Showing posts with label நினைவுகள். Show all posts
Showing posts with label நினைவுகள். Show all posts

Monday, 14 February 2011

பிப்ரவரி 14

அன்று பிப்ரவரி 14. சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு. வீட்டில் தனியாக நான். சன் டிவியில் காதலர் தின சிறப்பு திரைப்படமாக "காதலன்" திரைப்படம் ஓடிக்கொண்டு இருந்தது. சுமார் மாலை நான்கு மணிக்கு திடீரென்று ஒரு ப்ளாஷ் நியூஸ். முதலில் நான் அதை கவனிக்கவில்லை. சட்டென்று "குண்டு வெடிப்பு" என்றும் "கோவை" என்றும் வார்த்தைகள் தென்பட நான் சற்று பரபரப்பானேன்.  அம்மாவும் மூன்று வயது தம்பியும் அந்த மாலையில் தான் பாட்டி வீட்டிலிருந்து திரும்ப வர வேண்டும். அப்பாவோ அன்று சனிக்கிழமையாதலால் அரைநாள் வேலை முடிந்து  நாமக்கல்லிலிருந்து வார இறுதிக்காக  வீடு வரவேண்டிய நாள். இவையனைத்தும் என் மூளைக்குள் ப்ளாஷ் நியூசாக ஓட எனக்கு பதட்டம் தொற்றிக்கொண்டது. டிவியில் திடீர் செய்திகள் ஒளிபரப்பப்பட்டு "குண்டு வெடித்தது R.S .புரத்தில் மட்டுமல்ல" என்று கூறி இடங்களை பட்டியலிட ஆரம்பித்து என் பரபரப்பை படபடப்பாக்கினர்.

செய்வதற்கு ஒன்றுமில்லை. காத்திருப்பு. யாராவது ஏதாவது தகவல் தரமாட்டார்களா என்று மனம் அடித்துக்கொண்டது. வெளியில் ஓடினேன். யாரேனும் டவுனிலிருந்து வந்தால் நிலவரம் என்ன என்பதை அறியலாம் என்று காத்திருந்தேன். அம்மாவுடன் பணிபுரியும் இருவர் நடந்து வந்துகொண்டிருந்தனர். யார் என்று நினைவில்லை.

"அங்கிள்... டவுனுக்குள்ள எப்படி இருக்கு அங்கிள்". பொத்தாம்பொதுவாக நான் கேட்க அவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

 "ஏன் என்ன ஆச்சு?" என்றார்கள்.

சரி அவர்களுக்கு இன்னும் செய்தி எட்டவில்லை போலும். எனக்கு சப்பென்று ஆனது.

"R.S. புரத்துல குண்டு வெடிப்புன்னு நியூஸ் வந்துது அங்கிள்" என்றேன்.
"அம்மாவும் தம்பியும் பாட்டி வீட்டுக்கு போயிருக்காங்க. இப்போ திரும்பி வர்ற நேரம். அதான் என்ன ஆச்சுனு தெரியல அங்கிள்" குரல் சற்று உடைந்து விட்டிருந்தது.
 நான் கூறியதை அவர்கள் அதிகம் சட்டை பண்ணியதாக தெரியவில்லை. அநேகமாக என் பரபரப்பு அவர்களை தொற்றியிருக்க வேண்டும். அதை நான் சட்டை செய்யவில்லை.

சம்பிரதாயத்துக்கு "ஒன்னும் பயப்படாத கவின். வந்துருவாங்க" என்று கூறிவிட்டு அவர்கள் வீடு நோக்கி பயணித்தனர்.

நான் மறுபடியும் வீட்டினுள் ஓடி வந்து வேறு ஏதாவது தகவல் இருக்குமா என்று டிவியில் பார்க்கிறேன். இப்பொழுது சம்பவம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களை ஒலிபரப்பிக்கொண்டிருந்தனர். எனக்கோ சம்பந்தமில்லாமல் பல கற்பனைகள் மனதை அரித்தன. "ச்சே. ஒன்னும் இருக்காது டா" என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.

