Thursday 27 January 2011

வெயில்

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதை நான் உணர்ந்தே வளர்ந்திருக்கிறேன். சிறுவயதில் நண்பகல் வெயிலில் விளையாடும் பொழுதும் சரி. வளர்ந்து ஏசி ரூமில் வேலையில் அமர்ந்த பிறகும் சரி. வெயிலின் உக்கிரத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடிந்ததே இல்லை. பிசுபிசுவென்ற வியர்வையும், தொண்டை வறண்டு போகும் தாகமும், கண்கள் கூசும் அந்த பிரகாசமும், சட்டென்று களைக்க வைத்திடும் அதன் சுபாவமும் சொல்லி மாளாது. அந்த வெயிலில் வெளியே கிளம்புவதென்றால் ஒரு மலைப்பு தோன்றுமே. நீண்ட நடையின் இடையே நிழல் தேடும் கண்களும் இளைப்பாற எங்கும் கால்களும் வெயிலின் கொடுங்கதை கூறும்.

 நமது ஊரின் வேனிற்காலம் இப்படியென்றால் இங்கு இங்கிலாந்திலோ வெயிலை வரவேற்று கொண்டாடுகின்றனர். உறுத்தாத சூரியன் இயல்பான தென்றல் என்று இதயம் வருடும் வேனிற்காலம் இங்கு. கடுங்குளிர் கால வசத்திலிருந்து மீண்டு வெளிஉலகம் காணும் திருவிழா. சூரியன் இங்கு ஒரு ஹீரோவாகவே தோன்றுகிறார். வசந்தம் அருளிய மலர்களுடன் தென்றலோடு கொஞ்சி மகிழும் மரங்களும், காணாது கண்ட விருந்தினரை வரவேற்க புத்தாடை அணிந்தது போன்று தவழ்ந்து திரியும் நதியினமும், பருத்தியில் பூத்து கடலினில் குளித்து எங்கும் நிறைந்திருக்கும் மக்கள் கூட்டமும் அடேயப்பா. சாலமன் பாப்பையா பாணியில் கூறவேண்டுமானால் 'அருமையா அருமை'.
ஆனால் வெயில் வந்தவுடன் இவர்கள் செய்யும் அளப்பறைகளை கண்டு ரொம்ப அலட்டிக்கொள்கிறார்கள் என்று நினைத்தது உண்டு. ஆனால் இரண்டு குளிர் காலங்களை கடந்த பிறகு தான் புரிந்தது வெயில் இவர்களுக்கு எவ்வளவு அதிசயம் என்று. நானும் அந்த அதிசயம் வர காத்துக்கொண்டிருக்கிறேன்.

இது இப்படி இருக்க நேற்று முன்தினம் பேஸ்புக்கில் வலம் வந்து கொண்டிருக்கையில் புகைப்படம் ஒன்றை கடந்தேன். நண்பன் ஒருவனது கல்லூரிப் புகைப்படம். ஈரோட்டைச் சேர்ந்தவன். அந்த புகைப்படத்தில் அவனும் அவன் நண்பர்களும் கல்லூரி விடுதியின் மாடியில் நண்பகல் வெயிலில் நிற்பது போன்ற புகைப்படம். அதைப் பார்த்தவுடன் சட்டென்ற ஒரு பரவசம். என்னவென்று சரியாக கணிக்க முடியவில்லை. சிறிது நேரம் கழித்து தான் உறைத்தது. உறைத்தது உண்மை மட்டுமல்ல கொங்கு மண்டல வெயிலும் தான். அந்த வெயில் தான் எனை சிறிது நேரம் தன் பிடியில் ஆட்கொண்டிருந்திருக்கிறது. சுள்ளென்று உடல் முழுவதும் பரவி சிலிர்த்தது. என்னையா பிடிக்காது என்கிறாய்? என்று வெயில் என்னை கேள்வி கேட்டது. அந்த உணர்வுக்கு என்ன காரணம்? என் வயதல்லவா வெயிலுக்கும் எனக்கும் உள்ள பந்தத்தின் வயது. வெயிலுடனே அல்லவா என் உடலும் உள்ளமும் பயணப்பட்டு இருக்கிறது. அதுதான் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆத்ம தோழனை கண்டது போன்ற ஒரு உணர்ச்சி பிரவாகம். அந்த உணர்வு என்னை இன்னும் விட்டு விலகவில்லை. எனக்கும் அது பிடித்து தான் இருக்கிறது. இங்கு போல் வெயில்காலத்தில் அன்பை பொழிவதும், குளிர் காலத்தில் புறக்கணிப்பதுமான வேலை என் வெயிலுக்கு கிடையாதே. என்றும் நிலையான ஒரு சீரான அன்பு. அந்த வெயிலை ஆரத்தழுவி ஆசைதீர பருக மனம் வேட்கை கொள்கிறது. அடுத்த விடுமுறையில் கோவைக்கு செல்கையில் தான் அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
அதுவரை இங்கிலாந்து வெயிலை எதிர் நோக்கி நான்.
வெயிலின் அருமை நிழலில்.......

No comments:

Post a Comment