Thursday, 3 March 2011

இருளில் நழுவிய நிழல்

வானம் மேகமூட்டத்துடன் உறுமிக் கொண்டிருந்தது. பெரிய வீட்டின் திண்ணைக் கட்டிலில் அமர்ந்து தென்னை ஓலைப் பந்தலின் விலகிய தடுக்குகளின் ஊடே வானத்தைப் பார்த்து அமர்ந்திருந்தார் கருப்புசாமி தாத்தா. மழை வரும் அறிகுறி தெரிந்ததால் கொடியில் உலர்த்தியிருந்தத் துணிகளை வேகவேகமாக எடுத்து தன் தோளில் போட்டுக்கொண்டிருந்தாள் சித்ரா. 

"தே அம்மிணி அந்தா ஒரு துணி கெடக்குது பார்றா" என்று மருமகளை நோக்கி கூவலொன்றை விடுத்தார். 
பதில் கிடைத்தார் போல தோன்றவில்லை அவருக்கு. அப்படியே பதிலளித்திருந்தாலும் தனக்கு கேட்டிருக்காது என்றும் தோன்றியது அவருக்கு. நீண்ட நாட்களாகவே அவருக்கு அவ்வளவாக காது கேட்பதில்லை. அவருக்கு உடலில் வலுவிருந்த மட்டும் அவருக்கு புரிவதற்காக சுற்றியிருந்தவர்கள் சற்று உரக்க பேசவும் சைகையால் தெளிவுபடுத்தவும் சிரத்தை எடுத்துக்கொண்டனர். வலது கால் நரம்பை தேவையற்று வளர்ந்த எலும்பு ஒன்று அழுத்தி அவரை நிற்கவோ நடக்கவோ முடியாமல் படுக்கையில் தள்ளியதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அந்த சிரத்தையை அவர்கள் குறைத்துக் கொண்டனர். செல்லம்மா பாட்டி அண்டை வீட்டு சாந்தியுடன் பழமை பேசுவதெல்லாம் இப்பொழுது அவருக்கு ஊமை படம் போலத்தான் தெரிகிறது.

அவ்வப்போது பொறுமை இழந்து "இதா டேய் என்ன டா பேசிக்கிறீங்க" என்று கேட்டும் விடுவார்.

செல்லம்மா பாட்டியும் "ஒன்னுமில்ல" என்று ஒப்புக்கு இதில் பாதி அதில் பாதி என்று அரைகுறையாக எதையாவது கூறிவிட்டு மீதியை அவர் அனுமானத்திற்கு விட்டு விடுவாள். அவரும் ஏதோ இதையாவது சொன்னாளே என்று பேசாமல் இருந்து விடுவார்.

மிகவும் சிரமப்படுகிறாரே என்று அவரது மகன்களும் காது கேட்பதற்கான மிஷின் ஒன்றை வாங்கித்தான் கொடுத்தார்கள். ஆனால் அதுவும் சிறிது நாள் கழித்து அதன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டதற்கு பிறகு அந்த அமைதியான உலகம் தான் அவருக்கென்றானது.
அவர் கூறிய திசையில் சென்று கீழே கிடந்த துணியை எடுத்து கொண்டு சித்ரா அவள் குடியிருந்த போர்ஷனுக்குள் புகுந்து கதவை தாளிட்டாள். அவளாகவே எடுத்தாளா இல்லை தான் கூறி எடுத்தாளா தெரியவில்லை. ஆகமொத்தம் எடுத்துக் கொண்டு விட்டாள் என்று அமைதி அடைந்தார். அனால் அவர் மனம் சிறிது நேரமாகவே அமைதியாக இல்லை. மழைமேகம் போல அவர் மனமும் கறுவிக்கொண்டு தான் இருந்தது. காரணம் இல்லாமல் இல்லை. சற்று உடலை நகர்த்தி கதவின் வழியே எட்டிப்பார்த்தார். செல்லம்மா பாட்டியை அவர் கண்கள் தேடின. அவள் அங்கு இல்லை. 
"ஹ்ம்ம். எப்படி இருப்பா" என்று நினைத்துக் கொண்டார். மனது நிலையில்லாமல் தவித்தது. தன் நிலையை நினைத்து வருத்தம் கொண்டார்.