கிடை கொள்ளாமல் வீட்டினுள் சற்று நேரம் வெளியில் சற்று நேரம் என்று உலவினேன். யாரிடமாவது பேச வேண்டும் போல இருந்தது. வீட்டைப் பூட்டிக்கொண்டு அருகிலிருந்த மூர்த்தி அண்ணனின் இஸ்திரி கடைக்கு விரைந்தேன். வானம் இருட்டிவிட துவங்கி இருந்தது. அங்கும் சன் டிவி தான் ஓடிக்கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் அதே காட்சிகள்.
"என்ன கவின். நியூஸ் பாத்தியா" என்றார்.
"ஆமா ணா. அம்மாவும் தம்பியும் வேற சிங்காநல்லூர் போயிருக்காங்க. எப்படி வருவாங்க னு தெரியல ணா".
அழ வேண்டும் போல இருந்தது. அடக்கிக்கொண்டேன். என் வாடிய முகத்தைக் கண்டதும் அவருக்கும் சற்று சங்கடமாகி இருக்க வேண்டும். சற்று நேர மௌனம். "ஒன்னும் பிரச்சினை இருக்காது கவின்" அதற்கு மேல் அவருக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.
"அப்பா எப்படி வருவாரோ" அடுத்த பதட்டம்.
"போன் ஏதாவது வந்துதா?"
"இல்ல ணா."
"அங்க பாட்டி வீட்டு பக்கத்துல யார் வீட்டிலையாவது போன் இருக்கா?"
"இருக்கு ணா. ஆனா என்கிட்டே நம்பர் இல்லை" இதையெல்லாம் வாங்கி வைக்க வேண்டும் என எனக்கு ஏன் தோன்றவில்லை. என்னை கடிந்து கொண்டேன். சரி அம்மாவாவது போன் பண்ணி சொல்லலாமில்ல. அம்மா மீதும் கோபம் வந்தது.
"அய்யய்யோ. இப்போ யாராவது போன் பண்ணினா. அண்ணா நான் வீட்டுக்கு போறேன்"
மறுபடியும் வீடு.
போனின் மீது என் பார்வை படிந்து கிடந்தது. பெரியம்மாவுக்கு போன் பண்ணி நம்பர் கேட்டா என்ன. போன் செய்தேன். லைன் கிடைக்கவில்லை. மாய்ந்து மாய்ந்து மறுபடி மறுபடி டயல் செய்கிறேன். ஹ்ம்ம். பயனில்லை.
காத்திருப்பு.
செய்தி சொல்லி மாய்ந்து போனவர்கள் மீண்டும் காதலன் திரைப்படத்தை ஓடவிட்டனர். கண்கள் டிவியிலும், காது டெலிபோனிலும், மனது அம்மாவின் மீதும் இருந்தது. சுமார் ஒருமணி நேரம் அப்படி அமர்ந்திருப்பேன் என்று நினைவு.

வாசலில் TVS 50 யின் அரவம். சடாரென்று வெளியில் துள்ளி ஓடினேன். அங்கே அம்மாவும் தம்பியும் உடன் நடராஜ் மாமாவும் வண்டியிலிருந்து இறங்கினர். அதுவரை துடிக்க மறந்த இதயம் உயிர் பெற்று வேகவேகமாக துடித்தது. அழுகை சிரிப்பு என கலந்து ஒரு விதமான மனநிலை.
"அண்ணா" என்று மழலையாய்ச் சிரித்தான் பிரவின். அப்படியே ஓடிச்சென்று தம்பியை வாங்கி முத்தம் கொஞ்சிவிட்டு அம்மாவை கட்டிக்கொண்டேன். "எப்படிமா வந்தீங்க" தழுதழுத்தது குரல்.
"மாமா வந்தாங்க சாமி. மாமா கூட்டிட்டு வந்ததுனால ஆச்சு"
ஏன் போன் பண்ணல என்று ஏனோ கேட்க தோன்றவில்லை.
மனம் லேசாகிவிட்டிருந்தது.

