Wednesday 2 March 2011

எனது பக்கங்களில் கிறுக்கியவர்கள் - ரங்கநாதன் அங்கிள்

அந்தச் சிறுவனுக்கு ஆறு வயது இருக்கும். அவனும் அவர்களும் செல்ல வேண்டிய பேருந்தில் இடம் பிடிக்க மக்கள்க்கூட்டம் அலைமோதுகிறது. சட்டென்று இருகரங்கள் அவனை உயர்த்திப்பிடித்து பேருந்தின் ஜன்னல் வழியாக சீட்டில் அமரவைக்கிறது. அந்தச் சிறுவன் நான். அந்த கரங்களுக்கு சொந்தக்காரர் ரங்கநாதன் அங்கிள். அந்தக் கைகளின் அண்மையை நான் ஏனோ இன்று உணர்ந்தேன். என்னை மறந்து எழுதிக்கொண்டும் இருக்கிறேன்.

மெலிந்த தேகம், சட்டையில்லா திறந்த மார்புக்கும் வயிற்றிற்கும் இடையே கட்டப்பட்ட லுங்கி, விரலிடுக்கில் புகைந்து வழியும் சிகரெட். இதுதான் என் மனதில் பதிந்த அவரது உருவம். "நல்லாயிருக்கியா ராஜா" என்று நேற்று அழைத்தது போன்று இருக்கிறது.

1976 ம் வருடம் குன்னூரில் அப்பாவுடன் துளிர்விட்ட அவரது சினேகம் பல பருவங்களைக் கடந்து பெரும் விருட்சமாய் வளரத் துவங்கி,  "சொந்தக்காரங்கள விட அவன் எனக்கு பெருசு" என்ற இறுமாப்புடன் ஓங்கி நின்றிருக்கிறது.  இருவருக்கும் கருத்து வேறுபாடு உண்டு. இருவருக்கும் வெவ்வேறு குணாதிசயங்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒன்றுபடும் ரசனை. இவையனைத்தையும் ஒருங்கிணைத்த ஒரே புள்ளி நட்பு. அப்பாவை நான் அதிக குதூகலத்துடன் பார்த்தது அங்கிளுடன் தான். என்ன பிரச்சனை என்றாலும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்ததில்லை. நல்லது கெட்டது எதுவாயினும் அவர்கள் இணைந்தே செய்தனர். வியப்பு தான் எனக்கு.

அவரைப் பற்றி என் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமான புரிதல் இருந்தது. கிண்டல் கேலி என்று விளையாட்டு காட்டியது ஒரு பருவம், என் அமைதியை கொண்டாடியது ஒரு பருவம், சிறுவயதில் என் பக்குவத்தை மெச்சியது ஒரு பருவம், படிப்பின் பால் கண்டித்தது ஒரு பருவம், என் வாலிப வயதுக் கோபங்களை நெறிப்படுத்தியது ஒரு பருவம் என்று இன்னும் எத்தனையோ. எதைச் சொல்வேன்? அவரை நினைத்தவுடன் எண்ணச்சுழல்களில் உழலும் மனதை அடக்கியமர்த்த முடியாமல் திணறுகிறேன்.

ஒருமுறை அப்பா விளையாட்டாக நான் சிங்காநல்லூர் சென்றதை சிங்கப்பூர் சென்றதாக கூறியதை கேட்டு அகமகிழ்ந்து அவரும் ஆண்ட்டியும்  ஊரில்லுள்ளவர்களிடம் பெருமிதப்பட்ட கதையைச் சொல்லவா?

ஒரே ஸ்கூட்டரில் நான், அவர், அப்பா, அம்மா என நால்வரும் பயணித்ததைச் சொல்லவா?

என் முதல் கிரிக்கட் மட்டையை வீரர்களைப் போல் கக்கத்தில் வைக்கச் சொல்லி நடந்துவரச் செய்து அழகு பார்த்ததைச் சொல்லவா?

தொணதொணவென்று பேசும் என்னை என் போக்கிலேயே பேச விட்டு ஆர்வம் குறையாமல் ரசித்ததைச் சொல்லவா?

பத்தாவது பொதுத்தேர்வில் 92 சதவிகிதம் பெற்றதை ஆர்வத்துடன் நான் கூற, "இந்த மார்க் போதும்னு நெனைக்கிறியா" என்று என்னை திணற வைத்ததைச் சொல்லவா?

"நல்லா கார் ஓட்டுற ஆனா டாப் கியர்ல ஸ்லோ பண்ணும் போது என்ஜின் இடிக்குது பாரு" என்று விமர்சித்துவிட்டு, "நம்ம பசங்க கார் ஓட்டி நாம உக்காந்து வர்ற சுகமே தனி" என்று நெகிழும் அவர் பாங்கைச் சொல்லவா?

"எப்போ பாத்தாலும் உன் பிரெண்ட்ஸ் கூட போன்ல பேசிட்டே இருக்கியாமே? உங்கப்பன் பீல் பண்றாண்டா. பாத்துக்கோ" என்று கல்லூரி படிக்கும் சமயத்தில் அப்பாவுக்கும் எனக்கும் பாலமாக இருந்ததைச் சொல்லவா?

எதைச் சொல்ல யோசித்தாலும் அந்த மயானமும் அவர் சமாதியும் அதன் தலைமேட்டில் அவருக்கு பிடிக்கும் என்று பரப்பி வைத்திருந்த சிகரட்டுகளும் குவாட்டர் பாட்டிலும் நினைவுக்கு வருகிறது.
சிறுவயதில் எனக்கு சிகரட் புகையினால் வளையம் விட்டு வேடிக்கை காட்டிய பொழுது எனக்கு தெரியவில்லை, பின்னாளில் அந்த வளையம் போலவே கரைந்து போவார் என்று. 
இனி ஈரோடு செல்லும் வழியில் செங்கோடன் பள்ளமும் சக்தி நகரும் வெறும் அடையாளங்களாய் மட்டும் தோன்றும். நினைவுகளை மட்டும் பறைசாற்றும்.

ஏதாவது ஒரு உரையாடலின் இடையே அவரைப் பற்றி குறிப்பிட்ட பிறகு ஒரு வெறுமை அடைவதும், அதன் தொடர்ச்சியாக கண்களில் துளிர்க்கும் கண்ணீரை யாரும் அறியாதவாறு துடைத்திடும் அப்பாவை காணும் பொழுது என் நெஞ்சம் கனத்துதான் போகிறது.

ஒருமுறை அக்காவின் (பெரியம்மா மகள்) திருமணத்தின் போது மேடையில் நின்று புகைப்படம் எடுக்க அம்மா அழைத்த போது "இப்போ எதுக்குங்க. நம்ம கவின் கல்யாணத்துல நின்னு போட்டோ எடுக்கறது தாங்க அமைப்பா இருக்கும்" என்றார்.

அங்கிள், நாளை என் திருமணத்தின் போது நீங்கள் நிற்க வேண்டிய இடம் வெற்றிடமாகத் தான் இருக்கப் போகிறது. அதை கண்ணீர் விட்டு நிரப்புவதைத் தவிர நான் வேறு என்ன செய்ய?




2 comments:

  1. நல்ல பதிவு.
    திரு ரங்கநாதனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க ஐயா..

    ReplyDelete