வாசலில் யாரோ ஒரு பெண்ணுருவம் செருப்பை கழற்றி வைப்பது தெரிந்தது. கூர்ந்து கவனித்தார்.
"அப்பா என்ன இங்க உக்காந்துட்டீங்க"
"அடே சின்னக்கண்ணு. வா இப்பத்தான் வேலை முடிஞ்சு வர்றியா?"
"ஆமா பா. நீங்க ஏன் இங்க உக்காந்துட்டீங்க. லைட்டு கூட போடாம?"
"என்ன பண்றது சாமி. இந்த காலு மட்டும் நல்லா இருந்தா நான் இப்படி உக்காருவனா. நடக்க முடிய மாட்டேங்குதே"
"காலு வலிக்குதா பா"
"வலி இல்ல சாமி. குடைச்சலு. நிக்க முடியல. நடக்க முடியல. அதேன் அங்க உக்கார்ற? இவடத்தாளைக்கு வா"
"சரி சரி வரேன். நீங்க சொல்லுங்க" உரக்க பேச வேண்டி இருந்தது.
"என்னத்த சொல்றது கண்ணு. ஒன்னுஞ்சரியில்ல" குரல் கம்மியது அவருக்கு.
"ஏன் ப்பா என்ன சரியில்ல"
"ஒன்னும் சரியில்ல அதான் சொல்லுவேன். கெடையில விழுந்துட்டா அவளோதான. ஏதாவது பாக்குறீங்களா செய்யுறீங்களா. போடா சாமி"
"இப்போ என்ன நடந்துருச்சுனு கவலைப்படுறீங்க? அம்மா எங்க?"
"எங்கியோ போயிட்டா"
"எங்கியோ போயிட்டாளா? எங்க"
"எங்க. வடக்கால சின்னத்தாயி வூட்டுக்கு போயிருப்பா"
"ஏன் சண்டையா?"
அவருக்கு கேட்கவில்லை. தரையை வெறித்து பார்த்து அமர்ந்திருந்தார்.
மழை லேசாக தூறல் விட ஆரம்பித்திருந்தது. பேச்சரவம் கேட்டு கதவை திறந்து வெளியில் வந்தாள் சித்ரா. 
"வாங்க அண்ணி. நல்லா இருக்கீங்களா? அண்ணன் எப்படி இருக்காருங்க?"
"நல்லா இருக்கோம். தம்பி எங்க?"
"நைட் ஷிப்டுக்கு போகோனுமுங்க. அதான் தூங்கறாருங்க"
"சரி சரி"
"இருங்க காப்பி வெச்சுட்டு வரேன்" என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள். 
மழை சற்று வலுப்பெற ஆரம்பித்தது. தலையில் கையை வைத்து மழைக்கு மறைத்துக்கொண்டே விடுவிடுவென நடந்து வந்தாள் செல்லம்மா பாட்டி.
"கண்ணு. நல்லா இருக்கியா? எப்ப வந்த?"
"இப்ப தான் மா வந்தேன். நீங்க எங்க போனீங்க?"
"சும்மா சின்னத்தாயி ஊட்டு வரைக்கும் போயிட்டு வந்தேன்"
"அப்பன தனியா விட்டுட்டு நீங்க பாட்டுக்கு போறீங்க?"
"அப்பனுக்குத் தான் நான் வேண்டாமா மா. உங்க வூட்டுல கொஞ்ச நாளு. அண்ணன் வீட்டுல கொஞ்ச நாளுன்னு இருந்து காலத்த கழிச்சுக்க போகுதாமா?"
"என்ன மா சொல்றீங்க"
"அப்பனையே கேளு. சாயந்தரத்துல இருந்து சீராடிட்டு உக்கார்ந்திருக்குது"
இவர்கள் சம்பாஷனை புரியாமல் இருவர் வாயையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார்.
"என்னப்பா? அம்மா என்னவோ சொல்லுது?"
"என்ன சொல்றா?"
"அம்மா வேண்டாம்னு சொல்றீங்களாமா?"
"ஆமா"
"ஏன் அப்படி"
"அவளுக்குத் தான் நான் இருக்கறது சங்கடமா இருக்குது. எனக்கு சோறாக்கிப் போடவும் தண்ணி வாத்துவிடவும்னு ரொம்ப சிரமப்படுறதா சொல்றா"
"இப்படி சொன்னா எப்படி" செல்லம்மா பாட்டி அதட்டினாள்.
"இதா நீ பேசாம இரு" மனதில் திரண்ட கோபம் தன் இயலாமை தொட்டு கண்ணீராக உருவெடுத்தது.
"நான் இருந்தா எல்லாருக்கும் சிரமம். இந்த உசிரும் போக மாட்டேங்குது. நான் என்ன செய்வேன்" பெருங்குரலெடுத்து சிறுபிள்ளை போன்று அழலானார். 
இருவரும் என்ன செய்வதென்று அறியாமல் செவ்வனே அவர் அழட்டும் என்று அமர்ந்திருந்தனர்.
மழை ஜோராக பெய்து கொண்டிருந்தது.