இப்பொழுது அப்பா. எல்லாம் இன்று ஒரு சேர நிகழ வேண்டுமா. ஒவ்வொரு வாரமும் அப்பா வரும் வார இறுதி தான் எங்கள் பண்டிகை தினம். அன்றுதானா இதெல்லாம் நிகழ வேண்டும்.  அம்மாவும் மாமாவும் இருப்பதால் சற்று தைரியம் வந்தது. மீண்டும் நால்வருமாக இன்னொரு இரண்டு மணிநேரம் காத்திருந்து கரைக்க வேண்டியிருந்தது.
டெலிபோன் மணி ஒலித்தது. பாய்ந்து சென்று எடுத்தேன். நம்பிக்கை பொய்க்கவில்லை. அப்பாதான்.
"கவின். அப்பா பேசறேன்"
"சொல்லுங்க டாடி. எங்க இருக்கீங்க"
"லாலிரோடு கிட்ட இருக்கேன். ஒன்னும் பயப்பட வேண்டாம். இன்னும் ஒரு அரைமணி நேரத்துல வந்துருவேன். சரியா?"
"சரி டாடி. வடவள்ளி வந்துட்டு போன் பண்ணுங்க"
"சரி. வெக்கட்டா"
அப்பா சொன்னதை அம்மாவிடமும் மாமாவிடமும் ஒப்பித்தேன். மீதி உயிரும் திரும்பி வந்தது.
"அப்பா வன்னுட்டாங்க்லா" பிரவின் அவன் மொழியில் கேட்டான்.
"இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க" என்றதும்
"ஐயா" என்று சிரித்தான்.

சுமார் ஒன்றரை மணி கழித்து அப்பா நடந்தே வந்து சேர்ந்தார். பஸ் கிடைக்காமல் லிப்ட் கேட்டு கேட்டு மாறி வந்ததைச் சொன்னார். பதட்டம் தணிந்து இயல்பு நிலை திரும்பிய தருணம் அது.

இத்தனை வருடங்கள் கழித்தும் கூட பிப்ரவரி 14 என்றால் இந்த நினைவு வருவதை தவிர்க்க முடிவதில்லை.
எனக்கு அது ஒரு மீண்ட சொர்க்கம் .......

Sunday, 6 February 2011

கொங்கு தமிழ் வாசம்

துள்ளுதமிழ்த் தேடிக்கொண்டிருந்த வேளையில் என் நெஞ்சிற்கினிய கொங்குதமிழ் என்னைத் தழுவிற்று. கீழ்காணும்ச் சுட்டியில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள கொங்கு வட்டார வழக்குச் சொற்கள் என்னை பல்லாயிரம் மைல்களைக் கடந்து கோவை தெருக்களில் விட்டுவிட்டதைப் போன்றதொரு உணர்வு.

http://konguvaasal.blogspot.com/2007/07/blog-post_25.html#links

ஒவ்வொரு வார்த்தையைப் படிக்கும் பொழுதும் அதை யாரிடத்தில்க் கேட்டேனோ அந்த நினைவுகள் வலியச்  சென்று ஆழ் மனதில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்கின்றன. அண்மையில் என் கொங்குதமிழ் வாசம் வீசுகிறது. நுகர்கிறேன். அது தரும் பழைய நினைவுகளைப்  பருகுகிறேன். போதைத் தருகிறது. அனுபவிக்கிறேன். இந்த உணர்வு புதுமையானது. தென்றலை நேரில் நின்று அனுபவிப்பது ஒரு சுகம். அதே தென்றல் மனதினுள் வருடுவது முற்றிலும் புதிய சுகம்.
இன்னும் என் தெருக்களில் பயணித்துக் கொண்டு இருக்கிறேன், பழைய நினைவுகளை அசை போட்டபடி. இது கொங்கு நினைவுகள். அதை கோர்க்கிறேன் ஒரு மாலையாக. அது பின்வரும் காட்சியாக விரிகிறது.



"சித்த இரு கண்ணு. நான் மேலுக்கு தண்ணி வாத்துட்டு இதா வந்தர்றேன். நீ சீராடாம வட்டல கொண்டு வை கண்ணு சோறு உங்கலாம்"னு ஆத்தா பாத்துரூம்புக்குள் நுழைகிறாள்.
"அரமாலும் கொஞ்சமா திங்கிறியே கண்ணு. நல்லா உண்டாத்தான வலுவிருக்கும்"னு கரிசனம் காட்டுகிறார் தாத்தன்.


