Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Thursday, 3 February 2011

பெண்ணாதிக்கம்


"பொண்ணுங்க மனசு பேண்ட் சைஸ் மாதிரி
அப்பப்ப மாறிக்கிட்டே இருக்கும்
பசங்க மனசு சட்டை சைஸ் மாதிரி
எப்பவாவது தான் மாறும்"

அது என்னவோ வலைபதிவில் எழுத ஆரம்பித்ததில் இருந்து இது போன்ற லாஜிக் இல்லாத பல விஷயங்கள் தோன்றி இம்சிக்கின்றன. அதுவும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருக்கும் பொழுதுதான் இவை என்னை புரட்டி புரட்டி எடுக்கிறது. இதுகாரும் பார்த்த தமிழ் சினிமாக்களின் பாதிப்பாகக்கூட இருக்கலாம். "அப்படியே இருந்தாலும் எப்படி நீ இப்படி யோசிக்கலாம்" என்று மகளிர் அணி உடனே பதறிக்கொண்டு என்னைப் பந்தாட புறப்பட வேண்டாம். நான் எழுத வருவது இதை பற்றி அல்ல.

பெண்கள். "இஞ்சினியரிங் படிப்பும் பொண்ணுங்களும் ஒன்னு. எவ்வளவு படிச்சாலும் புரியாது". சென்ற காலங்களில் பெண்களைப் பற்றி என்னிடம் கேட்டால் என்னுடைய பதில் இதுவாகத்தான் இருக்கும். பெண்கள் மீது ஒரு பத்தாம்பசலித்தனமான கண்ணோட்டத்தையே இந்த சமூகம் நமக்கு கொடுத்திருப்பதாக உணர்கிறேன். பெண்கள் மீதான பார்வை சற்று மேலோட்டமானதாகவும் அடிப்படை இல்லாததாகவும் இந்த சமூகம் சித்தரித்து வந்திருக்கிறது. பெண் என்றால் பரிதாபத்துக்குரியவள், வெகுளி, அடிமைப்படுத்தப்பட்டவள் என்று காலங்காலமாக ஆண்களுக்கு போதித்ததோடல்லாமல் பெண்களையும் நம்ப வைத்து மழுங்கடித்திருக்கின்றது இந்த சமூகம். உண்மை என்னவென்று சற்று ஊன்றி கவனித்தால் இது எவ்வளவு தவறு என்று விளங்கக்கூடும்.

இன்று பெண்களுடைய அதீத வளர்ச்சி பற்றி பக்கம் பக்கமாக பேசியும் எழுதியும் வருகின்றனர். எது வளர்ச்சி? ஆணுக்கு போட்டியாய் எல்லாவற்றிலும் சரிசமமாய் விளங்குவதா வளர்ச்சி. 33 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாய் முன்னேறினால் தான் வெற்றியா?  யார் ஆணை ஒரு இலக்காக நிர்ணயித்தது? ஆணை ஜெயிப்பது தான் பெண்ணின் பிறவிப்பயன் போல இன்று பெண்கள் ஓடிக்கொண்டு இருக்கின்றனர்.

பெண்ணுக்கு என்று தனித்தன்மை கிடையாதா. பெண்களுடைய தனித்தன்மைகளை பட்டியலிட்டால் ஆண் 3.3 சதவிகிதம் கூட நெருங்க மாட்டான். பெண்கள் இயங்கும் தளம் வேறு. ஆண்கள் இயங்கும் தளம் வேறு. பெண்ணும் ஆணும் அவரவர் தளத்தில் வெற்றிகரமாக இயங்க ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கவேண்டுமே ஒழிய ஒருவர் தளத்தில் மற்றவர் இயங்க முற்படுவது எப்படி சரியாகும். ஆணைப் போல உடையணியலாம், வேலைகள் செய்யலாம், அரசியல் நடத்தலாம், இன்னபிறவற்றையும் செய்யலாம். ஆனால்அது குரங்கைப்பார்த்து மயில் மரத்துக்கு மரம் தாவும் முயற்சியே தவிர முன்னேற்றம் இல்லை. விபரீதம்.
 

Monday, 31 January 2011

ஏன்?

அழைத்திட பெயர்
திணைப்படி உயர்
பகுத்திட ஆண்
முகவரிக்கு முகம்
இவை போதாதா என்னை இனம்காண?

உரையாட மொழி
உணர்ந்திட மனிதம்
உறவாட அன்பு
உறுத்தாத பண்பு
இவை போதாதா என்னுடன் பழக?

கருமத்தில் நேர்மை
கருத்தில் செறிவு
அறிவின் திறன்
அகத்தில் தீரம்
இவை போதாதா கண்ணியமாய் வாழ?

பின் எதற்காக இந்த சாதி?

என் சமூகத்தால் என் மீது திணிக்கப்பட்ட ஒன்றை
நான் எதற்காகச் சுமக்க வேண்டும்?

என்னை விட
என் சமூகத்திற்குத் தான்
மிகுந்த அக்கறை போலும்

என் சாதியைப் பற்றி

நான் கேள்விப்பட்டதோடு சரி.....

Sunday, 26 December 2010

சாதியை கேட்டா காதலும் தோன்றும்?

"பூமியை கேட்டா வான்முகில் தூவும்
பூக்களை கேட்டா வண்டுகள் பாடும்
வீதியை கேட்டா தென்றலும் வீசும்
சாதியை கேட்டா காதலும் தோன்றும்"

கவிஞர் வைரமுத்துவின் இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இதை சற்று facebook ல் எழுதி நண்பர்களின் கவனத்தை பெறலாம் என்று நேற்று அப்படி செய்து இருந்தேன். நினைத்து போலவே நான் காதலில் விழுந்து விட்டதாக நட்பு வட்டம் சற்று பரபரத்தது. ஆனால் அதில் இரண்டு நண்பர்கள் இந்த பாடலின் சாராம்சத்தை எடுத்து கொண்டு விவாதித்தது என்னை மீண்டும் ஒரு முறை இந்த விஷயத்தை பற்றி யோசிக்க வைத்தது.

சாதி

இந்த இரண்டெழுத்து நோய் கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்து முன் தோன்றிய ஒன்றோ என்னும் அளவு வேர்விட்டு வளர்ந்து இருக்கிறது. ஒருவன் மதம் மாறலாம், நாடு மாறலாம், ஏன் பாலினம் கூட மாறலாம் அனால் பாழாய் போன சாதி மாற முடியாது. எத்தனை சாதிகள் அந்த சாதிகளுள் எத்தனை பிரிவுகள். அடேயப்பா. மனிதர்களை எப்படி எல்லாம் கூறு போட்டிருக்கிறார்கள். கலப்பு திருமணம் சினிமாக்களில் மட்டுமே சாத்தியமாக இருக்கிறது. மற்றபடி நிஜத்தில் சாதீயமே மிஞ்சுகிறது. சாதியை ஒழிக்க புறப்பட்டோர் ஏன் "நான் எந்த சாதியையும் சார்ந்தவன் இல்லை" என்று கூற வழிமுறைகள் ஏற்படுத்தவில்லை? அப்படி கூறுபவர்களுக்கு ஏன் முன்னுரிமை அளிக்க கூடாது? அப்படி செய்தால் சாதீயம் ஒழிய வழி பிறக்காதா? இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் வரை "சாதியை கேட்காவிடில் காதல் தோன்றாமல் இருப்பதே நன்று"