"நடக்க முடிய மாட்டேன்குது. ஒடம்புல வலுவில்ல. காது செரியா கேக்க மாட்டேங்குது. கண்ணு பார்வை மங்கிட்டே போகுது. ஒக்காந்தா ஒக்காந்த கெட. படுத்தா படுத்த கெட. அம்மா மதிக்க மாட்டேங்குறா. எதுக்கெடுத்தாலும் திட்டறா"
"இப்போ என்ன திட்டிட்டாங்கன்னு இப்போ இப்படி ஒப்பாரி வெக்குறீங்க?"
"நீ பேசாம இருன்னு சொன்னேன். ஏதாவது பேசுநீன்னா பாரு அப்புறம்" என்று மனைவியை நோக்கி கர்ஜித்தார்.
"ஆனாட்டி நீங்களே பேசுங்க. வெகு அழகுதான் போங்க"
"இப்போ என்னப்பா நடந்துருச்சுனு அழுகுறீங்க?"
"நடக்க முடிய மாட்டேங்குது காது கேக்க மாட்டேங்குது. ராத்திரி காலு கொடச்சலு. தூக்கம் வரமாட்டேங்குது. அம்மாள கூப்பிட்டு தைலம் தேச்சு விட சொன்னா ஆத்தரப்படுறா"
"ஏங்கண்ணு. ராத்தி பூரா தூக்கம் வராம பேசிக்கிட்டே இருக்குது. என்னையும் தூங்க விடுறதில்ல. பகல் பூரா வேலை செஞ்சுட்டு மனுஷன் கண்ணு அசரலாம்னா முடியறதில்ல. எனக்குன்னா கஷ்டமா இருக்காதா"
"என்னம்மா பண்றது அப்பனுக்கும் முடியாம தான கஷ்டப்படுது"
"பாரு கண்ணு. மத்தியானம் தூக்கத்துல தெரியாம நனச்சுட்டேன். அது வர்றது கூடவா ஒனத்தி இல்லன்னு திட்டுறா. தெரிஞ்சே நான் செய்வனா?" கைக்குட்டையால் மூக்கை சிந்தியபடி அழுகையை தொடர்ந்தார்.
"ஏம்மா தெரிஞ்சா பண்ணும் அப்பன். அதுக்கு போய் ஏம்மா சங்கடப்படுறீங்க" அம்மாவின் சிரமம் தெரிந்தும் அதை வெளிக்காட்டாமல் அப்பாவுக்காக பரிவு காட்டினாள் மகள்.
"சங்கடம் என்ன கண்ணு சங்கடம். என்கிட்டே சொல்லி இருந்தா நான் வழி பண்ணி இருப்பனில்லன்னு சொன்னேன். இது ஒரு குத்தம்னு அப்பிருந்து ஒரே ஓரியாட்டம்"
"என்ன உன்கூட கூட்டிட்டு போயிரு கண்ணு" கண்ணை துடைத்து கொண்டு தீர்க்கமாய் கூறினார் தாத்தன்.
"அம்மா?"
"அவ இங்கயே இருக்கட்டும். என்ன மட்டும் கூட்டிட்டு போ."
"ஒன்னும் இல்லப்பா. அம்மா இனி நீங்க சொல்றமாதிரி நடக்க சொல்றேன் இருங்க"
"இல்ல கண்ணு. இனி ஒன்னும் செரிப்பட்டு வராது. நீ இல்லாட்டி என்ன அண்ணன் வீட்ல விட்டுரு"
"எங்க வீட்டுக்கு வந்தா இருந்துக்குவீங்களா? திரும்ப கொண்டு வந்து விடச் சொல்லி சொல்லக் கூடாது"
"இல்ல சொல்ல மாட்டேன்"
சித்ரா காப்பி கொண்டு வந்தாள்.
"இந்தாங்க அண்ணி"
"மாமா இந்தாங்க. அத்தை இந்தாங்க"
"எனக்கு அரை கெளாசு குடு."
"அட குடீங்கப் பா"
மகள் சொல்லை தட்டாது வாங்கிக் குடித்தார்.
"மாமா என்ன சொல்றாருங்க?" அவருக்கு கேட்காதவாறு விசாரித்தாள்.
"என்ன சொல்றாரு. அதே பழைய கத தான். அம்மா சொன்ன கேக்க மாட்டீங்குறா. அதனால எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறதாமா"
"ஏங்கண்ணி நீங்க வேற. அத்தைக்கு என்ன சிரமம் தெரியுங்களா. படுத்த கிடையிலயே எல்லாமேங்க அண்ணி. அத வழிச்சு தொடச்சு சுத்தம் பண்ணி குளிச்சு விட்டு துணி தொவச்சு போட்டுன்னு இந்த வயசுல ஆன வரைக்கும் பாக்குறாங்க. அவங்கள போய் கோவிச்சுகிட்டா என்னங்க அண்ணி பண்றது"
"அட. எனக்கும் தெரியுது. சொன்னா கேக்க மாட்டேங்குறாரு. புரிஞ்சுக்கறதில்லை. என்ன பண்றது"
நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டே காப்பியை குடித்து முடித்திருந்தனர். மழையும் வேகம் குறைந்து மீண்டும் தூறிக்கொண்டிருந்தது.