ஆத்தாவும் தாத்தாவும் பழமை பேசுகிறார்கள்.
"சின்னக்கண்ணு பண்ணாடி சனிக்கெழம பொழுதோட தான் வருவாரு. அவீய வர்ற வரைக்கும் புள்ள தனியாத்தான இருக்கும். அதான் ஒரே வெசனமா இருக்கு. அன்னாடும் இங்க வந்துட்டு போறதுக்கு ஆகுமா "
அப்போ சிறுசு ஒன்று கண்ணை கசக்கி கொண்டு வருகிறது.
"ஆத்தா ராஜேசண்ணன் அச்சு முருக்க புடுங்கிட்டு கொக்காணி காட்டுது ஆத்தா"  விக்கி விக்கி அழுதுகொண்டே.
"சரி சரி எஞ்சாமி. போச்சாது போ. நான் அவன என்னனு கேக்குறேன். டே ராசேசு. எண்டா புள்ள கூட ஒரியாடற. புள்ள பொக்குனு போச்சு பாரு. குடுறா புள்ள கிட்ட. அம்மா ஆள. நீ போய் வாங்கிக்க சாமி"


வாசலில் மணி மாமா
"ஏனம்மா ஐயன் இருக்கறாருன்களா?"
"வா மணி. வா சோறு உங்கலாம்"
"இல்லை இருக்கட்டுங்க. இன்னொரு நாள் சாவகாசமா வர்றேங்க"
"ஊட்டுல அம்மணி நல்லா இருக்குதா? சிட்டாளு?"
"நல்லா இருக்கறாங்க"
"பொறவு என்ன சமாச்சாரம்"
"ஒன்னுமில்லீங்க மேக்கால வீட்ல ஒரு சோலிங்க. பாதைக்கு குறுக்கால ஏதோ சாளை போட்டுட்டு எதுத்த வீட்டுக்காரன் பண்ணாட்டு பன்றானாமா. அதான் அய்யன கூட்டிட்டு போய் என்னனு கேக்கலாம்னு"
"அனாமத்த போகுதேன்னு அவன் பொழங்கரானா. அந்த கொல்லைல போறவன சீவக்கட்டைலயே போடோணும். போன வாரங்கூட தண்ணிய போட்டுட்டு இங்க வந்து ஒரே ரவுசு"
"அமாம்ங்க அவன் ஒரு மசையன். எந்நேரமும் ஒரே அக்கப்போரு"
"வெளிய வெய்ய காந்துது. கொடை எடுத்துட்டு போங்க. இந்தா வரும்போது சுருளு வாங்கிட்டு வாங்க. பொழுதானா சொள்ளை கடி தாங்கல"
கிளம்புமுன் தாத்தன் "டே சாமிகளா. ஒன்னுக்கொன்னு எசிரி போடாம பொட்டாட்டம் தூங்கோனும். என்ன?" என்று விட்டு கிளம்புகிறார்.


"என்ன ஆத்தா. தாத்தன் எங்கியோ போகுது?" கேட்டு கொண்டே வருகிறார் பாப்பாத்தி அக்கா.
"தாத்தனுக்கு சோலியிருந்தா கெட தங்குமா?"
"ரேசன் கடைல இன்னைக்கு சீமத்தண்ணி ஊத்தறாங்கத்தா. நீ வரல?"
"அடே மறந்தே மறந்துட்டேன். செத்த இரு. ஓட்டுக்க போகலாம்"
"சீல புதுசா?"
"அக்காமாத்தா எங்க மச்சாண்டார் பெஞ்சாதி நோம்பிக்கு எடுத்து குடுத்திச்சி. சரி இந்தாத்தா கோசாபழம்"
"இது ஏது"
"நம்ம அம்மிணியக்கா கடையில வாங்கியாந்தேன்"
"இந்த கீரைக்கார அம்மிணிய பாத்தியா?"
"இல்லையாத்தா அவளுக்கென்ன நோக்காடோ இன்னிக்கி காணோம்"
"தண்ணி வந்துதே இன்னிக்கு. புடுச்சி வெச்சுட்டியா?"
"ஆங். மூணு தோண்டில சாலுலயும் புடுச்சிட்டேன்."
அப்பொழுது பின்னொரு சிறுசு அருவாமனை அருகில் செல்ல
"டே சாமி. அருவாமனை. அக்கட்ட போ" என்று அதட்டுகிறாள்.

நினைவு கலைகிறது. காட்சி அகல்கிறது. கண்களில்த் துளிர்த்த கண்ணீர் நான் அடக்கியமையால் நெஞ்சினுள் நிறைகிறது.

இன்னும் பயணிக்கிறேன்.

