Monday 31 January 2011

நண்பனாய் நான் உனக்கு

"காதலித்தவளை பிரிய நேரிட்டதடா.
தோல்வியுற்றேன்" என்றாய்.
எதிர்பார்த்தேன்.
இது நடந்துவிடக் கூடாதென்று.
நடத்திக்காட்டியது விதி.

போரிட்டது
பாசமும் நேசமும்
பணிந்தது
காதலும் விருப்பும்

"கூறினேன் அன்றே. கேட்கவில்லை நின்றே"
உன் மீது குற்றம் சுமத்தலாம்.
நான் குற்றமற்றவனாக இருந்தால்.

ஜோடிக்கிளிகள்
ஆடித்திரிந்தது கண்டு
பாடிக்களித்ததில் பொய்யில்லை

அகமதில் மகிழ்ந்திருந்தும்
அதை வெளிக்கொணரா
முகமதில் மெய்யில்லை

கற்பனைகள் ஆயிரம்
கனவுகள் ஈராயிரம்
வடிக்கவிருந்தேன் பா ஆயிரம்
மனமின்று
சுக்குச்சுக்காய் நூறாயிரம்

"அது எப்படி?
காதலித்தவன் நான்.
பிரிந்தது காலத்தின் கட்டாயம்.
நியாயப்படி கவலை என்னுடையது.
உனக்கு என்ன?" கேட்கலாம் நீ.

தாய் பிள்ளையை பெற்றெடுக்க
ஆவலுடன் காத்திருந்த
தந்தையின் நிலையடா என்னது.

சுமந்த வலி அறியாமல் இருக்கலாம்
பிரிந்த வலி உணராமல் என்ன?

விதையை தொலைத்தவன் கண்ணீர்
என் கண்களில் ஈரமாய்

விதையை விதைத்து
விதைத்தது விளைந்து
விளைந்தது பூத்து
பூத்தது காய்த்து
காய்த்தது கனிந்து
அக்கனியையும் தொலைத்த
உன் கதறல்
என் செவிகளில் முள்ளாய்
என் சிந்தையின் கசப்பாய்
என்றும்

உன் காதலை
நான் காதலித்தேனடா.

தோல்விதான் எனக்கும்.

                                     -  என்றோ எழுதியது

ஏய் பெண்ணே..



ஏய் பெண்ணே..

நீ அழுவதனால் 
உன் கண்களில்
இருந்த என்னை
உன் கண்ணீர் இழுத்துச்
செல்கின்றது...

சீக்கிரம் சிரித்து விடடி...

உன் கன்னக்குழிகளில் விழுந்தாவது
பிழைத்துக்
கொள்கிறேன்.                                                                                                                                                                                    

ஏன்?

அழைத்திட பெயர்
திணைப்படி உயர்
பகுத்திட ஆண்
முகவரிக்கு முகம்
இவை போதாதா என்னை இனம்காண?

உரையாட மொழி
உணர்ந்திட மனிதம்
உறவாட அன்பு
உறுத்தாத பண்பு
இவை போதாதா என்னுடன் பழக?

கருமத்தில் நேர்மை
கருத்தில் செறிவு
அறிவின் திறன்
அகத்தில் தீரம்
இவை போதாதா கண்ணியமாய் வாழ?

பின் எதற்காக இந்த சாதி?

என் சமூகத்தால் என் மீது திணிக்கப்பட்ட ஒன்றை
நான் எதற்காகச் சுமக்க வேண்டும்?

என்னை விட
என் சமூகத்திற்குத் தான்
மிகுந்த அக்கறை போலும்

என் சாதியைப் பற்றி

நான் கேள்விப்பட்டதோடு சரி.....

