்ததால், இப்படிதான் வெட்ட வேண்டும் என்று கூற எனக்கு வாய்ப்பு வந்ததில்லை. முதல் இங்கிலாந்து பயணத்தில் தான் அந்த தேவை முளைத்தது. ஊரில் ஆலமரத்தடிக்காரர் என்றால் இங்கு ஒரு பாகிஸ்தான்காரர். கவிழ்த்த சட்டி கட்டிங் தான். ஆனால் சற்றே அதிகமாக முடி இருக்கும். அது தான் ஒரே வித்தியாசம். கோவைக்கு சென்றால் ஒபராய்க்காரர்களிடம் சற்று திருத்திக்கொண்டால் தான் நிம்மதியாய் இருக்கும் (வீடு மாறி விட்டதால் கடை மாற்றம்).

இது போல எப்படி வெட்ட வேண்டும் என்று சொல்லத்தெரியாமல் போனதிலும் ஒரு நன்மை. ஏழு மாதங்கள் ரொமேனியாவில் குப்பை கொட்ட வேண்டிய  கட்டாயம் வந்தது. மொழி தெரியாத ஊர். ஆங்கிலம் தெரியாத மக்கள். குடியிருந்த வீட்டருகில் ஒரு சலூன். முடி வெட்டுவது அறுபது வயது பாட்டியம்மா. கேட்கவா வேண்டும். அங்கு செல்லும் முன் அவ்வூர்க்கார நண்பர்களிடம் மீடியமாக வெட்டுவதென்றால் என்ன கூறுவதென்று மட்டும் ரோமேனியன் மொழியில் கேட்டுச் சென்று வெட்டிய அழகுதான் கீழே உள்ள புகைப்படத்தில் காணப்படுவது.

அந்த பாட்டியம்மா வேறு என்னவெல்லாமோ கேட்டார். எழவு நமக்கு புரிந்தால்தானே. எல்லாவற்றிற்க்கும் தலையாட்டிக்கொண்டு வந்ததன் விளைவு தான் இது.

http://www.youtube.com/watch?v=wgYT9k4W06Y&feature=related
மேலே உள்ள சுட்டியில் கவுண்டர் கூறுவது போல தான் என் நிலைமை.
 "ஆலமரத்தடிக்காரர் சரியில்லைன்னு அஞ்சு ரூவா பார்பர் கிட்ட வெட்டினேன். பாகிஸ்தான் பார்பர் சரியில்லைன்னு இஸ்தான்புல் பார்பர் கிட்ட வெட்டினேன். இப்போ எப்படி வெட்டணும்னு எனக்கும் தெரியல இவனுகளுக்கும் தெரியல" :-)

Thursday 27 January 2011

வெயில்

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதை நான் உணர்ந்தே வளர்ந்திருக்கிறேன். சிறுவயதில் நண்பகல் வெயிலில் விளையாடும் பொழுதும் சரி. வளர்ந்து ஏசி ரூமில் வேலையில் அமர்ந்த பிறகும் சரி. வெயிலின் உக்கிரத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடிந்ததே இல்லை. பிசுபிசுவென்ற வியர்வையும், தொண்டை வறண்டு போகும் தாகமும், கண்கள் கூசும் அந்த பிரகாசமும், சட்டென்று களைக்க வைத்திடும் அதன் சுபாவமும் சொல்லி மாளாது. அந்த வெயிலில் வெளியே கிளம்புவதென்றால் ஒரு மலைப்பு தோன்றுமே. நீண்ட நடையின் இடையே நிழல் தேடும் கண்களும் இளைப்பாற எங்கும் கால்களும் வெயிலின் கொடுங்கதை கூறும்.

 நமது ஊரின் வேனிற்காலம் இப்படியென்றால் இங்கு இங்கிலாந்திலோ வெயிலை வரவேற்று கொண்டாடுகின்றனர். உறுத்தாத சூரியன் இயல்பான தென்றல் என்று இதயம் வருடும் வேனிற்காலம் இங்கு. கடுங்குளிர் கால வசத்திலிருந்து மீண்டு வெளிஉலகம் காணும் திருவிழா. சூரியன் இங்கு ஒரு ஹீரோவாகவே தோன்றுகிறார். வசந்தம் அருளிய மலர்களுடன் தென்றலோடு கொஞ்சி மகிழும் மரங்களும், காணாது கண்ட விருந்தினரை வரவேற்க புத்தாடை அணிந்தது போன்று தவழ்ந்து திரியும் நதியினமும், பருத்தியில் பூத்து கடலினில் குளித்து எங்கும் நிறைந்திருக்கும் மக்கள் கூட்டமும் அடேயப்பா. சாலமன் பாப்பையா பாணியில் கூறவேண்டுமானால் 'அருமையா அருமை'.
ஆனால் வெயில் வந்தவுடன் இவர்கள் செய்யும் அளப்பறைகளை கண்டு ரொம்ப அலட்டிக்கொள்கிறார்கள் என்று நினைத்தது உண்டு. ஆனால் இரண்டு குளிர் காலங்களை கடந்த பிறகு தான் புரிந்தது வெயில் இவர்களுக்கு எவ்வளவு அதிசயம் என்று. நானும் அந்த அதிசயம் வர காத்துக்கொண்டிருக்கிறேன்.