அம்மா அடிக்கடி சொல்லும் "உம் பொறந்தவன கேளு"
கதிர் அண்ணனின் "மம்மானிய" தூக்கம்
பிரகாசின் "எத்தாச்சோடு வீங்கியிருக்கு"
மாமன் மகனில் நடுவலவன் ஜெகியின் "என்னடா உன்னோட ஒரே அக்கப்போரா இருக்கு"
அப்பாவின் "இந்த சொம்புல அண்ணாந்து குடிக்க முடியுதா"
பாட்டியின் "யாருடா இவன் திருவாத்தானா இருக்கான்"
தாத்தாவின் "மொள்ள சாமி மொள்ள"
ஆத்தாவின் "ராத்திரி பூரா ஒரே பெனாத்தலு"

இன்னும் ஏராளம் ஏராளம்.

இன்னும் நடந்துகொண்டே இருக்கிறேன் என் தெருக்களில்


கொங்கு தமிழ்க்கென்று ஒரு தனி அழகு. கொங்கு தமிழ் என்றில்லை, அனைத்து வட்டார மொழிக்கும் அதனுடைய தனிச்சிறப்பு என்றும் உண்டு. இன்று நகர்ப்புறத்தில் அது சற்று தொய்வடைந்த போதிலும் கிராமப்புறங்களில் அது தொன்மை மாறாமல் தான் இருக்கின்றது. திரைப்படங்களில் பெரும்பாலும் கொங்கு தமிழ் வழக்கு மிகுந்து வருவதில்லை. அதை கொடுக்க நினைப்பவர்களுக்கும் அதன் ஆக்கம் தெரிவதில்லை. வெறும் "லே" வருவதனால் மட்டும் அது நெல்லைத் தமிழ் ஆகாது. வெறும் "அங்கிட்டு இங்கிட்டு" திண்டுக்கல் தமிழ் ஆகாது. "வந்தாய்ங்க போனாய்ங்க" மதுரை தமிழ் ஆகாது. அது போல வெறும் "ங்க" மட்டும் கொங்குத்தமிழ் ஆகாது. கொங்கு மண்டலத்தை சேர்ந்த பலர் இருந்த போதிலும் குறிப்பிட்ட சிலரே அதன் வாசம் மாறாமல் காப்பாற்றுகின்றனர்.


கீழ்க்காணும் சுட்டியில் கமலஹாசனின் கற்றுணர்ந்த கொங்குதமிழை விட சரளாவின் வாழ்வோடு கலந்த கொங்குதமிழில் அதிக ஜீவன் இருப்பது தெரியும்.

மற்றும் ஒரு சரளாவின் கொங்கு தமிழ்

அதே போல் கவுண்டரும் மணிவண்ணனும் 


இலக்கியத்தில் கொங்கு தமிழை அதிகம் வாசித்ததில்லை. யாருக்கேனும் அதன் பரிச்சயம் இருந்தால் எனக்கு சற்று அறிமுகப்படுத்தமுடியுமா?

Sunday, 30 January 2011

சிகையலங்காரம்

சற்று முன்பு தான் சிகை திருத்திக் கொண்டு வந்தேன். திருத்தி விட்டவர் இஸ்தான்புல்காரர். ஒரு ஐந்தாறு முறை அவரிடம் தான் முடி வெட்டிக்கொண்டேன். ஆனால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக வெட்டி விடுகிறார். விதவிதமாக என்றால் நன்றாக இருக்கிறதா இல்லையா? அதற்கு மட்டும் எனக்கு பதில் தெரிந்ததே இல்லை. இவரிடம் என்றில்லை. சிறு வயதில் இருந்தே. எனக்கு நினைவு தெரிந்து பலர் என் தலையில் கை வைத்து தொழில் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆலமரத்தடியில் ஈயோட்டியவர், பெட்டிக்கடை பார்பர், ஐந்து ரூபாய்க்கு வெட்டுபவர் இப்படி பலர்.

அம்மாவின் ஒரே கோரிக்கை, முடி வெட்டுவதென்றால் "ஒட்ட நறுக்க" வேண்டும். இப்படி ஒரு சிம்பிள் கோரிக்கை என்பதால் ஆலமரத்தடிக்காரரே போதும் என்றாகிவிட்டது. மொட்டையடித்து இரண்டு வாரமானால் எப்படி இருக்குமோ அப்படி ஸ்டைலாக வெட்டி விடுவார் நமது ஆலமரத்தடிகாரர் . நன்றாக சட்டியை கவிழ்த்து வைத்தது போன்று (சமீப காலமாக இது நிஜமான ஸ்டைலாக மாறிவிட்டதில் ஒரு அல்ப சந்தோஷம்). இந்த வைபவத்திற்கு என்னை அழைத்து செல்லும் கதிர் அண்ணனும் மூர்த்தி அண்ணனும் இதற்கு உடந்தை. இது போல பலபேர் விளையாண்ட சிகை என்பதால் இப்படித்தான் வெட்டி கொள்ள வேண்டும் என்ற சிந்தனையும் "ஒட்ட நறுக்க"ப்பட்டு விட்டது.