Sunday 30 January 2011

சிகையலங்காரம்

சற்று முன்பு தான் சிகை திருத்திக் கொண்டு வந்தேன். திருத்தி விட்டவர் இஸ்தான்புல்காரர். ஒரு ஐந்தாறு முறை அவரிடம் தான் முடி வெட்டிக்கொண்டேன். ஆனால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக வெட்டி விடுகிறார். விதவிதமாக என்றால் நன்றாக இருக்கிறதா இல்லையா? அதற்கு மட்டும் எனக்கு பதில் தெரிந்ததே இல்லை. இவரிடம் என்றில்லை. சிறு வயதில் இருந்தே. எனக்கு நினைவு தெரிந்து பலர் என் தலையில் கை வைத்து தொழில் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆலமரத்தடியில் ஈயோட்டியவர், பெட்டிக்கடை பார்பர், ஐந்து ரூபாய்க்கு வெட்டுபவர் இப்படி பலர்.

அம்மாவின் ஒரே கோரிக்கை, முடி வெட்டுவதென்றால் "ஒட்ட நறுக்க" வேண்டும். இப்படி ஒரு சிம்பிள் கோரிக்கை என்பதால் ஆலமரத்தடிக்காரரே போதும் என்றாகிவிட்டது. மொட்டையடித்து இரண்டு வாரமானால் எப்படி இருக்குமோ அப்படி ஸ்டைலாக வெட்டி விடுவார் நமது ஆலமரத்தடிகாரர் . நன்றாக சட்டியை கவிழ்த்து வைத்தது போன்று (சமீப காலமாக இது நிஜமான ஸ்டைலாக மாறிவிட்டதில் ஒரு அல்ப சந்தோஷம்). இந்த வைபவத்திற்கு என்னை அழைத்து செல்லும் கதிர் அண்ணனும் மூர்த்தி அண்ணனும் இதற்கு உடந்தை. இது போல பலபேர் விளையாண்ட சிகை என்பதால் இப்படித்தான் வெட்டி கொள்ள வேண்டும் என்ற சிந்தனையும் "ஒட்ட நறுக்க"ப்பட்டு விட்டது.

வீட்டிற்கு அருகில் ஜோதி அண்ணன் வந்ததால் மேற்கூறிய அவலம் சற்று குறைந்தது. ரசனைவாதியான அவரிடம் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் என்னை ஒப்படைத்து விட்டிருந்தேன். கல்லூரி முடித்து பெங்களூர் சென்ற பிறகும் கூட அவர்தான். எனக்கு எப்படி வெட்ட வேண்டும் என்பது அவருக்கும் அவர் தம்பி சம்பத் அண்ணனுக்கும் தெரிந்திருந்ததால், இப்படிதான் வெட்ட வேண்டும் என்று கூற எனக்கு வாய்ப்பு வந்ததில்லை. முதல் இங்கிலாந்து பயணத்தில் தான் அந்த தேவை முளைத்தது. ஊரில் ஆலமரத்தடிக்காரர் என்றால் இங்கு ஒரு பாகிஸ்தான்காரர். கவிழ்த்த சட்டி கட்டிங் தான். ஆனால் சற்றே அதிகமாக முடி இருக்கும். அது தான் ஒரே வித்தியாசம். கோவைக்கு சென்றால் ஒபராய்க்காரர்களிடம் சற்று திருத்திக்கொண்டால் தான் நிம்மதியாய் இருக்கும் (வீடு மாறி விட்டதால் கடை மாற்றம்).

இது போல எப்படி வெட்ட வேண்டும் என்று சொல்லத்தெரியாமல் போனதிலும் ஒரு நன்மை. ஏழு மாதங்கள் ரொமேனியாவில் குப்பை கொட்ட வேண்டிய  கட்டாயம் வந்தது. மொழி தெரியாத ஊர். ஆங்கிலம் தெரியாத மக்கள். குடியிருந்த வீட்டருகில் ஒரு சலூன். முடி வெட்டுவது அறுபது வயது பாட்டியம்மா. கேட்கவா வேண்டும். அங்கு செல்லும் முன் அவ்வூர்க்கார நண்பர்களிடம் மீடியமாக வெட்டுவதென்றால் என்ன கூறுவதென்று மட்டும் ரோமேனியன் மொழியில் கேட்டுச் சென்று வெட்டிய அழகுதான் கீழே உள்ள புகைப்படத்தில் காணப்படுவது.

