Thursday, 27 January 2011

வெயில்

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதை நான் உணர்ந்தே வளர்ந்திருக்கிறேன். சிறுவயதில் நண்பகல் வெயிலில் விளையாடும் பொழுதும் சரி. வளர்ந்து ஏசி ரூமில் வேலையில் அமர்ந்த பிறகும் சரி. வெயிலின் உக்கிரத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடிந்ததே இல்லை. பிசுபிசுவென்ற வியர்வையும், தொண்டை வறண்டு போகும் தாகமும், கண்கள் கூசும் அந்த பிரகாசமும், சட்டென்று களைக்க வைத்திடும் அதன் சுபாவமும் சொல்லி மாளாது. அந்த வெயிலில் வெளியே கிளம்புவதென்றால் ஒரு மலைப்பு தோன்றுமே. நீண்ட நடையின் இடையே நிழல் தேடும் கண்களும் இளைப்பாற எங்கும் கால்களும் வெயிலின் கொடுங்கதை கூறும்.

 நமது ஊரின் வேனிற்காலம் இப்படியென்றால் இங்கு இங்கிலாந்திலோ வெயிலை வரவேற்று கொண்டாடுகின்றனர். உறுத்தாத சூரியன் இயல்பான தென்றல் என்று இதயம் வருடும் வேனிற்காலம் இங்கு. கடுங்குளிர் கால வசத்திலிருந்து மீண்டு வெளிஉலகம் காணும் திருவிழா. சூரியன் இங்கு ஒரு ஹீரோவாகவே தோன்றுகிறார். வசந்தம் அருளிய மலர்களுடன் தென்றலோடு கொஞ்சி மகிழும் மரங்களும், காணாது கண்ட விருந்தினரை வரவேற்க புத்தாடை அணிந்தது போன்று தவழ்ந்து திரியும் நதியினமும், பருத்தியில் பூத்து கடலினில் குளித்து எங்கும் நிறைந்திருக்கும் மக்கள் கூட்டமும் அடேயப்பா. சாலமன் பாப்பையா பாணியில் கூறவேண்டுமானால் 'அருமையா அருமை'.
ஆனால் வெயில் வந்தவுடன் இவர்கள் செய்யும் அளப்பறைகளை கண்டு ரொம்ப அலட்டிக்கொள்கிறார்கள் என்று நினைத்தது உண்டு. ஆனால் இரண்டு குளிர் காலங்களை கடந்த பிறகு தான் புரிந்தது வெயில் இவர்களுக்கு எவ்வளவு அதிசயம் என்று. நானும் அந்த அதிசயம் வர காத்துக்கொண்டிருக்கிறேன்.

இது இப்படி இருக்க நேற்று முன்தினம் பேஸ்புக்கில் வலம் வந்து கொண்டிருக்கையில் புகைப்படம் ஒன்றை கடந்தேன். நண்பன் ஒருவனது கல்லூரிப் புகைப்படம். ஈரோட்டைச் சேர்ந்தவன். அந்த புகைப்படத்தில் அவனும் அவன் நண்பர்களும் கல்லூரி விடுதியின் மாடியில் நண்பகல் வெயிலில் நிற்பது போன்ற புகைப்படம். அதைப் பார்த்தவுடன் சட்டென்ற ஒரு பரவசம். என்னவென்று சரியாக கணிக்க முடியவில்லை. சிறிது நேரம் கழித்து தான் உறைத்தது. உறைத்தது உண்மை மட்டுமல்ல கொங்கு மண்டல வெயிலும் தான். அந்த வெயில் தான் எனை சிறிது நேரம் தன் பிடியில் ஆட்கொண்டிருந்திருக்கிறது. சுள்ளென்று உடல் முழுவதும் பரவி சிலிர்த்தது. என்னையா பிடிக்காது என்கிறாய்? என்று வெயில் என்னை கேள்வி கேட்டது. அந்த உணர்வுக்கு என்ன காரணம்? என் வயதல்லவா வெயிலுக்கும் எனக்கும் உள்ள பந்தத்தின் வயது. வெயிலுடனே அல்லவா என் உடலும் உள்ளமும் பயணப்பட்டு இருக்கிறது. அதுதான் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆத்ம தோழனை கண்டது போன்ற ஒரு உணர்ச்சி பிரவாகம். அந்த உணர்வு என்னை இன்னும் விட்டு விலகவில்லை. எனக்கும் அது பிடித்து தான் இருக்கிறது. இங்கு போல் வெயில்காலத்தில் அன்பை பொழிவதும், குளிர் காலத்தில் புறக்கணிப்பதுமான வேலை என் வெயிலுக்கு கிடையாதே. என்றும் நிலையான ஒரு சீரான அன்பு. அந்த வெயிலை ஆரத்தழுவி ஆசைதீர பருக மனம் வேட்கை கொள்கிறது. அடுத்த விடுமுறையில் கோவைக்கு செல்கையில் தான் அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
அதுவரை இங்கிலாந்து வெயிலை எதிர் நோக்கி நான்.
வெயிலின் அருமை நிழலில்.......