வீட்டிற்கு அருகில் ஜோதி அண்ணன் வந்ததால் மேற்கூறிய அவலம் சற்று குறைந்தது. ரசனைவாதியான அவரிடம் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் என்னை ஒப்படைத்து விட்டிருந்தேன். கல்லூரி முடித்து பெங்களூர் சென்ற பிறகும் கூட அவர்தான். எனக்கு எப்படி வெட்ட வேண்டும் என்பது அவருக்கும் அவர் தம்பி சம்பத் அண்ணனுக்கும் தெரிந்திருந்ததால், இப்படிதான் வெட்ட வேண்டும் என்று கூற எனக்கு வாய்ப்பு வந்ததில்லை. முதல் இங்கிலாந்து பயணத்தில் தான் அந்த தேவை முளைத்தது. ஊரில் ஆலமரத்தடிக்காரர் என்றால் இங்கு ஒரு பாகிஸ்தான்காரர். கவிழ்த்த சட்டி கட்டிங் தான். ஆனால் சற்றே அதிகமாக முடி இருக்கும். அது தான் ஒரே வித்தியாசம். கோவைக்கு சென்றால் ஒபராய்க்காரர்களிடம் சற்று திருத்திக்கொண்டால் தான் நிம்மதியாய் இருக்கும் (வீடு மாறி விட்டதால் கடை மாற்றம்).

இது போல எப்படி வெட்ட வேண்டும் என்று சொல்லத்தெரியாமல் போனதிலும் ஒரு நன்மை. ஏழு மாதங்கள் ரொமேனியாவில் குப்பை கொட்ட வேண்டிய  கட்டாயம் வந்தது. மொழி தெரியாத ஊர். ஆங்கிலம் தெரியாத மக்கள். குடியிருந்த வீட்டருகில் ஒரு சலூன். முடி வெட்டுவது அறுபது வயது பாட்டியம்மா. கேட்கவா வேண்டும். அங்கு செல்லும் முன் அவ்வூர்க்கார நண்பர்களிடம் மீடியமாக வெட்டுவதென்றால் என்ன கூறுவதென்று மட்டும் ரோமேனியன் மொழியில் கேட்டுச் சென்று வெட்டிய அழகுதான் கீழே உள்ள புகைப்படத்தில் காணப்படுவது.

அந்த பாட்டியம்மா வேறு என்னவெல்லாமோ கேட்டார். எழவு நமக்கு புரிந்தால்தானே. எல்லாவற்றிற்க்கும் தலையாட்டிக்கொண்டு வந்ததன் விளைவு தான் இது.

http://www.youtube.com/watch?v=wgYT9k4W06Y&feature=related
மேலே உள்ள சுட்டியில் கவுண்டர் கூறுவது போல தான் என் நிலைமை.
 "ஆலமரத்தடிக்காரர் சரியில்லைன்னு அஞ்சு ரூவா பார்பர் கிட்ட வெட்டினேன். பாகிஸ்தான் பார்பர் சரியில்லைன்னு இஸ்தான்புல் பார்பர் கிட்ட வெட்டினேன். இப்போ எப்படி வெட்டணும்னு எனக்கும் தெரியல இவனுகளுக்கும் தெரியல" :-)

Thursday, 27 January 2011

வெயில்

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதை நான் உணர்ந்தே வளர்ந்திருக்கிறேன். சிறுவயதில் நண்பகல் வெயிலில் விளையாடும் பொழுதும் சரி. வளர்ந்து ஏசி ரூமில் வேலையில் அமர்ந்த பிறகும் சரி. வெயிலின் உக்கிரத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடிந்ததே இல்லை. பிசுபிசுவென்ற வியர்வையும், தொண்டை வறண்டு போகும் தாகமும், கண்கள் கூசும் அந்த பிரகாசமும், சட்டென்று களைக்க வைத்திடும் அதன் சுபாவமும் சொல்லி மாளாது. அந்த வெயிலில் வெளியே கிளம்புவதென்றால் ஒரு மலைப்பு தோன்றுமே. நீண்ட நடையின் இடையே நிழல் தேடும் கண்களும் இளைப்பாற எங்கும் கால்களும் வெயிலின் கொடுங்கதை கூறும்.