அந்த பாட்டியம்மா வேறு என்னவெல்லாமோ கேட்டார். எழவு நமக்கு புரிந்தால்தானே. எல்லாவற்றிற்க்கும் தலையாட்டிக்கொண்டு வந்ததன் விளைவு தான் இது.

http://www.youtube.com/watch?v=wgYT9k4W06Y&feature=related
மேலே உள்ள சுட்டியில் கவுண்டர் கூறுவது போல தான் என் நிலைமை.
 "ஆலமரத்தடிக்காரர் சரியில்லைன்னு அஞ்சு ரூவா பார்பர் கிட்ட வெட்டினேன். பாகிஸ்தான் பார்பர் சரியில்லைன்னு இஸ்தான்புல் பார்பர் கிட்ட வெட்டினேன். இப்போ எப்படி வெட்டணும்னு எனக்கும் தெரியல இவனுகளுக்கும் தெரியல" :-)

Thursday 27 January 2011

வெயில்

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதை நான் உணர்ந்தே வளர்ந்திருக்கிறேன். சிறுவயதில் நண்பகல் வெயிலில் விளையாடும் பொழுதும் சரி. வளர்ந்து ஏசி ரூமில் வேலையில் அமர்ந்த பிறகும் சரி. வெயிலின் உக்கிரத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடிந்ததே இல்லை. பிசுபிசுவென்ற வியர்வையும், தொண்டை வறண்டு போகும் தாகமும், கண்கள் கூசும் அந்த பிரகாசமும், சட்டென்று களைக்க வைத்திடும் அதன் சுபாவமும் சொல்லி மாளாது. அந்த வெயிலில் வெளியே கிளம்புவதென்றால் ஒரு மலைப்பு தோன்றுமே. நீண்ட நடையின் இடையே நிழல் தேடும் கண்களும் இளைப்பாற எங்கும் கால்களும் வெயிலின் கொடுங்கதை கூறும்.

 நமது ஊரின் வேனிற்காலம் இப்படியென்றால் இங்கு இங்கிலாந்திலோ வெயிலை வரவேற்று கொண்டாடுகின்றனர். உறுத்தாத சூரியன் இயல்பான தென்றல் என்று இதயம் வருடும் வேனிற்காலம் இங்கு. கடுங்குளிர் கால வசத்திலிருந்து மீண்டு வெளிஉலகம் காணும் திருவிழா. சூரியன் இங்கு ஒரு ஹீரோவாகவே தோன்றுகிறார். வசந்தம் அருளிய மலர்களுடன் தென்றலோடு கொஞ்சி மகிழும் மரங்களும், காணாது கண்ட விருந்தினரை வரவேற்க புத்தாடை அணிந்தது போன்று தவழ்ந்து திரியும் நதியினமும், பருத்தியில் பூத்து கடலினில் குளித்து எங்கும் நிறைந்திருக்கும் மக்கள் கூட்டமும் அடேயப்பா. சாலமன் பாப்பையா பாணியில் கூறவேண்டுமானால் 'அருமையா அருமை'.
ஆனால் வெயில் வந்தவுடன் இவர்கள் செய்யும் அளப்பறைகளை கண்டு ரொம்ப அலட்டிக்கொள்கிறார்கள் என்று நினைத்தது உண்டு. ஆனால் இரண்டு குளிர் காலங்களை கடந்த பிறகு தான் புரிந்தது வெயில் இவர்களுக்கு எவ்வளவு அதிசயம் என்று. நானும் அந்த அதிசயம் வர காத்துக்கொண்டிருக்கிறேன்.