Thursday, 13 January 2011

அவள் பெயர் மானஸா




மௌன மொழியாள் 
செவ்விதழில் தேன் சொரிவாள்
கருநீல விழியாள் 
சிரிப்பதனில் உளம் கவர்வாள்

வாகை மலராள்
தோகையில்லா மயிலாள்
கமல நிறத்தாள்
பார்க்க கண் பறித்தாள்

சிந்தைச் செருக்குடையாள் 
உயரிய மாண்புடையாள்
அன்னத்தை ஒத்த நடையாள்
அகமதில் தீரம் தரித்தாள்

மனம் ஏங்கும் சிற்றிடையாள்
முத்தம் தந்து மயக்குவாள்
பிறர் என்றால் தயங்குவாள்
என் தோளில் உறங்குவாள்

செல்ல அடி கொடுப்பாள்
அழக் கண்டு பதறுவாள்
கண்டவுடன் ஆர்ப்பரிப்பாள்
கண்கள் பனிக்க விடைகொடுப்பாள்

ஒரு நொடியேனும் நில்லாள்
ஆடிப்பாடி இன்புருவாள்
இல்லமெங்கும் நிறைந்தாள் இல்லையெனில் ஏங்க வைப்பாள்

அவள் பெயர் மானஸா!!!

Wednesday, 12 January 2011

பொங்கலோ பொங்கல்


பொங்கல் பானையோடு மகிழ்ச்சியும் பொங்கிட
கரும்பின் இனிப்போடு உள்ளமும் நிறைந்திட
பழையன கழிப்போடு துயரங்கள் விலகிட
பண்டிகை களிப்போடு உறவுகள் கலந்திட
என்றும் அகத்தோடு மேன்மை தங்கிட
இயற்கை அன்போடு யாவும் தந்திட

பொங்கலோ பொங்கல்

விட்டத்தை பார்த்து யோசித்தது

புத்தாண்டு

கடிகார முட்களும்
குடிகார மக்களும்
இணையும் பொழுது பிறப்பது


Monday, 3 January 2011

டேப் கேசட்

"டேய் இந்த பக்கம் முடிஞ்சுதுனா கேசட்ட திருப்பி போடு. நான் குளிச்சிட்டு வரேன்"
அப்பா வழக்கமாக சொல்வது. டேப் கேசட்டில் பதிவு செய்து டேப் ரிக்கார்டரில் கேட்கும் அந்த இசையின் சுகம் ஒரு தனி வகை. தொலைக்காட்சியிலும் வெளியிடங்களிலும் அரைகுறையாய் கேட்ட பாடல்களை தேர்வு செய்து, அதை காகிதத்தில் எழுதி வைத்து, அதிலும் குறைந்த பட்சம் 12 பாடல்கள் சேர்ந்த பிறகு அந்த பாடல்களை கேசட்டில் பதிவு செய்து கேட்கும் பொழுது வருமே ஒரு நிறைவு. அடடா.

AM ராஜா முதல் இளையராஜா வரை அப்பா எனக்கு அடையாளம் காட்டியது இது போன்ற கேசட்டுகளில் தான். அவர் சேமித்து வைத்திருந்த கேசட்டுகள் அடங்கிய பெட்டி முன்பு கர்மசிரத்தையாய் அமர்ந்து ஒவ்வொன்றாக எடுத்து பார்த்து, அதில் ஒன்றை தேர்வு செய்து ஒலிக்கச் செய்யும் காட்சி அப்படியே என் கண்முன் நிழலாடுகிறது. நீண்ட நாட்கள் ஒலிக்கப்படாமல் வைத்திருக்கும் கேசட்டுகள் சில சுழலாது சற்று இறுக்கமடைந்து இருக்கும். அதன் மையத்தில் விரல் விட்டு அதனை சுற்றி விட்டு பின்பு ஒலிக்கச் செய்வார்.

அப்பாவிடம் இருந்தவை வெறும் கேசட்டுகள் இல்லை. அவை தாங்கிய இசையையும் தாண்டி பலவற்றை பறைசாற்றுவதாக இருந்தது. அது பதிவு செய்யப்பட்ட பதிவுக்கூடம் அங்கிருப்பவர்களுடன் அப்பா கொண்டிருந்த நட்பு, பாடல் தெரிவு செய்த காலநிலை என்று பலவற்றை கூறும் நினைவு சின்னங்களாகவே இருந்தது. ஒரு கேசட்டில் பதிவு செய்யப்படும் இசையின் செறிவு அதை பதிவு செய்பவர் ரசனையை பொறுத்து இன்னும் பன்மடங்காகும். பதிவு செய்பவர் நமது அலைவரிசையை சேர்ந்தவராக இருக்கும் பொழுது சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு பாடல் ஒலிக்கும் பொழுதும் அதன் பின்னணியில் உள்ள செய்திகளும் , அதற்கு தொடர்புடையவர்களை பற்றிய நினைவுகளையும் அப்பா கூறுவதை கேட்க அவ்வளவு சுவையாக இருக்கும்.

அப்பாவின் இசை ரசனை சற்று அலாதியான ஒன்று. ஒரு கேசட்டில் உள்ள அனைத்து பாடல்களும் ஒரே விதமான மனநிலை சார்ந்ததாக இருக்க வேண்டும் என விரும்புவார். விவரம் அறிந்த சிறு வயதில் நான் பாடல்களை தெரிவு செய்யும் பொறுப்பை (?) ஏற்று கொண்ட பொழுது, சொதப்பலான பாடல்களை புகுத்து பல முறை அப்பாவிடம் வாங்கிக்கட்டிகொண்டதுண்டு. அந்த பாடல்கள் ஒலிக்கும் பொழுது அவ்வப்போது டோஸ்கள் புதுப்பிக்கப்படுவதும் உண்டு.

இன்றும் சில பாடல்களை கேட்டு முடிக்கும் தருவாயில் என்னையும் அறியாமல் நான் கேசட்டில் கேட்டு பழக்கப்பட்ட அடுத்த பாடல் என் நினைவில் வரும். அதன் சுகமான மேற்கூறிய நினைவுகளையும் சேர்த்து.