Sunday, 6 February 2011

கொங்கு தமிழ் வாசம்

துள்ளுதமிழ்த் தேடிக்கொண்டிருந்த வேளையில் என் நெஞ்சிற்கினிய கொங்குதமிழ் என்னைத் தழுவிற்று. கீழ்காணும்ச் சுட்டியில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள கொங்கு வட்டார வழக்குச் சொற்கள் என்னை பல்லாயிரம் மைல்களைக் கடந்து கோவை தெருக்களில் விட்டுவிட்டதைப் போன்றதொரு உணர்வு.

http://konguvaasal.blogspot.com/2007/07/blog-post_25.html#links

ஒவ்வொரு வார்த்தையைப் படிக்கும் பொழுதும் அதை யாரிடத்தில்க் கேட்டேனோ அந்த நினைவுகள் வலியச்  சென்று ஆழ் மனதில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்கின்றன. அண்மையில் என் கொங்குதமிழ் வாசம் வீசுகிறது. நுகர்கிறேன். அது தரும் பழைய நினைவுகளைப்  பருகுகிறேன். போதைத் தருகிறது. அனுபவிக்கிறேன். இந்த உணர்வு புதுமையானது. தென்றலை நேரில் நின்று அனுபவிப்பது ஒரு சுகம். அதே தென்றல் மனதினுள் வருடுவது முற்றிலும் புதிய சுகம்.
இன்னும் என் தெருக்களில் பயணித்துக் கொண்டு இருக்கிறேன், பழைய நினைவுகளை அசை போட்டபடி. இது கொங்கு நினைவுகள். அதை கோர்க்கிறேன் ஒரு மாலையாக. அது பின்வரும் காட்சியாக விரிகிறது."சித்த இரு கண்ணு. நான் மேலுக்கு தண்ணி வாத்துட்டு இதா வந்தர்றேன். நீ சீராடாம வட்டல கொண்டு வை கண்ணு சோறு உங்கலாம்"னு ஆத்தா பாத்துரூம்புக்குள் நுழைகிறாள்.
"அரமாலும் கொஞ்சமா திங்கிறியே கண்ணு. நல்லா உண்டாத்தான வலுவிருக்கும்"னு கரிசனம் காட்டுகிறார் தாத்தன்.


ஆத்தாவும் தாத்தாவும் பழமை பேசுகிறார்கள்.
"சின்னக்கண்ணு பண்ணாடி சனிக்கெழம பொழுதோட தான் வருவாரு. அவீய வர்ற வரைக்கும் புள்ள தனியாத்தான இருக்கும். அதான் ஒரே வெசனமா இருக்கு. அன்னாடும் இங்க வந்துட்டு போறதுக்கு ஆகுமா "
அப்போ சிறுசு ஒன்று கண்ணை கசக்கி கொண்டு வருகிறது.
"ஆத்தா ராஜேசண்ணன் அச்சு முருக்க புடுங்கிட்டு கொக்காணி காட்டுது ஆத்தா"  விக்கி விக்கி அழுதுகொண்டே.
"சரி சரி எஞ்சாமி. போச்சாது போ. நான் அவன என்னனு கேக்குறேன். டே ராசேசு. எண்டா புள்ள கூட ஒரியாடற. புள்ள பொக்குனு போச்சு பாரு. குடுறா புள்ள கிட்ட. அம்மா ஆள. நீ போய் வாங்கிக்க சாமி"


வாசலில் மணி மாமா
"ஏனம்மா ஐயன் இருக்கறாருன்களா?"
"வா மணி. வா சோறு உங்கலாம்"
"இல்லை இருக்கட்டுங்க. இன்னொரு நாள் சாவகாசமா வர்றேங்க"
"ஊட்டுல அம்மணி நல்லா இருக்குதா? சிட்டாளு?"
"நல்லா இருக்கறாங்க"
"பொறவு என்ன சமாச்சாரம்"
"ஒன்னுமில்லீங்க மேக்கால வீட்ல ஒரு சோலிங்க. பாதைக்கு குறுக்கால ஏதோ சாளை போட்டுட்டு எதுத்த வீட்டுக்காரன் பண்ணாட்டு பன்றானாமா. அதான் அய்யன கூட்டிட்டு போய் என்னனு கேக்கலாம்னு"
"அனாமத்த போகுதேன்னு அவன் பொழங்கரானா. அந்த கொல்லைல போறவன சீவக்கட்டைலயே போடோணும். போன வாரங்கூட தண்ணிய போட்டுட்டு இங்க வந்து ஒரே ரவுசு"
"அமாம்ங்க அவன் ஒரு மசையன். எந்நேரமும் ஒரே அக்கப்போரு"
"வெளிய வெய்ய காந்துது. கொடை எடுத்துட்டு போங்க. இந்தா வரும்போது சுருளு வாங்கிட்டு வாங்க. பொழுதானா சொள்ளை கடி தாங்கல"
கிளம்புமுன் தாத்தன் "டே சாமிகளா. ஒன்னுக்கொன்னு எசிரி போடாம பொட்டாட்டம் தூங்கோனும். என்ன?" என்று விட்டு கிளம்புகிறார்.