இது இப்படி இருக்க நேற்று முன்தினம் பேஸ்புக்கில் வலம் வந்து கொண்டிருக்கையில் புகைப்படம் ஒன்றை கடந்தேன். நண்பன் ஒருவனது கல்லூரிப் புகைப்படம். ஈரோட்டைச் சேர்ந்தவன். அந்த புகைப்படத்தில் அவனும் அவன் நண்பர்களும் கல்லூரி விடுதியின் மாடியில் நண்பகல் வெயிலில் நிற்பது போன்ற புகைப்படம். அதைப் பார்த்தவுடன் சட்டென்ற ஒரு பரவசம். என்னவென்று சரியாக கணிக்க முடியவில்லை. சிறிது நேரம் கழித்து தான் உறைத்தது. உறைத்தது உண்மை மட்டுமல்ல கொங்கு மண்டல வெயிலும் தான். அந்த வெயில் தான் எனை சிறிது நேரம் தன் பிடியில் ஆட்கொண்டிருந்திருக்கிறது. சுள்ளென்று உடல் முழுவதும் பரவி சிலிர்த்தது. என்னையா பிடிக்காது என்கிறாய்? என்று வெயில் என்னை கேள்வி கேட்டது. அந்த உணர்வுக்கு என்ன காரணம்? என் வயதல்லவா வெயிலுக்கும் எனக்கும் உள்ள பந்தத்தின் வயது. வெயிலுடனே அல்லவா என் உடலும் உள்ளமும் பயணப்பட்டு இருக்கிறது. அதுதான் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆத்ம தோழனை கண்டது போன்ற ஒரு உணர்ச்சி பிரவாகம். அந்த உணர்வு என்னை இன்னும் விட்டு விலகவில்லை. எனக்கும் அது பிடித்து தான் இருக்கிறது. இங்கு போல் வெயில்காலத்தில் அன்பை பொழிவதும், குளிர் காலத்தில் புறக்கணிப்பதுமான வேலை என் வெயிலுக்கு கிடையாதே. என்றும் நிலையான ஒரு சீரான அன்பு. அந்த வெயிலை ஆரத்தழுவி ஆசைதீர பருக மனம் வேட்கை கொள்கிறது. அடுத்த விடுமுறையில் கோவைக்கு செல்கையில் தான் அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
அதுவரை இங்கிலாந்து வெயிலை எதிர் நோக்கி நான்.
வெயிலின் அருமை நிழலில்.......

Thursday 13 January 2011

அவள் பெயர் மானஸா




மௌன மொழியாள் 
செவ்விதழில் தேன் சொரிவாள்
கருநீல விழியாள் 
சிரிப்பதனில் உளம் கவர்வாள்

வாகை மலராள்
தோகையில்லா மயிலாள்
கமல நிறத்தாள்
பார்க்க கண் பறித்தாள்

சிந்தைச் செருக்குடையாள் 
உயரிய மாண்புடையாள்
அன்னத்தை ஒத்த நடையாள்
அகமதில் தீரம் தரித்தாள்

மனம் ஏங்கும் சிற்றிடையாள்
முத்தம் தந்து மயக்குவாள்
பிறர் என்றால் தயங்குவாள்
என் தோளில் உறங்குவாள்

செல்ல அடி கொடுப்பாள்
அழக் கண்டு பதறுவாள்
கண்டவுடன் ஆர்ப்பரிப்பாள்
கண்கள் பனிக்க விடைகொடுப்பாள்

ஒரு நொடியேனும் நில்லாள்
ஆடிப்பாடி இன்புருவாள்
இல்லமெங்கும் நிறைந்தாள் இல்லையெனில் ஏங்க வைப்பாள்

அவள் பெயர் மானஸா!!!

