Saturday, 12 February 2011

விடியாத காலை

சன்னமாய் இமை மடல்களை வருடும் சூரியன்.
தன்னிச்சையாய் நான் இழுக்கும் போர்வைக்குள் புகும்
அம்மாவின் கெஞ்சல்.

சட்டென எழுந்து
அப்பாவுடன் சவரக் கண்ணாடியில் முகம் பார்த்து
இளையவனைத் தட்டி எழுப்பி
காலைக்கடன் முடித்தவுடன்
நுரைத் ததும்பும் காபியின் ஸ்பரிசம் என் கையில்.

காலைப்பனியை நுகர பலகணிக்கு நகர்கிறேன்
இன்றாவது குறி தவறாதா என யோசிப்பதற்குள்
என் காலடியில் குடிபுகும் நாளிதழ்
அதனை புரட்டி முடிக்கையில்
தலை துவட்டிக்கொண்டு அப்பா.

குளியலறைக்குள் நான் நழுவ எத்தனிக்க
என்னை முந்திக்கொண்டு புகுகிறான் என் பிறந்தவன்
ஒருவாறாக ஆயத்தமாகையில்
கடுகு தாளிக்கும் வாசம்.
அவசரமாய் உண்டுவிட்டு வீட்டினின்று கிளம்புகிறேன்.

அண்டைவீட்டு வாசலில்த் தெளிக்கும்
 நீருக்குத் தப்பித்து
அழகழகாய்ப் பூத்திருக்கும்
கோலங்களைத் தாண்டிக்குதித்து
முதுகில் அழுத்தும் புத்தகப்பையை சரிசெய்து
நடையைத் தொடர்கிறேன்.

ஆவியினின்று ஆடை விலக்கும்
பாட்டிகடை இட்டிலி
வாகனம் கொள்ளாத சாமான்களின்
மீதமர்ந்து ஒய்யாரமாய் பவனி வரும்
மளிகைக்கடைக்காரர்
நாசிக்கு இதமாக
பூக்கடையின் மல்லிகை மணம்.

இவற்றை கடக்கையில்
சட்டென
நினைவுகள் அகல
கனவு கலைய
மீண்டும் போர்வைக்குள் நான்.

திரைசீலையை விலக்கிப்
பார்க்கிறேன்
இன்னும் விடியாத
அயல்நாட்டு காலைப்பொழுதை
எதிர்நோக்கி.......


No comments:

Post a Comment