இது இப்படி இருக்க நேற்று முன்தினம் பேஸ்புக்கில் வலம் வந்து கொண்டிருக்கையில் புகைப்படம் ஒன்றை கடந்தேன். நண்பன் ஒருவனது கல்லூரிப் புகைப்படம். ஈரோட்டைச் சேர்ந்தவன். அந்த புகைப்படத்தில் அவனும் அவன் நண்பர்களும் கல்லூரி விடுதியின் மாடியில் நண்பகல் வெயிலில் நிற்பது போன்ற புகைப்படம். அதைப் பார்த்தவுடன் சட்டென்ற ஒரு பரவசம். என்னவென்று சரியாக கணிக்க முடியவில்லை. சிறிது நேரம் கழித்து தான் உறைத்தது. உறைத்தது உண்மை மட்டுமல்ல கொங்கு மண்டல வெயிலும் தான். அந்த வெயில் தான் எனை சிறிது நேரம் தன் பிடியில் ஆட்கொண்டிருந்திருக்கிறது. சுள்ளென்று உடல் முழுவதும் பரவி சிலிர்த்தது. என்னையா பிடிக்காது என்கிறாய்? என்று வெயில் என்னை கேள்வி கேட்டது. அந்த உணர்வுக்கு என்ன காரணம்? என் வயதல்லவா வெயிலுக்கும் எனக்கும் உள்ள பந்தத்தின் வயது. வெயிலுடனே அல்லவா என் உடலும் உள்ளமும் பயணப்பட்டு இருக்கிறது. அதுதான் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆத்ம தோழனை கண்டது போன்ற ஒரு உணர்ச்சி பிரவாகம். அந்த உணர்வு என்னை இன்னும் விட்டு விலகவில்லை. எனக்கும் அது பிடித்து தான் இருக்கிறது. இங்கு போல் வெயில்காலத்தில் அன்பை பொழிவதும், குளிர் காலத்தில் புறக்கணிப்பதுமான வேலை என் வெயிலுக்கு கிடையாதே. என்றும் நிலையான ஒரு சீரான அன்பு. அந்த வெயிலை ஆரத்தழுவி ஆசைதீர பருக மனம் வேட்கை கொள்கிறது. அடுத்த விடுமுறையில் கோவைக்கு செல்கையில் தான் அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
அதுவரை இங்கிலாந்து வெயிலை எதிர் நோக்கி நான்.
வெயிலின் அருமை நிழலில்.......

Thursday 13 January 2011

அவள் பெயர் மானஸா




மௌன மொழியாள் 
செவ்விதழில் தேன் சொரிவாள்
கருநீல விழியாள் 
சிரிப்பதனில் உளம் கவர்வாள்

வாகை மலராள்
தோகையில்லா மயிலாள்
கமல நிறத்தாள்
பார்க்க கண் பறித்தாள்

சிந்தைச் செருக்குடையாள் 
உயரிய மாண்புடையாள்
அன்னத்தை ஒத்த நடையாள்
அகமதில் தீரம் தரித்தாள்

மனம் ஏங்கும் சிற்றிடையாள்
முத்தம் தந்து மயக்குவாள்
பிறர் என்றால் தயங்குவாள்
என் தோளில் உறங்குவாள்

செல்ல அடி கொடுப்பாள்
அழக் கண்டு பதறுவாள்
கண்டவுடன் ஆர்ப்பரிப்பாள்
கண்கள் பனிக்க விடைகொடுப்பாள்

ஒரு நொடியேனும் நில்லாள்
ஆடிப்பாடி இன்புருவாள்
இல்லமெங்கும் நிறைந்தாள் இல்லையெனில் ஏங்க வைப்பாள்

அவள் பெயர் மானஸா!!!

Wednesday 12 January 2011

பொங்கலோ பொங்கல்


பொங்கல் பானையோடு மகிழ்ச்சியும் பொங்கிட
கரும்பின் இனிப்போடு உள்ளமும் நிறைந்திட
பழையன கழிப்போடு துயரங்கள் விலகிட
பண்டிகை களிப்போடு உறவுகள் கலந்திட
என்றும் அகத்தோடு மேன்மை தங்கிட
இயற்கை அன்போடு யாவும் தந்திட