Wednesday 12 January 2011

பொங்கலோ பொங்கல்


பொங்கல் பானையோடு மகிழ்ச்சியும் பொங்கிட
கரும்பின் இனிப்போடு உள்ளமும் நிறைந்திட
பழையன கழிப்போடு துயரங்கள் விலகிட
பண்டிகை களிப்போடு உறவுகள் கலந்திட
என்றும் அகத்தோடு மேன்மை தங்கிட
இயற்கை அன்போடு யாவும் தந்திட

பொங்கலோ பொங்கல்

விட்டத்தை பார்த்து யோசித்தது

புத்தாண்டு

கடிகார முட்களும்
குடிகார மக்களும்
இணையும் பொழுது பிறப்பது


Monday 3 January 2011

டேப் கேசட்

"டேய் இந்த பக்கம் முடிஞ்சுதுனா கேசட்ட திருப்பி போடு. நான் குளிச்சிட்டு வரேன்"
அப்பா வழக்கமாக சொல்வது. டேப் கேசட்டில் பதிவு செய்து டேப் ரிக்கார்டரில் கேட்கும் அந்த இசையின் சுகம் ஒரு தனி வகை. தொலைக்காட்சியிலும் வெளியிடங்களிலும் அரைகுறையாய் கேட்ட பாடல்களை தேர்வு செய்து, அதை காகிதத்தில் எழுதி வைத்து, அதிலும் குறைந்த பட்சம் 12 பாடல்கள் சேர்ந்த பிறகு அந்த பாடல்களை கேசட்டில் பதிவு செய்து கேட்கும் பொழுது வருமே ஒரு நிறைவு. அடடா.

AM ராஜா முதல் இளையராஜா வரை அப்பா எனக்கு அடையாளம் காட்டியது இது போன்ற கேசட்டுகளில் தான். அவர் சேமித்து வைத்திருந்த கேசட்டுகள் அடங்கிய பெட்டி முன்பு கர்மசிரத்தையாய் அமர்ந்து ஒவ்வொன்றாக எடுத்து பார்த்து, அதில் ஒன்றை தேர்வு செய்து ஒலிக்கச் செய்யும் காட்சி அப்படியே என் கண்முன் நிழலாடுகிறது. நீண்ட நாட்கள் ஒலிக்கப்படாமல் வைத்திருக்கும் கேசட்டுகள் சில சுழலாது சற்று இறுக்கமடைந்து இருக்கும். அதன் மையத்தில் விரல் விட்டு அதனை சுற்றி விட்டு பின்பு ஒலிக்கச் செய்வார்.

அப்பாவிடம் இருந்தவை வெறும் கேசட்டுகள் இல்லை. அவை தாங்கிய இசையையும் தாண்டி பலவற்றை பறைசாற்றுவதாக இருந்தது. அது பதிவு செய்யப்பட்ட பதிவுக்கூடம் அங்கிருப்பவர்களுடன் அப்பா கொண்டிருந்த நட்பு, பாடல் தெரிவு செய்த காலநிலை என்று பலவற்றை கூறும் நினைவு சின்னங்களாகவே இருந்தது. ஒரு கேசட்டில் பதிவு செய்யப்படும் இசையின் செறிவு அதை பதிவு செய்பவர் ரசனையை பொறுத்து இன்னும் பன்மடங்காகும். பதிவு செய்பவர் நமது அலைவரிசையை சேர்ந்தவராக இருக்கும் பொழுது சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு பாடல் ஒலிக்கும் பொழுதும் அதன் பின்னணியில் உள்ள செய்திகளும் , அதற்கு தொடர்புடையவர்களை பற்றிய நினைவுகளையும் அப்பா கூறுவதை கேட்க அவ்வளவு சுவையாக இருக்கும்.

அப்பாவின் இசை ரசனை சற்று அலாதியான ஒன்று. ஒரு கேசட்டில் உள்ள அனைத்து பாடல்களும் ஒரே விதமான மனநிலை சார்ந்ததாக இருக்க வேண்டும் என விரும்புவார். விவரம் அறிந்த சிறு வயதில் நான் பாடல்களை தெரிவு செய்யும் பொறுப்பை (?) ஏற்று கொண்ட பொழுது, சொதப்பலான பாடல்களை புகுத்து பல முறை அப்பாவிடம் வாங்கிக்கட்டிகொண்டதுண்டு. அந்த பாடல்கள் ஒலிக்கும் பொழுது அவ்வப்போது டோஸ்கள் புதுப்பிக்கப்படுவதும் உண்டு.

இன்றும் சில பாடல்களை கேட்டு முடிக்கும் தருவாயில் என்னையும் அறியாமல் நான் கேசட்டில் கேட்டு பழக்கப்பட்ட அடுத்த பாடல் என் நினைவில் வரும். அதன் சுகமான மேற்கூறிய நினைவுகளையும் சேர்த்து.