 நமது ஊரின் வேனிற்காலம் இப்படியென்றால் இங்கு இங்கிலாந்திலோ வெயிலை வரவேற்று கொண்டாடுகின்றனர். உறுத்தாத சூரியன் இயல்பான தென்றல் என்று இதயம் வருடும் வேனிற்காலம் இங்கு. கடுங்குளிர் கால வசத்திலிருந்து மீண்டு வெளிஉலகம் காணும் திருவிழா. சூரியன் இங்கு ஒரு ஹீரோவாகவே தோன்றுகிறார். வசந்தம் அருளிய மலர்களுடன் தென்றலோடு கொஞ்சி மகிழும் மரங்களும், காணாது கண்ட விருந்தினரை வரவேற்க புத்தாடை அணிந்தது போன்று தவழ்ந்து திரியும் நதியினமும், பருத்தியில் பூத்து கடலினில் குளித்து எங்கும் நிறைந்திருக்கும் மக்கள் கூட்டமும் அடேயப்பா. சாலமன் பாப்பையா பாணியில் கூறவேண்டுமானால் 'அருமையா அருமை'.
ஆனால் வெயில் வந்தவுடன் இவர்கள் செய்யும் அளப்பறைகளை கண்டு ரொம்ப அலட்டிக்கொள்கிறார்கள் என்று நினைத்தது உண்டு. ஆனால் இரண்டு குளிர் காலங்களை கடந்த பிறகு தான் புரிந்தது வெயில் இவர்களுக்கு எவ்வளவு அதிசயம் என்று. நானும் அந்த அதிசயம் வர காத்துக்கொண்டிருக்கிறேன்.

இது இப்படி இருக்க நேற்று முன்தினம் பேஸ்புக்கில் வலம் வந்து கொண்டிருக்கையில் புகைப்படம் ஒன்றை கடந்தேன். நண்பன் ஒருவனது கல்லூரிப் புகைப்படம். ஈரோட்டைச் சேர்ந்தவன். அந்த புகைப்படத்தில் அவனும் அவன் நண்பர்களும் கல்லூரி விடுதியின் மாடியில் நண்பகல் வெயிலில் நிற்பது போன்ற புகைப்படம். அதைப் பார்த்தவுடன் சட்டென்ற ஒரு பரவசம். என்னவென்று சரியாக கணிக்க முடியவில்லை. சிறிது நேரம் கழித்து தான் உறைத்தது. உறைத்தது உண்மை மட்டுமல்ல கொங்கு மண்டல வெயிலும் தான். அந்த வெயில் தான் எனை சிறிது நேரம் தன் பிடியில் ஆட்கொண்டிருந்திருக்கிறது. சுள்ளென்று உடல் முழுவதும் பரவி சிலிர்த்தது. என்னையா பிடிக்காது என்கிறாய்? என்று வெயில் என்னை கேள்வி கேட்டது. அந்த உணர்வுக்கு என்ன காரணம்? என் வயதல்லவா வெயிலுக்கும் எனக்கும் உள்ள பந்தத்தின் வயது. வெயிலுடனே அல்லவா என் உடலும் உள்ளமும் பயணப்பட்டு இருக்கிறது. அதுதான் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆத்ம தோழனை கண்டது போன்ற ஒரு உணர்ச்சி பிரவாகம். அந்த உணர்வு என்னை இன்னும் விட்டு விலகவில்லை. எனக்கும் அது பிடித்து தான் இருக்கிறது. இங்கு போல் வெயில்காலத்தில் அன்பை பொழிவதும், குளிர் காலத்தில் புறக்கணிப்பதுமான வேலை என் வெயிலுக்கு கிடையாதே. என்றும் நிலையான ஒரு சீரான அன்பு. அந்த வெயிலை ஆரத்தழுவி ஆசைதீர பருக மனம் வேட்கை கொள்கிறது. அடுத்த விடுமுறையில் கோவைக்கு செல்கையில் தான் அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
அதுவரை இங்கிலாந்து வெயிலை எதிர் நோக்கி நான்.
வெயிலின் அருமை நிழலில்.......

