அன்று பிப்ரவரி 14. சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு. வீட்டில் தனியாக நான். சன் டிவியில் காதலர் தின சிறப்பு திரைப்படமாக "காதலன்" திரைப்படம் ஓடிக்கொண்டு இருந்தது. சுமார் மாலை நான்கு மணிக்கு திடீரென்று ஒரு ப்ளாஷ் நியூஸ். முதலில் நான் அதை கவனிக்கவில்லை. சட்டென்று "குண்டு வெடிப்பு" என்றும் "கோவை" என்றும் வார்த்தைகள் தென்பட நான் சற்று பரபரப்பானேன். அம்மாவும் மூன்று வயது தம்பியும் அந்த மாலையில் தான் பாட்டி வீட்டிலிருந்து திரும்ப வர வேண்டும். அப்பாவோ அன்று சனிக்கிழமையாதலால் அரைநாள் வேலை முடிந்து நாமக்கல்லிலிருந்து வார இறுதிக்காக வீடு வரவேண்டிய நாள். இவையனைத்தும் என் மூளைக்குள் ப்ளாஷ் நியூசாக ஓட எனக்கு பதட்டம் தொற்றிக்கொண்டது. டிவியில் திடீர் செய்திகள் ஒளிபரப்பப்பட்டு "குண்டு வெடித்தது R.S .புரத்தில் மட்டுமல்ல" என்று கூறி இடங்களை பட்டியலிட ஆரம்பித்து என் பரபரப்பை படபடப்பாக்கினர்.
செய்வதற்கு ஒன்றுமில்லை. காத்திருப்பு. யாராவது ஏதாவது தகவல் தரமாட்டார்களா என்று மனம் அடித்துக்கொண்டது. வெளியில் ஓடினேன். யாரேனும் டவுனிலிருந்து வந்தால் நிலவரம் என்ன என்பதை அறியலாம் என்று காத்திருந்தேன். அம்மாவுடன் பணிபுரியும் இருவர் நடந்து வந்துகொண்டிருந்தனர். யார் என்று நினைவில்லை.
"அங்கிள்... டவுனுக்குள்ள எப்படி இருக்கு அங்கிள்". பொத்தாம்பொதுவாக நான் கேட்க அவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
"ஏன் என்ன ஆச்சு?" என்றார்கள்.
சரி அவர்களுக்கு இன்னும் செய்தி எட்டவில்லை போலும். எனக்கு சப்பென்று ஆனது.
"R.S. புரத்துல குண்டு வெடிப்புன்னு நியூஸ் வந்துது அங்கிள்" என்றேன்.
"அம்மாவும் தம்பியும் பாட்டி வீட்டுக்கு போயிருக்காங்க. இப்போ திரும்பி வர்ற நேரம். அதான் என்ன ஆச்சுனு தெரியல அங்கிள்" குரல் சற்று உடைந்து விட்டிருந்தது.
நான் கூறியதை அவர்கள் அதிகம் சட்டை பண்ணியதாக தெரியவில்லை. அநேகமாக என் பரபரப்பு அவர்களை தொற்றியிருக்க வேண்டும். அதை நான் சட்டை செய்யவில்லை.
சம்பிரதாயத்துக்கு "ஒன்னும் பயப்படாத கவின். வந்துருவாங்க" என்று கூறிவிட்டு அவர்கள் வீடு நோக்கி பயணித்தனர்.
நான் மறுபடியும் வீட்டினுள் ஓடி வந்து வேறு ஏதாவது தகவல் இருக்குமா என்று டிவியில் பார்க்கிறேன். இப்பொழுது சம்பவம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களை ஒலிபரப்பிக்கொண்டிருந்தனர். எனக்கோ சம்பந்தமில்லாமல் பல கற்பனைகள் மனதை அரித்தன. "ச்சே. ஒன்னும் இருக்காது டா" என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.
கிடை கொள்ளாமல் வீட்டினுள் சற்று நேரம் வெளியில் சற்று நேரம் என்று உலவினேன். யாரிடமாவது பேச வேண்டும் போல இருந்தது. வீட்டைப் பூட்டிக்கொண்டு அருகிலிருந்த மூர்த்தி அண்ணனின் இஸ்திரி கடைக்கு விரைந்தேன். வானம் இருட்டிவிட துவங்கி இருந்தது. அங்கும் சன் டிவி தான் ஓடிக்கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் அதே காட்சிகள்.
"என்ன கவின். நியூஸ் பாத்தியா" என்றார்.
"ஆமா ணா. அம்மாவும் தம்பியும் வேற சிங்காநல்லூர் போயிருக்காங்க. எப்படி வருவாங்க னு தெரியல ணா".
அழ வேண்டும் போல இருந்தது. அடக்கிக்கொண்டேன். என் வாடிய முகத்தைக் கண்டதும் அவருக்கும் சற்று சங்கடமாகி இருக்க வேண்டும். சற்று நேர மௌனம். "ஒன்னும் பிரச்சினை இருக்காது கவின்" அதற்கு மேல் அவருக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.
"அப்பா எப்படி வருவாரோ" அடுத்த பதட்டம்.