"என்ன ஆத்தா. தாத்தன் எங்கியோ போகுது?" கேட்டு கொண்டே வருகிறார் பாப்பாத்தி அக்கா.
"தாத்தனுக்கு சோலியிருந்தா கெட தங்குமா?"
"ரேசன் கடைல இன்னைக்கு சீமத்தண்ணி ஊத்தறாங்கத்தா. நீ வரல?"
"அடே மறந்தே மறந்துட்டேன். செத்த இரு. ஓட்டுக்க போகலாம்"
"சீல புதுசா?"
"அக்காமாத்தா எங்க மச்சாண்டார் பெஞ்சாதி நோம்பிக்கு எடுத்து குடுத்திச்சி. சரி இந்தாத்தா கோசாபழம்"
"இது ஏது"
"நம்ம அம்மிணியக்கா கடையில வாங்கியாந்தேன்"
"இந்த கீரைக்கார அம்மிணிய பாத்தியா?"
"இல்லையாத்தா அவளுக்கென்ன நோக்காடோ இன்னிக்கி காணோம்"
"தண்ணி வந்துதே இன்னிக்கு. புடுச்சி வெச்சுட்டியா?"
"ஆங். மூணு தோண்டில சாலுலயும் புடுச்சிட்டேன்."
அப்பொழுது பின்னொரு சிறுசு அருவாமனை அருகில் செல்ல
"டே சாமி. அருவாமனை. அக்கட்ட போ" என்று அதட்டுகிறாள்.

நினைவு கலைகிறது. காட்சி அகல்கிறது. கண்களில்த் துளிர்த்த கண்ணீர் நான் அடக்கியமையால் நெஞ்சினுள் நிறைகிறது.

இன்னும் பயணிக்கிறேன்.

அம்மா அடிக்கடி சொல்லும் "உம் பொறந்தவன கேளு"
கதிர் அண்ணனின் "மம்மானிய" தூக்கம்
பிரகாசின் "எத்தாச்சோடு வீங்கியிருக்கு"
மாமன் மகனில் நடுவலவன் ஜெகியின் "என்னடா உன்னோட ஒரே அக்கப்போரா இருக்கு"
அப்பாவின் "இந்த சொம்புல அண்ணாந்து குடிக்க முடியுதா"
பாட்டியின் "யாருடா இவன் திருவாத்தானா இருக்கான்"
தாத்தாவின் "மொள்ள சாமி மொள்ள"
ஆத்தாவின் "ராத்திரி பூரா ஒரே பெனாத்தலு"

இன்னும் ஏராளம் ஏராளம்.

இன்னும் நடந்துகொண்டே இருக்கிறேன் என் தெருக்களில்


கொங்கு தமிழ்க்கென்று ஒரு தனி அழகு. கொங்கு தமிழ் என்றில்லை, அனைத்து வட்டார மொழிக்கும் அதனுடைய தனிச்சிறப்பு என்றும் உண்டு. இன்று நகர்ப்புறத்தில் அது சற்று தொய்வடைந்த போதிலும் கிராமப்புறங்களில் அது தொன்மை மாறாமல் தான் இருக்கின்றது. திரைப்படங்களில் பெரும்பாலும் கொங்கு தமிழ் வழக்கு மிகுந்து வருவதில்லை. அதை கொடுக்க நினைப்பவர்களுக்கும் அதன் ஆக்கம் தெரிவதில்லை. வெறும் "லே" வருவதனால் மட்டும் அது நெல்லைத் தமிழ் ஆகாது. வெறும் "அங்கிட்டு இங்கிட்டு" திண்டுக்கல் தமிழ் ஆகாது. "வந்தாய்ங்க போனாய்ங்க" மதுரை தமிழ் ஆகாது. அது போல வெறும் "ங்க" மட்டும் கொங்குத்தமிழ் ஆகாது. கொங்கு மண்டலத்தை சேர்ந்த பலர் இருந்த போதிலும் குறிப்பிட்ட சிலரே அதன் வாசம் மாறாமல் காப்பாற்றுகின்றனர்.


கீழ்க்காணும் சுட்டியில் கமலஹாசனின் கற்றுணர்ந்த கொங்குதமிழை விட சரளாவின் வாழ்வோடு கலந்த கொங்குதமிழில் அதிக ஜீவன் இருப்பது தெரியும்.

மற்றும் ஒரு சரளாவின் கொங்கு தமிழ்

அதே போல் கவுண்டரும் மணிவண்ணனும் 


இலக்கியத்தில் கொங்கு தமிழை அதிகம் வாசித்ததில்லை. யாருக்கேனும் அதன் பரிச்சயம் இருந்தால் எனக்கு சற்று அறிமுகப்படுத்தமுடியுமா?

2 comments:

 1. கண்ணூ, நம்மூர்ப் பழமைகளை நெம்பப் பேரு எழுதீட்டுத்தா இருக்காங்க... நான் எழுதுனதியுங்கோட ‘ஊர்ப் பழமை’ங்ற பேர்ல புஸ்தகமாப் போட்டு இருக்குறாங்க நம்ப ஒறம்பரைக. போன வாரங்கூடா ஒரு கதை எழுதுனன்... இதழ்லயும் வந்திருக்கு...

  http://maniyinpakkam.blogspot.com/2011/10/blog-post.html

  பெருமாள் முருகன்
  கன்னிவாடி சிவகுமார்
  சிற்பி

  இவங்க அல்லாம் பெரிய கொங்கு எழுத்தாளருக கண்ணூ!!

  ReplyDelete
 2. இந்த பக்கத்துக்கு வந்து பின்னூட்டம் போட்டதுக்கு நெம்ப நன்றிங்கணா.. உங்க கதைய படிச்சனுங்க.. வெசனமா இருந்ததுங்க.. அருமைங்க... என்னதான் சொல்லுங்க.. நம்ம வட்டார வழக்கு அழகே தனிங்க.. இன்னும் நெறைய எழுதுங்கண்ணா.. வாழ்த்துக்கள்...கொங்கு எழுத்தாளருங்கள அறிமுக படுத்துனதுக்கும் நெம்ப நன்றிங்க..

  ReplyDelete