Monday, 3 January 2011

டேப் கேசட்

"டேய் இந்த பக்கம் முடிஞ்சுதுனா கேசட்ட திருப்பி போடு. நான் குளிச்சிட்டு வரேன்"
அப்பா வழக்கமாக சொல்வது. டேப் கேசட்டில் பதிவு செய்து டேப் ரிக்கார்டரில் கேட்கும் அந்த இசையின் சுகம் ஒரு தனி வகை. தொலைக்காட்சியிலும் வெளியிடங்களிலும் அரைகுறையாய் கேட்ட பாடல்களை தேர்வு செய்து, அதை காகிதத்தில் எழுதி வைத்து, அதிலும் குறைந்த பட்சம் 12 பாடல்கள் சேர்ந்த பிறகு அந்த பாடல்களை கேசட்டில் பதிவு செய்து கேட்கும் பொழுது வருமே ஒரு நிறைவு. அடடா.

AM ராஜா முதல் இளையராஜா வரை அப்பா எனக்கு அடையாளம் காட்டியது இது போன்ற கேசட்டுகளில் தான். அவர் சேமித்து வைத்திருந்த கேசட்டுகள் அடங்கிய பெட்டி முன்பு கர்மசிரத்தையாய் அமர்ந்து ஒவ்வொன்றாக எடுத்து பார்த்து, அதில் ஒன்றை தேர்வு செய்து ஒலிக்கச் செய்யும் காட்சி அப்படியே என் கண்முன் நிழலாடுகிறது. நீண்ட நாட்கள் ஒலிக்கப்படாமல் வைத்திருக்கும் கேசட்டுகள் சில சுழலாது சற்று இறுக்கமடைந்து இருக்கும். அதன் மையத்தில் விரல் விட்டு அதனை சுற்றி விட்டு பின்பு ஒலிக்கச் செய்வார்.

அப்பாவிடம் இருந்தவை வெறும் கேசட்டுகள் இல்லை. அவை தாங்கிய இசையையும் தாண்டி பலவற்றை பறைசாற்றுவதாக இருந்தது. அது பதிவு செய்யப்பட்ட பதிவுக்கூடம் அங்கிருப்பவர்களுடன் அப்பா கொண்டிருந்த நட்பு, பாடல் தெரிவு செய்த காலநிலை என்று பலவற்றை கூறும் நினைவு சின்னங்களாகவே இருந்தது. ஒரு கேசட்டில் பதிவு செய்யப்படும் இசையின் செறிவு அதை பதிவு செய்பவர் ரசனையை பொறுத்து இன்னும் பன்மடங்காகும். பதிவு செய்பவர் நமது அலைவரிசையை சேர்ந்தவராக இருக்கும் பொழுது சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு பாடல் ஒலிக்கும் பொழுதும் அதன் பின்னணியில் உள்ள செய்திகளும் , அதற்கு தொடர்புடையவர்களை பற்றிய நினைவுகளையும் அப்பா கூறுவதை கேட்க அவ்வளவு சுவையாக இருக்கும்.

அப்பாவின் இசை ரசனை சற்று அலாதியான ஒன்று. ஒரு கேசட்டில் உள்ள அனைத்து பாடல்களும் ஒரே விதமான மனநிலை சார்ந்ததாக இருக்க வேண்டும் என விரும்புவார். விவரம் அறிந்த சிறு வயதில் நான் பாடல்களை தெரிவு செய்யும் பொறுப்பை (?) ஏற்று கொண்ட பொழுது, சொதப்பலான பாடல்களை புகுத்து பல முறை அப்பாவிடம் வாங்கிக்கட்டிகொண்டதுண்டு. அந்த பாடல்கள் ஒலிக்கும் பொழுது அவ்வப்போது டோஸ்கள் புதுப்பிக்கப்படுவதும் உண்டு.

இன்றும் சில பாடல்களை கேட்டு முடிக்கும் தருவாயில் என்னையும் அறியாமல் நான் கேசட்டில் கேட்டு பழக்கப்பட்ட அடுத்த பாடல் என் நினைவில் வரும். அதன் சுகமான மேற்கூறிய நினைவுகளையும் சேர்த்து.