பொங்கலோ பொங்கல்

விட்டத்தை பார்த்து யோசித்தது

புத்தாண்டு

கடிகார முட்களும்
குடிகார மக்களும்
இணையும் பொழுது பிறப்பது


Monday 3 January 2011

டேப் கேசட்

"டேய் இந்த பக்கம் முடிஞ்சுதுனா கேசட்ட திருப்பி போடு. நான் குளிச்சிட்டு வரேன்"
அப்பா வழக்கமாக சொல்வது. டேப் கேசட்டில் பதிவு செய்து டேப் ரிக்கார்டரில் கேட்கும் அந்த இசையின் சுகம் ஒரு தனி வகை. தொலைக்காட்சியிலும் வெளியிடங்களிலும் அரைகுறையாய் கேட்ட பாடல்களை தேர்வு செய்து, அதை காகிதத்தில் எழுதி வைத்து, அதிலும் குறைந்த பட்சம் 12 பாடல்கள் சேர்ந்த பிறகு அந்த பாடல்களை கேசட்டில் பதிவு செய்து கேட்கும் பொழுது வருமே ஒரு நிறைவு. அடடா.

AM ராஜா முதல் இளையராஜா வரை அப்பா எனக்கு அடையாளம் காட்டியது இது போன்ற கேசட்டுகளில் தான். அவர் சேமித்து வைத்திருந்த கேசட்டுகள் அடங்கிய பெட்டி முன்பு கர்மசிரத்தையாய் அமர்ந்து ஒவ்வொன்றாக எடுத்து பார்த்து, அதில் ஒன்றை தேர்வு செய்து ஒலிக்கச் செய்யும் காட்சி அப்படியே என் கண்முன் நிழலாடுகிறது. நீண்ட நாட்கள் ஒலிக்கப்படாமல் வைத்திருக்கும் கேசட்டுகள் சில சுழலாது சற்று இறுக்கமடைந்து இருக்கும். அதன் மையத்தில் விரல் விட்டு அதனை சுற்றி விட்டு பின்பு ஒலிக்கச் செய்வார்.

அப்பாவிடம் இருந்தவை வெறும் கேசட்டுகள் இல்லை. அவை தாங்கிய இசையையும் தாண்டி பலவற்றை பறைசாற்றுவதாக இருந்தது. அது பதிவு செய்யப்பட்ட பதிவுக்கூடம் அங்கிருப்பவர்களுடன் அப்பா கொண்டிருந்த நட்பு, பாடல் தெரிவு செய்த காலநிலை என்று பலவற்றை கூறும் நினைவு சின்னங்களாகவே இருந்தது. ஒரு கேசட்டில் பதிவு செய்யப்படும் இசையின் செறிவு அதை பதிவு செய்பவர் ரசனையை பொறுத்து இன்னும் பன்மடங்காகும். பதிவு செய்பவர் நமது அலைவரிசையை சேர்ந்தவராக இருக்கும் பொழுது சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு பாடல் ஒலிக்கும் பொழுதும் அதன் பின்னணியில் உள்ள செய்திகளும் , அதற்கு தொடர்புடையவர்களை பற்றிய நினைவுகளையும் அப்பா கூறுவதை கேட்க அவ்வளவு சுவையாக இருக்கும்.

அப்பாவின் இசை ரசனை சற்று அலாதியான ஒன்று. ஒரு கேசட்டில் உள்ள அனைத்து பாடல்களும் ஒரே விதமான மனநிலை சார்ந்ததாக இருக்க வேண்டும் என விரும்புவார். விவரம் அறிந்த சிறு வயதில் நான் பாடல்களை தெரிவு செய்யும் பொறுப்பை (?) ஏற்று கொண்ட பொழுது, சொதப்பலான பாடல்களை புகுத்து பல முறை அப்பாவிடம் வாங்கிக்கட்டிகொண்டதுண்டு. அந்த பாடல்கள் ஒலிக்கும் பொழுது அவ்வப்போது டோஸ்கள் புதுப்பிக்கப்படுவதும் உண்டு.

இன்றும் சில பாடல்களை கேட்டு முடிக்கும் தருவாயில் என்னையும் அறியாமல் நான் கேசட்டில் கேட்டு பழக்கப்பட்ட அடுத்த பாடல் என் நினைவில் வரும். அதன் சுகமான மேற்கூறிய நினைவுகளையும் சேர்த்து.