"சரிம்மா நான் கெளம்பறேன். அவரு வர்ற நேரம் ஆச்சு. என்னப்பா என்கூட வரீங்களா? துணி மாத்துங்க போலாம்" ஒப்புக்குத்தான் கேட்டாள்.

"எங்க? உங்க வீட்டுக்கு கூப்பிடுறியா? இல்ல சாமி அங்க வந்தா சரிப்பட்டு வராது. எனக்கு இங்க தான் சரி. இன்னும் என்ன சாமி கொஞ்ச நாளு. அம்மா இருக்கறா என்னப் பாத்துக்கறதுக்கு. அவளும் கெடையில உழுகாம இருந்தாப் போதும். அம்மானன்காட்டிக்கு இவளோ தூரம் என்னப் பாத்துக்கறா. உங்க வீட்டுக்கு வந்தா நீ வேலைக்கு போயிருவ. அண்ணன் வீட்டுக்கு போனாலும் சரியா வராது. நீ போ சாமி. அவீய வர்ற நேரம் ஆச்சுல்ல" என்று மனம் தெளிந்தவராய்ப் பேசினார். 
"ஆங். இப்படி சொன்னா எப்படி இருக்கு. அத விட்டுட்டு. அம்மா கேட்டுகிட்டீங்களா? அப்பன நல்லாப் பாத்துக்கங்க"
"நான் பாத்துக்கறேன் சாமி. நீ பத்தரமா போயிட்டு வா"
"சரிம்மா. வரட்டா. சரிப்பா நான் போயிட்டு வரட்டுமா? ஒடம்ப பாத்துக்குங்க"
"சரி சாமி. நீ பாத்து போயிட்டு வா" என்று மகளை வழியனுப்பினார்.

இப்பொழுது மழை நின்று போய் வானம் வெளுத்திருந்தது.




No comments:

Post a Comment