Sunday 10 April 2016

விசித்திரம்

சற்றே விசித்திரமாகத்தான் இருக்கிறது அவன் நடை

என்றைக்கும் இல்லாது சுவற்றோரம் சாய்ந்தவாறு செல்கின்றான்

விந்தி விந்தி நடக்கிறானோ? என்பதற்கான உயரம் தெரிகிறது

தன் நிழலை முந்தி விடும் வேகம்.
அதன் பொருட்டு தெருவோரத் திண்ணைகளின் மீது அங்குமிங்கும் அடிக்கடி தாவிக் கொள்கிறான்

சற்று பொறுங்கள்!!
நான் பார்ப்பது அவன் நிழலையா? அப்படித்தான் போலும்

அதோ அவன் நிஜத்தில் எப்பொழுதும் போலவே நடந்து கொண்டிருக்கிறான்

என்னுடைய பார்வையில் விசித்திரம் கொண்டுவிட்டது அவன் நடை

Saturday 9 April 2016

புரிதலற்ற தேடல்கள்




கதவிடுக்கில் சிக்கிக் கொள்ளும் விரலைப் போல
சரிக்கும் தவறுக்குமான குறுகிய இடைவெளியில் எப்பொழுதும் சிக்கித்தவிக்கிறது மனம்

கோணல் முற்றத்து ஏழைக் கிழவனின்
வேனில் காலத்து வாட்டும் நினைவுகளாய்
கானல் கனவுகள் மனதில் பிசுபிசுக்கின்றன

புதையுண்டப் பொருளுக்கு அடையாளம் வைக்கிறான் சிதறுண்ட மணலில் சிறுவன்

கட்டற்ற வானில் சிறைகொண்ட மனதிற்கு
திக்கற்ற முகில்களின் நடுவே கறையிடுகிறேன் நான்

பளிச்சென்று எனைப்பார்த்துச் சிரித்தடங்குகிறது மின்னல்