"போன் ஏதாவது வந்துதா?"
"இல்ல ணா."
"அங்க பாட்டி வீட்டு பக்கத்துல யார் வீட்டிலையாவது போன் இருக்கா?"
"இருக்கு ணா. ஆனா என்கிட்டே நம்பர் இல்லை" இதையெல்லாம் வாங்கி வைக்க வேண்டும் என எனக்கு ஏன் தோன்றவில்லை. என்னை கடிந்து கொண்டேன். சரி அம்மாவாவது போன் பண்ணி சொல்லலாமில்ல. அம்மா மீதும் கோபம் வந்தது.
"அய்யய்யோ. இப்போ யாராவது போன் பண்ணினா. அண்ணா நான் வீட்டுக்கு போறேன்"
மறுபடியும் வீடு.
போனின் மீது என் பார்வை படிந்து கிடந்தது. பெரியம்மாவுக்கு போன் பண்ணி நம்பர் கேட்டா என்ன. போன் செய்தேன். லைன் கிடைக்கவில்லை. மாய்ந்து மாய்ந்து மறுபடி மறுபடி டயல் செய்கிறேன். ஹ்ம்ம். பயனில்லை.
காத்திருப்பு.
செய்தி சொல்லி மாய்ந்து போனவர்கள் மீண்டும் காதலன் திரைப்படத்தை ஓடவிட்டனர். கண்கள் டிவியிலும், காது டெலிபோனிலும், மனது அம்மாவின் மீதும் இருந்தது. சுமார் ஒருமணி நேரம் அப்படி அமர்ந்திருப்பேன் என்று நினைவு.
வாசலில் TVS 50 யின் அரவம். சடாரென்று வெளியில் துள்ளி ஓடினேன். அங்கே அம்மாவும் தம்பியும் உடன் நடராஜ் மாமாவும் வண்டியிலிருந்து இறங்கினர். அதுவரை துடிக்க மறந்த இதயம் உயிர் பெற்று வேகவேகமாக துடித்தது. அழுகை சிரிப்பு என கலந்து ஒரு விதமான மனநிலை.
"அண்ணா" என்று மழலையாய்ச் சிரித்தான் பிரவின். அப்படியே ஓடிச்சென்று தம்பியை வாங்கி முத்தம் கொஞ்சிவிட்டு அம்மாவை கட்டிக்கொண்டேன். "எப்படிமா வந்தீங்க" தழுதழுத்தது குரல்.
"மாமா வந்தாங்க சாமி. மாமா கூட்டிட்டு வந்ததுனால ஆச்சு"
ஏன் போன் பண்ணல என்று ஏனோ கேட்க தோன்றவில்லை.
மனம் லேசாகிவிட்டிருந்தது.
இப்பொழுது அப்பா. எல்லாம் இன்று ஒரு சேர நிகழ வேண்டுமா. ஒவ்வொரு வாரமும் அப்பா வரும் வார இறுதி தான் எங்கள் பண்டிகை தினம். அன்றுதானா இதெல்லாம் நிகழ வேண்டும். அம்மாவும் மாமாவும் இருப்பதால் சற்று தைரியம் வந்தது. மீண்டும் நால்வருமாக இன்னொரு இரண்டு மணிநேரம் காத்திருந்து கரைக்க வேண்டியிருந்தது.
டெலிபோன் மணி ஒலித்தது. பாய்ந்து சென்று எடுத்தேன். நம்பிக்கை பொய்க்கவில்லை. அப்பாதான்.
"கவின். அப்பா பேசறேன்"
"சொல்லுங்க டாடி. எங்க இருக்கீங்க"
"லாலிரோடு கிட்ட இருக்கேன். ஒன்னும் பயப்பட வேண்டாம். இன்னும் ஒரு அரைமணி நேரத்துல வந்துருவேன். சரியா?"
"சரி டாடி. வடவள்ளி வந்துட்டு போன் பண்ணுங்க"
"சரி. வெக்கட்டா"
அப்பா சொன்னதை அம்மாவிடமும் மாமாவிடமும் ஒப்பித்தேன். மீதி உயிரும் திரும்பி வந்தது.
"அப்பா வன்னுட்டாங்க்லா" பிரவின் அவன் மொழியில் கேட்டான்.
"இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க" என்றதும்
"ஐயா" என்று சிரித்தான்.
சுமார் ஒன்றரை மணி கழித்து அப்பா நடந்தே வந்து சேர்ந்தார். பஸ் கிடைக்காமல் லிப்ட் கேட்டு கேட்டு மாறி வந்ததைச் சொன்னார். பதட்டம் தணிந்து இயல்பு நிலை திரும்பிய தருணம் அது.
இத்தனை வருடங்கள் கழித்தும் கூட பிப்ரவரி 14 என்றால் இந்த நினைவு வருவதை தவிர்க்க முடிவதில்லை.
எனக்கு அது ஒரு மீண்ட சொர்க்கம் .......
நல்லா நடை..வாழ்த்துக்கள் மாமா..
ReplyDeleteநன்றி சரவணா
ReplyDeleteஅழகாக எழுதுகிறாய். வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சந்தோஷ்
ReplyDelete